நடப்பு நிதியாண்டிற்கான (2014-15)
பட்ஜெட் மறுமதிப்பீட்டில், உயர் கல்விக்கான ஒதுக்கீட்டை, 16 ஆயிரத்து 900
கோடியில் இருந்து, 13 ஆயிரம் கோடி ரூபாயாக மத்திய அரசு குறைத்துள்ளது.
நடப்பு நிதியாண்டில், 16 ஐ.ஐ.டி.,க்களுக்கு, 2,500 கோடி ஒதுக்க திட்டமிடப்பட்டிருந்தது. இதில் தற்போது, 163 கோடி ரூபாய் குறைக்கப்பட்டு 2,337 கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்காலிக கட்டடங்களில் இயங்கி வந்த எட்டு ஐ.ஐ.டி.,க்களில், ஜோத்பூர், ரோபர் உட்பட இரண்டு நிறுவனங்களை தவிர்த்து, இதர ஆறு நிறுவனங்களை வரும் ஜூலைக்குள் நிரந்தர கட்டடத்திற்கு மாற்றும் திட்டம், முந்தைய ஐ.மு., ஆட்சியில், 2008ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
நடப்பு நிதியாண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பில், ஐந்து ஐ.ஐ.டி., மற்றும் ஐந்து ஐ.ஐ.எம்.,களுக்கு 500 கோடி ரூபாய் ஒதுக்குவதாக அறிவிக்கப்பட்டது. இது தற்போது, 65 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
இத்துடன், திறந்தநிலை ஆன்லைன் கல்வி திட்டத்திற்கான ஒதுக்கீடு, 100 கோடியில் இருந்து 5 கோடியாகவும், மதன் மோகன் மாளவியா தேசிய திட்டத்தின் கீழ், ஆசிரியர் பயிற்சி திட்டங்களுக்கான ஒதுக்கீடு, 100 கோடியில் இருந்து, 15 கோடி ரூபாயாகவும் குறைக்கப்பட்டுள்ளது.
இவற்றுக்கெல்லாம் மேலாக, ராஷ்டிரிய உச்சா சிக் ஷா அபியான் திட்டத்தின் கீழ், நாட்டில் உயர் கல்வித் துறையின் தரத்தை மேம்படுத்த பட்ஜெட்டில் ஒதுக்கப்பட்ட, 2,200 கோடி, மறுமதிப்பீட்டில், 397 கோடி ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.
நிதி குறைப்பு ஏன்?
சமீபத்தில், இளநிலை ஆய்வு கல்விக்கான உதவித்தொகை, 16 ஆயிரத்தில் இருந்து 25 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டது. அதுபோல், முதுநிலை ஆய்வு கல்விக்கான உதவித்தொகை, 18 ஆயிரத்தில் இருந்து, 28 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது.
இதன்மூலம், ஐ.ஐ.டி.,களுக்கு கூடுதலாக 150 கோடி நிதிச்சுமை ஏற்பட்டுள்ளது. மத்திய பட்ஜெட்டில், ஒரு லட்சம் கோடி ரூபாய் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக சமீபத்தில், நிதி அமைச்சர் அருண் ஜெட்லி தெரிவித்திருந்தார். இதையொட்டி, பல்வேறு துறைகளின் ஒதுக்கீட்டை மத்திய அரசு குறைத்து உள்ளதாக கூறப்படுகிறது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...