அனைத்துப் பள்ளி மாணவர்களுக்கும் பிப்வரி 10-இல் குடல் புழு நீக்க மருந்து
வழங்கப்பட வேண்டும் என பள்ளிக் கல்வி இயக்ககம் உத்தரவிட்டுள்ளது.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி
அலுவலர்களுக்கும் பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் வெள்ளிக்கிழமை
அனுப்பிய சுற்றறிக்கையின் விவரம்:
சுகாதாரத் துறை சார்பில் 1 முதல் 19 வயதுக்குள்பட்ட அனைத்து
குழந்தைகளுக்கும் தேசிய குடல் புழு நீக்க நாள் பிப்ரவரி 10-ஆம் தேதி
அனுசரிக்கப்படுகிறது. இதையடுத்து, அனைத்துக் குழந்தைகளுக்கும் குடல் புழு
நீக்க மருந்து (அல்பெண்டசோல்) பிப்ரவரி 10-ஆம் தேதி வழங்கப்படுகிறது.
குடல் புழு நீக்கத்தால் குழந்தைகளுக்கு ரத்த சோகை நோய் தடுக்கப்படுகிறது.
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து சுறுசுறுப்பாக இருக்க உதவுகிறது என்பதை
தலைமை ஆசிரியர்கள் மாணவ, மாணவியருக்கு தெரியப்படுத்த வேண்டும்.
மாத்திரைகளை எப்போது வழங்க வேண்டும்? மாணவர்களுக்கு அல்பெண்டசோல்
மாத்திரையை மதிய உணவு சாப்பிட்ட பின்பு ஒரு மணி நேரம் கழித்து வழங்க
வேண்டும். குழந்தைகளுக்கு அல்பெண்டசோல் மாத்திரை கொடுத்து, நன்றாக சப்பிய
பிறகு மென்று சாப்பிடுமாறு அறிவுறுத்த வேண்டும். அதை ஆசிரியர்கள் நேரடியாக
மேற்பார்வையிட வேண்டும். தேவைப்பட்டால், சிறிதளவு தண்ணீர் தர வேண்டும்.
மாணவர்கள் மாத்திரைகளை மென்று உட்கொள்வதற்கு, சுத்தமான குடிநீர் வசதி
இருப்பதை உறுதிசெய்ய வேண்டும்.
நோய்வாய்ப்பட்ட குழந்தைகளுக்கு மாத்திரையை வழங்கக் கூடாது. மாத்திரையை
அப்படியே விழுங்கச் செய்யக் கூடாது. குழந்தைகளிடமோ, பெற்றோர்களிடமோ, குடல்
புழு மாத்திரையை வீட்டுக்குக் கொடுத்தனுப்பக் கூடாது.
விடுபட்ட குழந்தைகளுக்கஹான சிறப்பு முகாம் பிப்ரவரி 13-ஆம் தேதி
நடைபெறுகிறது. இந்த மாத்திரை அனைத்து குழந்தைகளுக்கும் பாதுகாப்பானது
என்றாலும், அதிகமாக குடல் புழு இருக்கும் குழந்தைகள் இந்த மருந்தை
உட்கொள்ளும்போது லேசான மயக்கம், குமட்டல், வாந்தி, தலைவலி, வயிற்று வலி
போன்ற பொதுவான பக்க விளைவுகள் ஏற்படலாம். அவ்வாறு ஏற்பட்டால், திறந்தவெளி,
காற்றோட்டமானப் பகுதியில் படுக்க வைக்க வேண்டும். சுத்தமான குடிநீர், உப்பு
சர்க்கரைக் கரைசல் கொடுத்து கண்காணிக்க வேண்டும். பக்க விளைவுகள்
அதிகமானாலோ அல்லது தொடர்ந்து இருந்தாலோ, அருகில் உள்ள மருத்துவமனைக்குக்
கொண்டுசெல்ல வேண்டும். மருத்துவ அலுவலர், செவிலியர் செல்லிடப்பேசி எண்களை
தகவல் பலகையில் ஒட்டி வைத்திருக்க வேண்டும் என அதில்
தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...