Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

சுற்றுச்சூழல் விதிகளில் இருந்து பள்ளி, கல்லூரிகளுக்கு விலக்கு? மத்திய அரசின் புதிய திட்டம் விரைவில் அறிவிப்பு

            சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளில் இருந்து பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழக கட்டடங்களுக்கு விலக்கு அளிக்க, மத்திய அரசு உத்தேசித்துள்ளது.

           அமல்படுத்தியது:பெரிய அளவிலான கட்டுமான திட்டங்களை மேற்கொள்ளும் போது, அவற்றால் சுற்றுச்சூழலுக்கு பாதிப்புகளை ஏற்படாமல் தடுக்க, 'சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிமுறைகளை' 2006ல், மத்திய அரசு அமல்படுத்தியது.

இதன்படி, 20 ஆயிரம் சதுர மீட்டர் மற்றும் அதற்கு மேலான பரப்பளவு கொண்ட கட்டுமான திட்டங்களை மேற்கொள்ளும் போது, சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரித்து, உரிய ஆணையத்திடம் தாக்கல் செய்து அனுமதி பெற வேண்டும். இதற்காக, மாநில அளவிலும், தேசிய அளவிலும் சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையங்கள் அமைக்கப் பட்டுள்ளன. சுற்றுச் சூழல் ஆர்வலர்கள் மத்தியில், இந்த விதிமுறைகள் வரவேற்பை பெற்றாலும், கட்டுமான நிறுவனங்கள் இவற்றை எதிர்க்கின்றன.

எனவே, குறிப்பிட்ட சில துறைகளின் கட்டுமான பணிகளுக்கு மட்டும், இந்த விதிமுறைகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவடைந்து வருகிறது.

திருத்தம்:இந்நிலையில், வளர்ச்சித் திட்டங்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும், சட்ட விதிமுறைகளை திருத்துவதில், புதிதாக பொறுப்பேற்ற மோடி தலைமையிலான மத்திய அரசு ஆர்வம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, 2006ல் பிறப்பிக்கப்பட்ட சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு விதிமுறைகளில் சில திருத்தங்கள் செய்ய முடிவெடுத்து உள்ளது.

அதன்படி, குடியிருப்புகள், வணிக வளாகங்கள், உணவகங்கள், மருத்துவமனைகள், விடுதிகள், அலுவலக வளாகங்கள், ஐ.டி., மற்றும் மென்பொருள் பூங்காக்கள் தொடர்பான கட்டடங்களுக்கு மட்டுமே சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிக்கை தயாரிப்பது கட்டாயமாக்கப்படும்.

பள்ளிகள், கல்லுாரிகள் மற்றும் பல்கலைக்கழக கட்டடங்களுக்கு, இவற்றிலிருந்து விதிவிலக்கு அளிக்கப்பட உள்ளது. இது தொடர்பான, வரைவு விதிகள் வெளியிடப்பட்டு, பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் கருத்துகளை பெறும் பணி தற்போது நடந்து வருகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு, அடுத்த சில மாதங்களில் வெளியிடப்படும் என்று கூறப்படுகிறது.

தமிழகத்தில் என்ன விளைவு ஏற்படும்? :தமிழகத்தில், குறிப்பாக மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், ஏராளமான கல்வி நிறுவன வளாகங்கள், வனம் மற்றும் அதை ஒட்டிய பகுதிகளில் அமைந்துள்ளன. இந்த கட்டுமானங்களால், யானைகளின் வழித்தடங்களில் தடைகள் ஏற்படுவதாக புகார் கூறப்படுகிறது.
மேலும், பெரும்பாலான கல்வி நிறுவன கட்டடங்களுக்காக ஏரிகள், குளங்கள் உட்பட்ட நீர் நிலைகள் பல ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார்கள் தெரிவிக்கப்பட்டுள்ளதால், மத்திய அரசின் இந்த முடிவு, தமிழகத்தில் என்ன மாதிரியான விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும் என்கின்றனர், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive