Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கல்லூரி மாணவர்களின் மோதலை தடுக்க, முதல்வர்கள் கூறுவது என்ன?

              சென்னையில், கல்லுாரி மாணவர்கள் மோதலை தடுப்பது குறித்து சமீபத்தில் நடந்த மூன்றாவது முத்தரப்பு கூட்டத்தில், கல்லூரிகளில் அடிப்படை வசதிகள், பேராசிரியர்கள் நியமனம், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துதல், போக்குவரத்து ஏற்பாடுகளை சீர்செய்தல், ஆகிய கோரிக்கைகளை கல்லுாரி முதல்வர்கள் எழுப்பினர். 

             மூன்றாம் முறையாக... சென்னையில், ஐந்து கல்லூரிகளின் மாணவர் மோதலை தடுக்க, அரசு அறிவுறுத்தல்படி அமைக்கப்பட்ட, கல்லூரி, போலீஸ், போக்குவரத்து துறை ஆகிய முத்தரப்பின் மூன்றாவது மாதாந்திர கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், போக்குவரத்து துறையினர் பங்கேற்கவில்லை. கூட்டத்தில், போலீஸ் அதிகாரிகள் பேசியதாவது: கடந்த, மூன்று மாதங்களில், போலீஸ் ரோந்து அதிகரித்துள்ளது. மாணவர்கள் அதிகமாக கூடும் பெரம்பூர் பகுதியில், நிலைமையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.

           பிரச்னைக்குரிய, ஏதேனும் இரண்டு கல்லூரி மாணவர்களை ஒரே இடத்தில் கூட்டி, இதுபோன்ற கூட்டங்களை நடத்தினால், இன்னும் அதிக பயன் கிடைக்கும். பிரச்னைக்குரிய வழித்தடங்களை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம். பிரச்னைக்குரிய மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்களை பற்றிய அனைத்து விவரங்களையும் சேகரித்து வைத்துள்ளோம். பிரச்னை வருவதுபோல் தெரிந்தால், அவர்களை, எங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். மாநில கல்லூரி முதல்வர்: மாநில கல்லூரியில், 20 இடங்களில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றின் உதவியோடு, எனது அறையிலேயே, கல்லூரி வளாகத்திற்குள் நடப்பவற்றை கண்காணித்து வருகிறேன். இப்போது, நிலைமை கட்டுக்குள் உள்ளது. வாரத்தில் ஒரு நாள், இறைவணக்க கூட்டம் நடக்கிறது. 

           அதில், மாணவர்களுடன் உரையாடுவதையும் வழக்கமாக கொண்டிருக்கிறோம். நுண்கலை, விளையாட்டுகளை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம். கடந்த பொங்கல் விழாவில், பல்வேறு கலைகளை நிகழ்த்தி, மாணவர்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். இவ்வாறு, அவர்களுக்கு வாய்ப்புகளை வழங்கினால், கலவரங்கள் நடக்காது என, நம்புகிறேன். எம்.பில்., - பிஎச்.டி., மாணவர்களும், பஸ் பாஸ் வேண்டும் என கேட்கின்றனர். அதற்கு, போக்குவரத்து துறை வசதி செய்ய வேண்டும். புதுக்கல்லுாரி முதல்வர்: எங்கள் கல்லுாரியில், மூன்றாண்டுகளாக கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு, கண்காணிக்கப்படுவதால், கல்லூரி வளாகத்தில், அசம்பாவிதங்கள் நடைபெறுவதில்லை. மேலும், வகுப்புகளில், ஒழுக்கம் சார்ந்த அறநெறிகளையும், உடல்நலம் சார்ந்த அறிவுரைகளையும் அடிக்கடி கூறி வருகிறோம். எங்கள் கல்லூரியில், பஸ் டே கொண்டாட்டம் இல்லை. தியாகராஜா கல்லுாரி முதல்வர் (பொறுப்பு): எங்கள் கல்லூரியில், 89 பேராசிரியர்கள் இருக்க வேண்டும். ஆனால், 44 பேர்தான் இருக்கின்றனர். அப்படி இருக்கும்போது, எப்படி, மாணவர்களை நாங்கள் கண்காணிக்க முடியும்? எங்களின் பிரச்னை இதுதான். ஆயினும், அதிக நேரம், பேராசிரியர்கள் பணி செய்கின்றனர். எங்கள் கல்லுாரியில், வழிகாட்டி ஆசிரியர் முறை சிறப்பாக இருக்கிறது. அதனால், மாணவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை வழங்க முடிகிறது.

            எங்கள், கல்லுாரி அமைந்துள்ள தங்கசாலை பகுதியில், பல்வேறு கல்லுாரிகளின் மாணவர்கள் கூடுவதால், பிரச்னைகள் ஏற்படுகின்றன. அந்த பகுதியை, காவல் துறை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். பச்சையப்பன் கல்லுாரி முதல்வர்: கல்லுாரி வளாகத்தில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்துவதற்கான நிதியை, அறக்கட்டளை வழங்க முன்வரவில்லை. மாணவர்களும் அதை ஆட்சேபிக்கின்றனர். இருந்தும், முதல்வருக்கான தனி நிதியில் இருந்து, ஒரு வாரத்திற்குள், கண்காணிப்பு கேமரா பொருத்த திட்டமிட்டுள்ளேன். 783 மாணவர்களுக்கு, இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. கல்லுாரியில், அடிப்படை வசதிகள் இல்லை. இவற்றை சரி செய்தால், ஓரளவு மாணவர்களை கட்டுப்படுத்த முடியும். நந்தனம் கல்லுாரி முதல்வர்: இந்த கூட்டம், மாணவர்களுக்காக நடத்தப்படுகிறது. ஆனால், அலுவலர்கள்தான் பங்கு பெறுகிறோம். மாணவர்களும் பங்கேற்கும் வகையில், இதை அமைக்க வேண்டும். நந்தனம் கல்லுாரிக்கு, கண்காணிப்பு கேமராக்கள் வழங்கப்படவில்லை. ஆயினும், என் முயற்சியில் வாங்கி வைத்தேன். அது, திருடு போய் மீண்டும் கிடைத்து விட்டது. எங்கள் கல்லூரியின் முன், எல்லா பேருந்துகளும் நிற்பதில்லை. அதனால், மாநகர போக்குவரத்து ஊழியர்களுக்கும், மாணவர்களுக்கும் பிரச்னைகள் உருவாகின்றன. அதற்கு, உயர்கல்வி துறையும், போக்குவரத்து துறையும் தீர்வு காண வேண்டும். இவ்வாறு, அவர் பேசினார். இதற்கு பதிலளித்து, உயர்கல்வி துறை இயக்குனர் பேசியதாவது: போலீசாரின் ஆலோசனையின் அடிப்படையில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த வேண்டிய இடங்களை தேர்வுசெய்து சொன்னால், அதற்கான நிதியை பெற பரிந்துரைக்கிறேன். வழிகாட்டி ஆசிரியர்கள் மூலம் மாணவர்களிடம், நன்னெறி கருத்துக்களை எடுத்துக் கூறி, அவர்களுக்கு ஆலோசனை வழங்க வேண்டும். 

           ஆலோசகர்கள் தேவைப்பட்டால், காவல்துறையில் உள்ள மனநல ஆலோசகர்களை ஏற்பாடு செய்ய முடியும். புதிய திட்டம் தமிழகம் முழுக்க 1,094 உதவிப் பேராசிரியர்களை, விரைவில் நியமிக்க உள்ளோம். 83 அரசு கல்லூரிகள், 162 உதவிபெறும் கல்லூரிகளையும், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் இணைத்து, துணைவேந்தர் அறையில் இருந்து கண்காணிக்கும் வகையில் திட்டம் வகுக்கப்பட உள்ளது. அது, நடந்தால், பெருமளவு குற்றங்கள் தடுக்கப்படும். போக்குவரத்து பிரச்னைகள் குறித்து, அந்த துறை அதிகாரிகளுடன் பேசி முடிவு காணப்படும். இவ்வாறு, அவர் பேசினார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive