நெல்லை மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட
சத்துணவு மையங்களை மூடுவதற்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால்
சத்துணவு ஊழியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். நெல்லை மாவட்டத்தில் சுமார் 2
ஆயிரம் சத்துணவு மையங்கள் உள்ளன. ஒரு மையத்திற்கு சத்துணவு அமைப்பாளர்,
சமையலர், உதவியாளர் என 3 பேர் பணியில் இருக்க வேண்டும்.
மாநிலம் முழுவதும் சத்துணவு
மையங்களில் ஆயிரக்கணக்கான காலி பணியிடங்கள் உள்ளன. நெல்லை மாவட்டத்தில்
மட்டுமே 1500க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள் உள்ளன. இந்நிலையில் தமிழக
அரசின் உத்தரவு எதுவும் இன்றி நெல்லை மாவட்டத்தில் 25க்கும் குறைவான
மாணவர்கள் உள்ள பள்ளிக்கூடங்களில் சத்துணவு மையங்களை மூட முடிவு
செய்யப்பட்டுள்ளது.
மாவட்ட கலெக்டரின் நேர்முக
உதவியாளர்(சிறுசேமிப்பு) நெல்லை மாவட்டத்தில் உள்ள 10 ஊராட்சி ஒன்றியம்
மற்றும் மாநகராட்சி ஆணையாளருக்கு சமீபத்தில் இதுகுறித்து ஒரு சுற்றறிக்கை
அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கை படி 25 மாணவர்களுக்கு குறைவாக உள்ள
பள்ளிகளை கணக்கெடுத்து, அங்குள்ள சத்துணவு மையங்களை மூட கேட்டு
கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி பாளை ஊராட்சி ஒன்றியத்தில் மட்டுமே 30க்கும்
மேற்பட்ட சத்துணவு மையங்கள் மூடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இந்த தகவல்
சத்துணவு ஊழியர்கள், அமைப்பாளர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு மூடுவதால் ஏற்கனவே ஊழியர்கள்
பற்றாக்குறையால் திணறும் சத்துணவு திட்டத்தில் மேலும் குழப்பம் ஏற்பட
வாய்ப்புள்ளது. மூடப்படும் மையங்கள் உள்ள பள்ளி மாணவர்களுக்கு மற்ற
மையங்களில் இருந்து ஊழியர்கள் தலைச்சுமையாக சுமார் 5 கிலோ மீட்டர் தூரம்
உணவை எடுத்து செல்ல வேண்டியது வரும். அங்குள்ள அமைப்பாளர், சமையலர்,
உதவியாளர்களுக்கான மாற்றுப்பணி அறிவிக்கப்படவில்லை. இதுகுறித்து தமிழக
சத்துணவு ஊழியர்கள் சங்க மாநில செயலாளர் ராஜூ கூறுகையில், ‘‘நெல்லை
மாவட்டத்தில் 300க்கும் மேற்பட்ட சத்துணவு மையங்களை மூட
முடிவெடுத்திருப்பது தன்னிச்சையான செயலாகும்.
அரசாணை பிறப்பிக்கப்படாத நிலையில், கலெக்டரின்
நேர்முக உதவியாளரே இதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். மேலும்
சத்துணவு மேலாளர்கள் கூட்டம் சிலசமயங்களில் இரவு 9 மணி வரை
நடத்தப்படுகிறது. இதனால் பெண் ஊழியர்கள் இரவு நேரத்தில் பஸ் கிடைக்காமல்
திண்டாடுகின்றனர். மாவட்ட நிர்வாகம் அனுப்பியுள்ள சுற்றறிக்கையை ரத்து
செய்யக்கோரியும், நேர்முக உதவியாளர்(சத்துணவு) நடவடிக்கைகளை கண்டித்தும்
வரும் 23ம் தேதி மாலை 4 மணிக்கு நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு
ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளோம்’’ என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...