துணை ராணுவப் படைகளுக்கு, பெண்கள் மற்றும் ஆண்கள் என, 62 ஆயிரத்து, 390 போலீசாரை தேர்வு செய்ய, மத்திய அரசு திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது.
வயது வரம்பில் சலுகை:மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சி.ஆர்.பி.எப்.,), எல்லை பாதுகாப்புப் படை (பி.எஸ்.எப்.,), மத்திய தொழிலக பாதுகாப்பு படை (சி.ஐ.எஸ்.எப்.,), தேசிய புலனாய்வு நிறுவனம் (என்.ஐ.ஏ.,), இந்தோ - திபெத் எல்லை போலீஸ் படை (ஐ.டி.பி.பி.,), சாஸ்திர சீமா பல் (எஸ்.எஸ்.பி.,), அசாம் ரைபிள், செயலக பாதுகாப்பு படை (எஸ்.எஸ்.எப்.,) போன்ற மத்திய துணை ராணுவப் படைகளுக்கு, ஆண்கள் மற்றும் பெண்கள் என, 62 ஆயிரத்து, 390 போலீசாரை தேர்வு செய்ய, மத்திய உள்துறை அமைச்சகம் திட்டமிட்டு, அதற்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இந்த போலீஸ் தேர்வில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், தாழ்த்தப்பட்டோர் மற்றும் மலைவாழ் பழங்குடியினருக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்படுவதோடு, குஜராத்தில், 2002ம் ஆண்டில் நிகழ்ந்த கலவரம் மற்றும் 1984ம் ஆண்டில், டில்லியில் சீக்கியர்களுக்கு எதிராக நடந்த கலவரம் போன்றவற்றில், உயிரிழந்தவர்களின் வாரிசுகளுக்கு, வயது வரம்பில் சலுகையும் அளிக்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக, மத்திய உள்துறை அமைச்சக உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: துணை ராணுவப் படை மற்றும் அது சார்ந்த படைகளுக்கு, பெரிய அளவில் போலீசாரை தேர்வு செய்யும் பணி, தற்போது நடைபெற உள்ளது. துணை ராணுவப் படையினரின் செயல்பாடுகள் அதிகரித்துள்ளதாலும், அந்தப் படைகளின் பட்டாலியன்கள் எண்ணிக்கையை அதிகரிக்க, சமீபத்தில், மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதாலும், 62 ஆயிரத்து, 390 போலீசார் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
8,500 இடங்கள் பெண்களுக்கு... :
இந்த போலீசாரை தேர்வு செய்வதற்கான தேர்வை, பணியாளர் தேர்வு ஆணையமான - எஸ்.எஸ்.சி., மேற்கொள்ள உள்ளது. தேர்வு செய்யப்பட உள்ள, 62 ஆயிரத்து, 390 போலீசாரில், பெண்களுக்காக, 8,500 இடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன. போலீசாரை தேர்வு செய்வது, எழுத்துத் தேர்வு, உடல் தகுதி மற்றும் மருத்துவப் பரிசோதனை என, மூன்று கட்டமாக நடைபெற உள்ளது. தேர்வில் பங்கேற்பவர்களுக்கான கல்வித் தகுதி, 10ம் வகுப்பு தேர்ச்சி. வயது, 18 முதல், 23க்குள் இருக்க வேண்டும். போலீசாராக தேர்வு செய்யப்படுவோர், 20,200 ரூபாய் சம்பளமும், துணை ராணுவப் படையினருக்கான, இதர சலுகைகளையும் பெறலாம். வரும், அக்டோபர் மாதத்திற்குள், போலீசார் தேர்வு செய்யப்பட்டு, அடுத்த ஆண்டு முற்பகுதியில் பயிற்சிக்கு அனுப்பப்படுவர். இவ்வாறு, உள்துறை அமைச்சக அதிகாரி கூறினார்.
துணை ராணுவ படை காலியிடங்கள்
சி.ஆர்.பி.எப்., 24,588
பி.எஸ்.எப்., 22,517
என்.ஐ.ஏ., 86
சி.ஐ.எஸ்.எப்., 5,000
எஸ்.எஸ்.பி., 6,224
ஐ.டி.பி.பி., 3,101
அசாம் ரைபிள் 600
எஸ்.எஸ்.எப்., 274
மொத்தம் 62,390
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...