"சிந்து சமவெளி நாகரிகம் வீழ்ச்சிக்குப் பின்,
அங்கிருந்த மக்கள், தென்னிந்தியாவில் குடியேறி இருக்கலாம்" என, தொல்லியல்
துறை மண்டல இயக்குனர் தயாளன் தெரிவித்தார்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலையில், கல்வெட்டியல்
மற்றும் தொல்லியல் துறை சார்பில் கருத்தரங்கம் நடந்தது. பல்கலை துணைவேந்தர்
திருமலை தலைமை வகித்தார்.
தமிழக பண்பாட்டில் சிந்துவெளி நாகரிகக் கூறுகள்
என்ற தலைப்பில், தொல்லியல் துறை மண்டல இயக்குனர் (மும்பை) தயாளன்
பேசியதாவது: தமிழகத்தில், தொல் பழங்கால தொல்லியல் இடங்கள் பல, காணக்
கிடைத்துள்ளன. இதன்மூலம், தொல் பழங்கால மக்கள், தமிழகத்தில் பரவலாக
வாழ்ந்துள்ளனர் என்பதையும், தமிழக நாகரிகம், தொல் பழங்காலத்தில்
துவங்குகிறது என்பதையும், அறிந்து கொள்ள முடிகிறது.
பழமையான நாகரிகம்
சிந்துவெளி நாகரிகம், தெற்கு ஆசியாவின் மிகப்
பழமையான நாகரிகம். இங்கு கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகளில் காணப்படும் கீறல்
குறியீடுகள், பானை செய்யும் முறை, வடிவம், ஈமச்சின்ன முறைகள், கருவிகள்,
கலைப்பொருள்கள் ஆகியவை, தமிழகத்தின் புதிய கற்கால மற்றும் பெருங்கற்காலப்
பண்பாடுகளுக்கும், சிந்துவெளி நாகரிகத்துக்கும் உள்ள தொடர்புகளை
புலப்படுத்துகின்றன.
குழிகளைத் தோண்டி வீடுகள் அமைத்ததற்கான ஆதாரம்,
காஷ்மீர், அரியானா மற்றும் தமிழகத்தில் உள்ள பையம்பள்ளியிலும்
கிடைத்துள்ளன. இதேபோன்ற வீடு, தொடக்க கால சிந்துவெளி பண்பாட்டிலும்
காணப்படுகிறது. முத்திரைகள், பானை ஓடுகளில் சிந்துவெளி நாகரிக எழுத்துகள்
காணப்படுகின்றன.
அது, எந்த மொழியில் எழுதப்பட்டுள்ளது என்பது
தெரியவில்லை. பல வகையான சிந்துவெளி நாகரிக தொல்பொருள்களைப் போன்ற
தொல்பொருள்கள், தமிழகத்தில் காணப்படுகின்றன.
வணிகத் தொடர்பு
தென்னிந்திய புதிய கற்கால நாகரிக மக்களுக்கும்,
சிந்துவெளி நாகரிக மக்களுக்கும் வணிகத் தொடர்பு இருந்தது. கர்நாடகா,
ஆந்திராவில் கிடைத்த மிகச் சிறிய மணிகள், மெலிதான தட்டை வடிவ மணிகள்,
சிந்துவெளி நாகரிக தொடர்பை காட்டுகின்றன. அமேசனைட் என்ற உயர் வகை கல்,
தமிழகத்திலிருந்து சிந்துவெளி நாகரிகத்துக்குச் சென்றிருக்கலாம் என
கருதப்படுகிறது.
குடிபெயர்வு
இதுபோன்ற ஆய்வுகள் மூலம், தமிழகத்தில் இருந்த
புதிய கற்கால நாகரிகத்துடன், சிந்துவெளி நாகரிகம் தொடர்பு கொண்டிருந்ததை
அறிய முடிகிறது. சிந்துவெளி நாகரிகம் வீழ்ச்சியுற்ற பின், அங்கிருந்த
மக்கள், தென்னிந்தியாவுக்கு குடி பெயர்ந்திருக்கலாம். இவ்வாறு அவர்
பேசினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...