10 வகுப்பு பொது தேர்வில் 100 சதவீத தேர்ச்சி பெற சுமாராக படிக்கும்
மாணவர்களை வெளியேற்றிவிட்டு, பள்ளி ஆசிரியர்களே டுடோரியல் கல்லூரிக்கு
பரிந்துரைக்கும் அவலம் தொடர்கிறது.
விருதுநகர் மாவட்டம் 10ம் வகுப்பு,
பிளஸ்2 அரசு பொது தேர்வுகளில் பல ஆண்டுகளாக மாநில அளவில் முதலிடம் பெற்றது.
இரு ஆண்டுகளாக முதலிட தேர்ச்சியை தக்க வைக்க முடியவில்லை. வரும் பொது
தேர்வில் நூறு சதவீத தேர்ச்சி பெற பொது தேர்வு எழுதும் மாணவர்களுக்கு
சிறப்பு வகுப்புகள், ஆசிரியர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சிகளை பாட
வாரியாக நடத்துகின்றனர். தேர்ச்சி சதவீதம் குறையும் பள்ளி தலைமை
ஆசிரியர்கள், ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என
அச்சுறுத்துகின்றனர். இதில் மிரளும் தலைமை ஆசிரியர்கள் நூறுசதவீத இலக்கை
எட்டுவதற்கு தடையாக உள்ள சுமாரான மாணவர்களை பள்ளியில் இருந்து
வெளியேற்றுவதை சத்தம் இல்லாமல் செய்கின்றனர். இதற்காக மாணவர்களின்
பெற்றோர்களை பள்ளிக்கு வரவழைத்து மூலைச்சலவை செய்கின்றனர். ‘உடல்நிலை
சரியில்லை, வெளியூர் செல்கிறேன் என ஏதாவது ஒரு காரணத்தை கூறி கடிதம் எழுதி
கடிதம் கொடுங்கள். டி.சி., தருகிறோம். அருகில் உள்ள டுட்டோரியல்
கல்லூரியில் சேர்ந்து படித்தால் ஒரே முயற்சியில் பாஸ் செய்து விடுவார்.
அதன்பின் அடுத்த ஆண்டு பிளஸ் 1 வகுப்பில் விரும்பிய பாடத்தில் சேர்ந்து
படிக்க நல்ல வாய்ப்பு கிட்டும்’ என பெற்றோரிடம் பேசுகின்றனர். கூலி வேலை
செய்யும் பெற்றோர் தலைமை ஆசிரியரின் பேச்சை கேட்டு டி.சி., பெற்று
செல்கின்றனர். சிவகாசி நகராட்சியில் உள்ள ஒரு பள்ளியில் 10க்கு மேற்பட்ட
மாணவர்களை வெளி யேற்றி உள்ளனர். சிவகாசிக்கு அருகில் அரசு உதவிபெறும்
பள்ளியில் 4 மாணவிகள் வெளியேற்றப்பட்டுள்ளனர். வெளியேறும் மாணவர்கள் மனம்
வெறுத்து படிப்பில் இருந்தே ஒதுங்கும் மனநிலைக்கு செல்கின்றனர். மாணவர்களை
தேர்ச்சி பெற வைக்க தீவிர முயற்சி எடுப்பதை விட்டு சிரமம் இன்றி நன்றாக
படிக்கும் மாணவர்களை வகுப்பில் வைத்து தேர்ச்சி பெற வைத்து தப்பித்து
கொள்ளாம் என பள்ளி ஆசிரியர்கள் நினைப்பது மோசமான செயல். அரசு பள்ளி
ஆசிரியரே தனியார் டுட்டோரியல் கல்லூரிக்கு சென்று படிக்க வையுங்கள் என
கூறுவது கல்வி துறைக்கு அவமானமாக உள்ளது. பள்ளியில் இருந்து மாணவர்களை
வெளியேற்றும் நடவடிக்கைக்கு மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
விருதுநகர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார்,“ நூறு சதவீத
தேர்ச்சிக்காக எந்த மாணவரையும் பள்ளியில் இருந்து வெளியேற்ற கூடாது. பல
மாதங்களாக தொடர்ச்சியாக பள்ளிக்கு வராத மாணவர்கள் மீதுதான் நடவடிக்கை
எடுக்கப்பட்டிருக்கும். 10ம் வகுப்பு மாணவர்கள் பிப்ரவரி முதல் முறையாக
படித்தாலே தேர்ச்சி பெற்றுவிடலாம். இதுபோன்ற மாணவர்களுக்காகவே ஐந்து
பாடங்களுக்கும் சி.டி.,கொடுத்துள்ளோம். படம் பார்த்து படித்தாலே தேர்ச்சி
ஆகி விடுவர். தேர்ச்சி சதவீதத்திற்காக மாணவர்களை வெளியேற்றினால்
சம்மந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,”
என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...