தமிழகம் முழுவதும் 499 மையங்களில் நடைபெற்ற முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வில், 1 லட்சத்து 90 ஆயிரத்து 966 பேர்
தேர்வு எழுதினர். இந்த தேர்வில் முதல் முறையாக விடைத்தாளில் தேர்வாளரின்
புகைப்படம் மற்றும் பதிவெண் அச்சிடப்பட்டிருந்து.
தமிழகம் முழுவதும் உள்ள மேல்நிலைப் பள்ளிகளில் காலியாக உள்ள ஆயிரத்து 868
முதுகலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த நவம்பர் 7-ந்
தேதி ஆசிரியர் தேர்வு வாரியம்(டி.ஆர்.பி.) வெளியிட்டிருந்தது. இதற்கு
கடந்த நவம்பர் 10-ந் தேதி முதல் 26-ந் தேதி வரை விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
இந்த தேர்வுக்கு, தமிழகம் முழுவதும் இருந்து 2 லட்சத்து 2 ஆயிரத்து 257
பேருக்கு அழைப்பு கடிதங்கள்(கால் டிக்கெட்) அனுப்பப்பட்டிருந்தன. இதில், 1
லட்சத்து 90 ஆயிரத்து 966 பேர் நேற்று தேர்வு எழுதினார்கள்.
499 தேர்வு மையங்கள்
தமிழகம் முழுவதும் 499 தேர்வு மையங்களில், இந்த தேர்வு நடைபெற்றது. அந்தந்த
மாவட்ட கலெக்டர்கள் மற்றும் கல்வி அதிகாரிகளின் உதவியுடன் இந்த தேர்வு
நடத்தப்பட்டது. முதல் முறையாக, இந்த தேர்வு எழுதுபவர்களுக்கு வழங்கப்பட்ட
விடைத்தாளில்(ஓ.எம்.ஆர். ஷீட்) தேர்வாளர்களின் புகைப்படங்கள் மற்றும்
பதிவெண்கள் அச்சிடப்பட்டிருந்தன.
புகைப்படம் மற்றும் பதிவெண் அச்சிடப்பட்ட விடைத்தாள் வழங்கப்பட்டதால்,
மாற்று விடைத்தாள்கள் தேர்வு மையங்களுக்கு வழங்கப்படவில்லை. இந்த தேர்வு
நேற்று காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் இருக்கைகள்
இந்த தேர்வில் முதன்மை பாடத்தில் 110 மதிப்பெண்களுக்கும், கல்வி பயிற்சி
முறை தொடர்பாக 30 மதிப்பெண்களுக்கும், 10 மதிப்பெண்களுக்கு பொது அறிவு
கேள்விகளும் என மொத்தம் 150 மதிப்பெண்களுக்கு கேள்விகள்
கேட்கப்பட்டிருந்தன.
இந்த முறை ஒரு தேர்வு மையத்தில், ஒரே ஒரு முதன்மை பாடத்திற்கு
விண்ணப்பித்திருந்தவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தனர்.
மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் தரைத்தளத்தில் மட்டுமே இருக்கைகள்
ஒதுக்கப்பட்டிருந்தன.
மேலும், பார்வை இல்லாதவர்களுக்கு என துணைத்தேர்வர்களும்,
மாற்றுத்திறனாளிகளை இருக்கைகளுக்கு அழைத்து செல்வதற்கு என சிறப்பு
பணியாளர்களும் பணி அமர்த்தப்பட்டிருந்தனர். இந்த தேர்வை எழுதுவதற்கு
ஏராளமான பெண்கள் கைக்குழந்தைகளுடன் வருகை புரிந்திருந்தனர்.
வரலாறு பாடம் கடினமாக இருந்தது
இந்த தேர்வு எழுதியவர்களில், பொருளியல் தேர்வு எழுதியவர்கள் பெரும்பாலானோர்
தேர்வு எளிதாக இருந்ததாக தெரிவித்தனர். வரலாறு, வேதியியல் பாடத் தேர்வு
எழுதியவர்கள் பெரும்பாலானோர் தேர்வு சற்று கடினமாக இருந்ததாக தெரிவித்தனர்.
குறிப்பாக, வரலாறு பாடத்தில், தமிழக வரலாறு கேள்விகள் சற்று எளிதாக இருந்த
போதிலும், இந்திய வரலாறு மற்றும் ஐரோப்பிய வரலாறுகள் குறித்த கேள்விகள்
சற்று கடினமாக இருந்ததாக தெரிவித்தனர்.
அனைத்து தேர்வு மையங்களிலும், மாற்றுத்திறனாளிகளுக்கு தரைத்தளத்தில் இடம்
ஒதுக்கப்பட்டிருந்த நிலையில், சென்னை சூளை, ராட்லர் தெருவில் உள்ள சென்னை
பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மட்டும் முதலில் மேல் தளத்தில்
மாற்றுத்திறனாளிகளுக்கு இருக்கைகளை ஒதுக்கிவிட்டு, பின்னர் தேர்வு தொடங்கிய
பிறகு கீழ் தளத்திற்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனால், அந்த பள்ளியில்
தேர்வு எழுதிய மாற்றுத்திறனாளிகள் ¼ மணி நேரம் தாமதமாக தேர்வு எழுதியதாக
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...