மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 129 உதவி
மற்றும் இணை பேராசிரியர்கள் நியமனம் பல்கலைக்கழக மானியக்குழு விதிப்படி
நடந்ததா என்பது குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய லஞ்ச ஒழிப்பு
போலீஸாருக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரையைச்சேர்ந்த இஸ்மாயில் தாக்கல் செய்த
மனுவை விசாரித்த நீதிபதிகள் எஸ்.தமிழ்வாணன்,வி.எஸ்.ரவி ஆகியோர் அடங்கிய
அமர்வு இவ்வாறு உத்தரவிட்டது.
பல்கலைக்கழகத்தில் 2008 ஆம் ஆண்டுமுதல் 2011
வரையில் கற்பககுமாரவேல் துணைவேந்தராக பணியாற்றிய போது, 129 உதவி மற்றும்
இணைப் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நடந்துள்ளது குறித்து
விசாரணை நடத்த உத்தரவிடுமாறு இஸ்மாயில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.
இவ்வழக்கில் லஞ்சஒழிப்பு போலீஸார் விசாரிக்க ஏற்கெனவே நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
போலீஸார் கடந்தமுறை ஒரு அறிக்கை தாக்கல்
செய்தனர். அதில், முறைகேடுகள் நடந்துள்ளதாக குறிப்பிட்ட போலீஸார், லஞ்சம்
பெறப்பட்டதா என்பதை உறுதி செய்ய முடியவில்லை எனத் தெரிவித்திருந்தனர்.
இதையடுத்து விரிவான விசாரணை நடத்தி அறிக்கை
தாக்கல் செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்நிலையில் வியாழக்கிழமை போலீஸார்
மேலும் ஒரு அறிக்கை தாக்கல் செய்தனர். அதில், பேராசிரியர்கள் நியமனத்தில்
லஞ்சம் பெறப்பட்டதா? என்பது குறித்து விரிவாக விசாரித்தோம்.
அந்த குற்றச்சாட்டில் உண்மை இல்லை எனத்
தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளனர். ஆனால், விதிகளின் படி
நியமிக்கப்பட்டனரா என்பது குறித்து, நீதிமன்றம் அனுமதித்தால் விசாரிப்பதாக
தெரிவித்தனர்.
இதையடுத்து பல்கலைக்கழக மானியக்குழு
விதிகளின் படி பேராசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனரா என்பது குறித்து
விசாரிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...