வருகிற 2015-16 கல்வியாண்டுக்கான பொறியியல் கலந்தாய்வுக்கு 2.4 லட்சம் விண்ணப்பங்களை அச்சடிக்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது.
கடந்த ஆண்டைப் போலவே மே மாதம் முதல் வாரத்தில் விண்ணப்ப விநியோகத்தைத்
தொடங்கி, ஜூன் கடைசி வாரத்தில் கலந்தாய்வைத் தொடங்கவும் கூட்டத்தில் முடிவு
எடுக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் உள்ள 530-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகளில் 1
லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமான அரசு ஒதுக்கீட்டு பி.இ., பி.டெக்.
இடங்கள் உள்ளன. இந்த இடங்களில் மாணவர் சேர்க்கைக்கான ஒற்றைச் சாளர
கலந்தாய்வை சென்னை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.
வருகிற 2015-16 கல்வியாண்டுக்கான ஒற்றைச் சாளர கலந்தாய்வை அண்ணா
பல்கலைக்கழகம் நடத்த உள்ளது. இந்தக் கலந்தாய்வு வழக்கம்போல் சென்னையிலேயே
நடைபெற உள்ளது.
இதற்கான ஏற்பாடுகள் குறித்து விவாதிப்பதற்கான கலந்தாய்வு ஒருங்கிணைப்புக்
குழுவின் முதல் கூட்டம் துணைவேந்தர் ராஜாராம் தலைமையில் பல்கலைக்கழக
வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் உயர் கல்வித் துறைச் செயலர்
செல்வி அபூர்வா, பல்கலைக்கழக பதிவாளர் கணேசன், தமிழ்நாடு பொறியியல் மாணவர்
சேர்க்கைச் செயலர் ரைமண்ட் உத்தரியராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ரைமண்ட் உத்தரியராஜ் கூறியது:
2015-16 பொறியியல் கலந்தாய்வை கடந்த ஆண்டைப் போலவே, ஜூன் கடைசி வாரத்தில்
தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மே முதல் வாரம் முதல் விண்ணப்ப விநியோகம்
தொடங்கப்படும். கலந்தாய்வு ஜூலை 31-ஆம் தேதிக்கு முன்னதாகவே
முடிக்கப்பட்டு, ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் பொறியியல் முதலாமாண்டு வகுப்புகள்
தொடங்கப்பட்டு விடும்.
வழக்கம்போல், தமிழகம் முழுவதும் உள்ள 530 பொறியியல் கல்லூரிகளில்
இடம்பெற்றுள்ள 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் அதிகமான பி.இ., பி.டெக்.
இடங்கள் கலந்தாய்வில் இடம்பெறும்.
மேலும், கடந்த ஆண்டுகளில் ஏராளமான நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் காலியாக
இருப்பதால் பல கல்லூரிகள் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை கலந்தாய்வு மூலம்
நிரப்ப சரண் செய்யப்படுகிறது.
இதை அடிப்படையாகக் கொண்டு மொத்தம் 2.4 லட்சம் விண்ணப்பங்கள் அச்சடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வை எத்தனை நாள்கள் நடத்துவது, எப்போது தொடங்குவது என்பன உள்ளிட்ட
முடிவுகள் ஒருங்கிணைப்புக் குழுவின் அடுத்தக் கூட்டத்தில் முடிவு
செய்யப்படும். பள்ளி கல்வித் துறை, மருத்துவக் கல்வி இயக்குநர் அலுவலக
அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய பிறகே தேதிகள் இறுதி செய்யப்படும் என்றார்
அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...