தமிழகத்தில் இயங்கி வரும் 23 அரசு செவிலியர் பள்ளிகளில் 80 ஆசிரியர் பணியிடங்கள் ஓராண்டாக காலியாக உள்ளன.
மேலும் நான்கு பள்ளிகளில் முதல்வர் பணியிடங்களும் காலியாக உள்ளன. இந்த எண்ணிக்கை ஜூன் மாதத்தில் 10 ஆக உயரும் எனவும் கூறப்படுகிறது.
தமிழகத்தில் மொத்தம் 23 அரசு செவிலியர் பள்ளிகள் உள்ளன. இந்தப் பள்ளிகளில்
2,000 மாணவிகள் செவிலியர் பட்டயப் படிப்பு படித்து வருகின்றனர். இந்தப்
பள்ளிகளுக்கு 450 ஆசிரியர் பணியிடங்கள் உள்ளன. அவற்றில் சுமார் 80
பணியிடங்கள் தொடர்ந்து ஓராண்டாக காலியாக உள்ளன என ஆசிரியர்கள்
தெரிவித்தனர்.
10 பேருக்கு ஒரு ஆசிரியர்: அரசாணைப்படி முதல் மூன்று ஆண்டுகள் படிக்கும்
மாணவிகளில் பத்து மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட வேண்டும்.
நான்காம் ஆண்டு பயிற்சி பெறும் 50 மாணவிகளுக்கு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட
வேண்டும். ஆனால், அந்த விகிதப்படி ஆசிரியர் நியமனம் நடைபெறுவதில்லை.
அவ்வாறு நியமனம் நடைபெற்றால் சுமார் 200 காலியிடங்கள் ஏற்படும் எனக்
கூறப்படுகிறது.
பதவி உயர்வு: அரசு மருத்துவமனைகளில் பணியாற்றி மேற்கல்வி பயின்றவர்கள்
ஆசிரியர்களாகப் பதவி உயர்வு பெறுவார்கள். அவ்வாறு தகுதியான ஊழியர்கள் 170
பேர் காத்திருப்புப் பட்டியலில் உள்ளனர். அவர்களுக்குப் பதவி உயர்வு
அளித்தால்தான் இந்தப் பணியிடங்கள் நிரம்பும்.
இது குறித்து மருத்துவக் கல்வி அதிகாரிகள் கூறியது:
பதவி உயர்வு அளிப்பதற்கான பணிகளை மருத்துவப் பணிகள் இயக்குநரகம் மேற்கொள்ள
வேண்டும். அதற்கான பட்டியல் தயாரிக்கப்பட்டு ஏற்கெனவே
அனுப்பப்பட்டுவிட்டது. பதவி உயர்வு அளிக்கும் பணிகள் நிறைவடைந்துவிட்டால்,
முதலில் இடமாறுதலுக்கான கலந்தாய்வு நடத்தப்பட்டு, அதன் பின்பு பதவி உயர்வு
பெற்றவர்களுக்கான நியமனம் நடைபெறும். செவிலியர் பள்ளி முதல்வர்களுக்கான
நியமனத்துக்கான பணிகளும் நடைபெற்று வருகின்றன என்று அவர்கள் தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...