தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் குழந்தை மேம்பாட்டு
திட்ட அலுவலர் பணியில் காலியாக உள்ள 117பணியிடங்களை நிரப்புவதற்கான
அறிவிப்பு கடந்த ஆண்டு நவம்பர் 11ம் தேதி வெளியிடப்பட்டது.
இதற்கான எழுத்து
தேர்வு சென்னை மதுரை, கோவை மாவட்டத்தில் உள்ள 15 மையங்களில் நேற்று
நடந்தது. இத்தேர்வை 4,009 பேர் எழுதினர். சென்னையில் சைதாப்பேட்டை,
தண்டையார்பேட்டை, வில்லிவாக்கம், எருக்கஞ்சேரி ஆகிய பகுதியில் உள்ள
பள்ளிகளில் 6 மையங்களில் தேர்வு நடந்தது. சைதாப்பேட்டை ஜெயகோபால் கரோடியா
பெண்கள் மேல்நிலைபள்ளியில் நடந்த தேர்வை டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு)
பாலசுப்பிரமணியன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி சோபனா ஆகியோர் நேரில்
பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
இதனை தொடர்ந்து டிஎன்பிஎஸ்சி தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் அளித்த
பேட்டி: குழந்தை மேம்பாட்டு திட்ட அலுவலராக தேர்வு செய்யப்படுவோர்
அங்கன்வாடி பணிகளை மேற்பார்வையிடுவார்கள். கர்ப்பிணி பெண்களுக்கு அரசு
வழங்கும் திட்டங்கள் ஒழுங்காக சென்றடைகிறதா என்பதையும் இவர்கள்
கண்காணிப்பார்கள். அண்மையில் நடத்தப்பட்ட குரூப் 2 தேர்வுக்கான ரிசல்ட்
இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். அதே போல, கடந்த டிசம்பர் 21ம் தேதி
சுமார் 10.68 லட்சம் பேர் பங்கேற்ற குரூப் 4 தேர்வுக்கான ரிசல்ட் இன்னும்
ஒன்றரை மாதத்தில் வெளியிடப்படும். குரூப் 2ஏ பதவிக்கான 2ம் கட்டகவுன்சலிங்,
முதல்கட்ட கவுன்சலிங் முடிந்தவுடன் தொடங்கப்படும்.
குரூப் 2 தேர்வு(நேர்முக தேர்வு பதவி) காலியாக உள்ள 904 காலி பணியிடங்களை
நிரப்புவதற்கான அறிவிப்பு பிப்ரவரி 3வது வாரத்திலும், குரூப் ‘3ஏ‘ காலியாக
உள்ள 25 பணியிடத்தை நிரப்புவதற்கான அறிவிப்பு மார்ச் முதல் வாரத்திலும்,
சித்தா, ஆயுர்வேதா, யூனானி மருத்துவத்தில் காலியாக உள்ள 74 உதவி மருத்துவ
அதிகாரி மற்றும் இந்து அறநிலையத்துறையில் உதவி கமிஷனர், முதல்நிலை செயல்
அலுவலர் பணியில் காலியாக உள்ள 4 பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு
விரைவிலும் வெளியிடப்படும்.
குரூப் 4 பணியில் எத்தனை காலியிடங்கள் உள்ளன என்ற விவரம் இன்னும் வரவில்லை.
விவரம் வந்தவுடன் அதற்கான குரூப் 4 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வும்
நடத்தப்படும். இவ்வாறு பாலசுப்பிரமணியன் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...