Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

அரசாணை காணாமல் 30 ஆண்டுகளாக தேடும் அவலம்

       தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் பாதுகாப்பு கேள்விக்குறி:அரசாணை காணாமல் 30 ஆண்டுகளாக தேடும் அவலம்: ஆபத்தில் அரசு ஆவணங்கள்

            பெட்ரோலிய அமைச்சகத்தில், ரகசிய ஆவணங்கள் காணாமல் போன நிலையில், தமிழகத்திலும், ஏற்கனவே ஆவணங்கள் காணாமல் போய், 30 ஆண்டுகளாக தேடப்பட்டு வருவது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

அடிக்கடி தீப்பிடித்தும் :

ஆவணங்கள் காணாமல் போகின்றன. மாநில அரசு அலுவலகங்களிலும், பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளதால், தமிழக அரசு சிறப்பு கவனம் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.
டில்லி, சாஸ்திரி பவனில் உள்ள, பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சக அலுவலகத்தில் இருந்த, ரகசிய ஆவணங்கள் திருடப்பட்டு, தனியார் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததன் மூலம், 10 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு முறைகேடு நடந்துள்ளது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இது, நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


இந்நிலையில், தமிழகத்தில், மாநில அரசு அலுவலகங்களின் பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.வணிக வரித்துறையில், அரசாணைகள் காணாமல் போய், 30 ஆண்டுகளாக இன்னும் தேடப்பட்டு வருவதும், தற்போது தெரியவந்துள்ளது.வணிக வரித்துறையில், 1960 முதல், படிப்படியாக, 6,000 தற்காலிக பணியாளர் நியமிக்கப்பட்டனர். இவர்கள் பணியாற்றிய காலங்களில், அவ்வப்போது, அரசாணைகளும் வெளியிடப்பட்டன. இவர்கள் பணி நிரந்தரம் தொடர்பாக, உச்ச நீதிமன்றத்திற்கு வழக்கு சென்ற நிலையில், ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டிய நிலை வந்தது.அப்போது, அரசாணைகளைத் தேடிய போது, ஆவணங்கள் அனைத்தும் மாயமாகிவிட்டது தெரிய வந்தது. இதுவரை, அவை கண்டுபிடிக்கப்படவில்லை என, வணிக வரித்துறை உயர் அதிகாரிகளே ஒப்புக் கொள்கின்றனர்.

சென்னையில் உள்ள சமூக நலத்துறை அலுவலகத்தில், இரண்டு முறை ஆவணங்கள் தீப்பிடித்து எரிந்தன. அதில், முக்கிய ஆவணங்கள் அனைத்தும் எரிந்து சாம்பலாயின. இது, அனைவருக்கும் தெரிந்ததே. இதிலும், முறைகேடுகள் நடந்திருக்கலாம் என, சமூக ஆர்வலர்கள் சந்தேகம் எழுப்புகின்றனர்.இரண்டு நாட்களுக்கு முன், சென்னை, எழிலகத்தில் உள்ள பொதுப்பணித்துறை அலுவலக, பீரோவின் பூட்டை இரவில் உடைத்து, ஆவணத்தை திருட முயற்சி நடந்துள்ளது. ஆவணங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடந்தன.பொதுப்பணித் துறையில், மாநிலம் முழுவதும் பல்வேறு கட்டுமானப் பணிகள், ஏரிகள் சீரமைப்பு, கடலரிப்பு தடுப்பு பணிகள், கட்டுமானப் பணிகள் என, பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ஒப்பந்தம் விடப்படுகிறது. ஒப்பந்த ஆவணங்களை திருடவே இந்த முயற்சி நடந்துள்ளது என, கூறப்படுகிறது.

மாநிலம் முழுவதும், 25 ஆயிரத்துக்கும் மேலான அரசு அலுவலகங்கள் உள்ளன. இதில், பெரும்பாலான அலுவலகங்களில், ஆவணங்கள் வெளிப்படையாக, 'ரேக்'குகளில் முடக்கி வைக்கப்பட்டுள்ளன. அதிகாரிகளின் இருக்கைகள் முன், 'பைல்கள்' முடங்கிக் கிடப்பதையும் பார்க்க முடிகிறது. இதனால், ஆவணங்கள் திருட்டுக்கு நிறைய சாத்தியங்கள் உள்ளன.மாநகராட்சிகள், உள்ளாட்சி அமைப்புகள், உணவுப்பொருள் வழங்கல் துறை உள்ளிட்ட அரசுத் துறை இயக்குனரகங்களிலும், பல கோடி ரூபாய்க்கான ஒப்பந்தங்கள் கோருதல் நடந்து வருகிறது. இதிலும், ஆவணங்கள் திருடு போக வாய்ப்புள்ளது.அரசு அலுவலகங்களில், உதவியாளர்கள் இருந்தாலும், பெரும்பாலான அலுவலகங்களில் இரவுக் காவலர்கள இருப்பதில்லை. கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டிருந்தாலும், அவை ஏதும் செயல்படுகிறதா என, சரியான ஆய்வும் இல்லை.பெரும்பாலான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் காட்சிப் பொருளாகவே உள்ளன.

தமிழகத்தில், மத்திய அரசு அலுவலகங்கள் ஓரளவு பாதுகாப்பாக இருந்தாலும், மாநில அரசு அலுவலகங்களின் நிலை மோசமாகவே உள்ளது. டில்லி போன்றே, ஏற்கனவே அரசாணைகளைக் காணோம் என, 30 ஆண்டுகளாக தேடப்படுவது போன்றோ அடுத்தடுத்து நிகழ்வுகள் இனியும் நடக்காதிருக்க, மாநில அரசு சிறப்பு கவனம் செலுத்துவது அவசியத் தேவை.இல்லாவிட்டால், ஆவணங்கள் மாயமாவதோடு, அரசுக்கு பெரும் வருவாய் இழப்பும் ஏற்படும்.
கோவை, மதுரையில் நிலை என்ன:


தொழில் நகரான, கோவையில் மத்திய அரசு அலுவலகங்கள் சொந்த கட்டடத்தில் இயங்கினாலும், கலெக்டர் அலுவலகம், சார்பதிவாளர் அலுவலம், ஆர்.டி.ஓ., அலுவலகங்கள் என, பல அரசு அலுவலகங்கள், வாடகை கட்டடங்களில் செயல்படுகின்றன. இரவு காவலர்கள் இல்லை; ஆவண பாதுகாப்பு வசதியும் குறைவாக உள்ளன.

மதுரையில்
*மதுரை காமராஜ் பல்கலையில், வினாத்தாள், ஆவணங்கள் வைக்கும், 'ஸ்ட்ராங்க் ரூம்' பகுதிக்கு செல்ல, காவலாளி இருந்தாலும், கண்காணிப்பு கேமரா இல்லை. மதுரை கல்வி அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா இல்லை. மதுரை நெடுஞ்சாலைத்துறை அலுவலகங்களில், 15 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஆவணங்கள் அழிக்கப்படுகின்றன. இடைப்பட்ட காலத்தில், ஆவணங்கள் குப்பைபோல் தேங்குகின்றன. தேவைக்கு குறித்த ஆவணத்தை தேடி பிடிப்பது சிரமம். இங்கும் கண்காணிப்பு கேமராவும் இல்லை; வாட்ச்மேனும் இல்லை. பொதுப்பணித்துறை அலுவலகம், கலெக்டர் அலுவலகங்களிலும் கண்காணிப்பு கேமரா இல்லை. அனைத்து துறை ஆவணங்களையும் பாதுகாக்கும், ஆவண காப்பகம் அமைக்கும் கோரிக்கை கிடப்பில் உள்ளது.
* திண்டுக்கல் மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி, தலைமை அரசு மருத்துவமனை, எஸ்.பி., அலுவலகம், ஒன்றிய அலுவலகம், பத்திரப்பதிவு அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. ஆனால் அது செயல்படுகிறதா என்பது அதிகாரிகளுக்கு தெரியவில்லை. ஆர்.டி.ஓ., அலுவலகம், வட்டார போக்குவரத்து அலுவலகம், தாலுகா அலுவலகங்களில் கேமரா இல்லை.
* தேனி கலெக்டர் அலுவலக ஆவண வைப்பு அறையில் கேமரா இல்லை. ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா இருந்தாலும், தாலுகா, கல்வி, வட்டார போக்குவரத்து, மின்வாரியம், கருவூலம் உள்ளிட்ட, 54 அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா வசதி இல்லை.
* ராமநாதபுரம் மாவட்டத்தில் கலெக்டர், எஸ்.பி., அலுவலகங்கள், பத்திரப்பதிவு அலுவலகங்கள் உட்பட 450க்கும் மேற்பட்ட இடங்களில் கேமரா பொருத்தப்பட்டுள்ளது. தாலுகா, கல்வி, வட்டார போக்குவரத்து, மின்வாரியம், கருவூலம், கூட்டுறவு உட்பட 54 அலுவலகங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை. -
*சிவகங்கையில் கலெக்டர் அலுவலகத்தில் ஆவண காப்பகம், காவல்துறை குற்றப்பதிவேடு கூடமும் உள்ளன. கல்வித்துறை, மின் வாரியம், பொதுப்பணி அலுவலகங்களிலும் ஆவண வைப்பறைகள் செயல்படுகின்றன. பெரும்பாலும், இரவு நேர காவலாளிகள் இருப்பது இல்லை. விடுமுறையில் ஊழியர்கள் இருப்பது இல்லை. கண்காணிப்பு கேமரா பொருத்தப்படவில்லை.
* விருதுநகர் மாவட்ட அரசு அலுவலகங்களின் ஆவண பாதுகாப்பு அறைகளில், 
கண்காணிப்பு கேமரா இல்லை.
'தீப்பிடித்து மாயமாகும் ஆவணங்கள்'


''அலுவலகங்கள் இருக்கு; கம்ப்யூட்டர், ஆவணங்கள் இருக்கு; பாதுகாக்க சரியான நடைமுறை இல்லை. சமூக நலத்துறை அலுவலகத்தில், இரண்டு முறை தீ விபத்து நடந்தது. ஆவணங்கள் அழிந்தன. கலெக்டர் வீட்டுக்கு போலீஸ் பாதுகாப்பு இருக்கும்; ஆனால், கலெக்டர் அலுவலகத்துக்கோ, வருவாய்த்துறை அலுவலகங்களுக்கோ பாதுகாப்பு இல்லை... அரசு அலுவலகங்களின் பாதுகாப்பு கேள்விக்குறி தான்.
- ஆர். தமிழரசி, தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம்
கண்காணிப்பு அவசியம்:

''டில்லியில் ஆவணங்கள் மாயமானதை எச்சரிக்கையாக எடுத்துக் கொண்டு, மாநில அரசு, இனியாவது, அரசு அலுவலக பாதுகாப்பில் கவனம் செலுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்பி, இரவு பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும். கண்காணிப்பு கேமரா செயல்படுகிறதா என, கவனிக்க வேண்டியது அவசியம்.
- டாக்டர் ரவீந்திரநாத், சமூக சமத்துவத்துக்கான 
டாக்டர்கள் சங்கம்:


இரவு பாதுகாவலர்கள் இல்லை''அரசின் முக்கிய துறைகளான வணிகவரி, பத்திரப்பதிவு அலுவலகங்களில் கூட இரவு பாதுகாவலர்கள் இல்லை. 45 சதவீத இடங்கள் காலியாகவே உள்ளன. வரி நிலுவை கோப்புகள் மாயமாக வாய்ப்பு
உள்ளது. இனியாவது, அரசு இதில் கவனம் செலுத்தும் என, நம்புகிறோம்.
- என்.ஜனார்த்தனன், வணிக வரித்துறை சங்கங்களின் கூட்டமைப்பு
தீர்வு என்ன:

* ஆவணங்களை உரிய முறையில் பாதுகாக்க போதிய வசதிகள் செய்ய வேண்டும்.
* கண்காணிப்பு கேமரா செயல்பாட்டை உறுதி செய்ய வேண்டும்.
* வாடகை கட்டடத்தில் இயங்கும் அலுவலகங்களை அரசு கட்டடத்துக்கு மாற்ற வேண்டும்.
* காலியாக உள்ள இரவு காவலர் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.
- சுங்கத்துறை அதிகாரி, கோவை.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive