நிகழாண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வை 8.43 லட்சம் மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 10.72 லட்சம் மாணவர்களும் எழுத உள்ளதாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது.
பிளஸ் 2 தேர்வுக்கு 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை, 10-ஆம் வகுப்புத்
தேர்வுக்கு 5,200-க்கும் மேற்பட்டவர்கள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட
உள்ளதாகவும் அந்த இயக்ககம் தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:
பிளஸ் 2 பொதுத்தேர்வு மார்ச் 5 முதல் 31-ஆம் தேதி வரையிலும், 10-ஆம்
வகுப்புத் தேர்வு மார்ச் 19 முதல் ஏப்ரல் 10-ஆம் தேதி வரையிலும் நடைபெற
உள்ளன. பிளஸ் 2 தேர்வில் 6,256 பள்ளிகளிலிருந்து 8 லட்சத்து 43 ஆயிரத்து 64
மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வில் 11,827 பள்ளிகளைச் சேர்ந்த
10,72,691 மாணவர்களும் பங்கேற்க உள்ளனர்.
பிளஸ் 2 தேர்வை 16,947 மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 33,816 மாணவர்களும் நிகழாண்டு கூடுதலாக எழுதுகின்றனர்.
60,000 மாணவிகள் அதிகம்: நிகழாண்டு பிளஸ் 2 தேர்வை 3,90,753 மாணவர்களும்,
4,52,311 மாணவிகளும் எழுத உள்ளனர். மாணவர்களை விட மாணவிகளின் எண்ணிக்கை 60
ஆயிரம் அதிகமாக உள்ளது. 10-ஆம் வகுப்புத் தேர்வில் மாணவர்களின் எண்ணிக்கை
அதிகமாக உள்ளது. 5,40,505 மாணவர்களும், 5,32,186 மாணவிகளும் தேர்வு எழுத
உள்ளனர். 10-ஆம் வகுப்பில் தனித்தேர்வர்களாக 50,429 பேரும், பிளஸ் 2
தேர்வில் 42,963 பேரும் எழுதுகின்றனர்.
பிளஸ் 2 தேர்வுக்காக 2,377 தேர்வு மையங்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வுக்காக 3,298 தேர்வு மையங்களும் அமைக்கப்பட உள்ளன.
77 சிறைவாசிகள்: நிகழாண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வை புழல் சிறைவாசிகள் 77 பேர்
எழுதுகின்றனர். 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை 241 சிறைவாசிகள்
எழுதுகின்றனர்.
தமிழ் வழியில்... பிளஸ் 2 தேர்வை 5,50,000 பேரும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 7,30,000 பேரும் தமிழ் வழியில் எழுதுகின்றனர்.
கூடுதல் நேரம்: இந்தத் தேர்வுகளில் கற்றலில் குறைபாடுடையவர்கள்,
பார்வையற்றோர், காதுகேளாதோர், வாய் பேசாதோர் உள்ளிட்ட
மாற்றுத்திறனாளிகளுக்கு தேர்வு எழுதும் உதவியாளர், ஒரு மொழிப்பாடம்
தவிர்ப்பு, கூடுதலாக ஒரு மணி நேரம் போன்ற சலுகைகள் வழங்கப்பட்டுள்ளன.
இவர்களுக்கு தனி அறைகளை ஒதுக்கீடு செய்வும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.
விடைத்தாள்களைக் கொண்டுவர ஏற்பாடு: கடந்த ஆண்டைப் போலவே, தேர்வு
மையங்களுக்கு வினாத்தாள்கள் நான்கு சக்கர வாகனங்களில் கொண்டு செல்லப்பட்டு,
அதே வாகனங்களில் விடைத்தாள் கட்டுகளை மாவட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள
விடைத்தாள் கட்டுகள் சேகரிக்கும் மையங்களுக்குக் கொண்டுசெல்ல ஏற்பாடு
செய்ப்பட்டுள்ளது.
வினாத்தாள் கட்டுகள் வைக்கப்பட்டுள்ள மையங்களில் 24 மணி நேரமும் ஆயுதம்
தாங்கிய போலீஸ் பாதுகாப்பு போடப்படும். மாவட்டங்களில் மாவட்ட ஆட்சியர்,
காவல் கண்காணிப்பாளர் ஆகியோரால் குழு ஏற்படுத்தப்பட்டு, கூடுதல்
கண்காணிப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.
பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகளுக்கு தேர்வு கண்காணிப்புப் பணிகளுக்காக
மாவட்டங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இவர்கள் அந்தந்த
மாவட்டங்களிலிருந்தும், முக்கியப் பாடங்களுக்கு சென்னை உள்ளிட்ட
மாவட்டங்களில் அண்ணாப் பல்கலைக்கழக பேராசிரியர்களும் சிறப்புப்
பார்வையாளர்களாக கண்காணிப்புப் பணியில் ஈடுபட உள்ளனர்.
சென்னையில்... சென்னை மாவட்டத்தில் பிளஸ் 2 தேர்வை 144 தேர்வு மையங்களில்
53 ஆயிரம் மாணவர்களும், 10-ஆம் வகுப்புத் தேர்வை 209 தேர்வு மையங்களில் 57
ஆயிரம் மாணவர்களும் எழுத உள்ளனர்.
புதுச்சேரியில்... புதுச்சேரியில் 33 தேர்வு மையங்களில் 14 ஆயிரம் மாணவர்கள் பிளஸ் 2 தேர்வு எழுதுகின்றனர்.
10-ஆம் வகுப்புத் தேர்வை 48 தேர்வு மையங்களில் 19 ஆயிரம் மாணவர்கள் எழுதுகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...