பள்ளிக் கூடங்களில் கணித அறை, மொழி ஆய்வகம் ஆகியவற்றை அமைக்கவேண்டும் என்று
அனைத்து பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர்
ச.கண்ணப்பன் கடிதம் அனுப்பி உள்ளார்.
பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து
பள்ளிக்கூட தலைமை ஆசிரியர்களுக்கும் மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள்,
மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோர் வழியாக ஒரு கடிதம் ஒன்றை அனுப்பி உள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது:-
பள்ளிக் கூடங்களில் மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்தும் வகையில் தமிழக
அரசு பல்வேறு புதிய அணுகுமுறைகளை நடைமுறைப்படுத்தி செயல்படுத்தி வருகிறது.
மாணவர்கள் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டு முறையில் ஆசிரியர்களால்
மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறார்கள்.
மாணவர்களின் பன்முக திறன்களை வளர்க்கும் வகையில் பள்ளிக் கூடங்களில்
வகுப்பறை செயல்பாடுகள் மட்டுமின்றி களஆய்வு செயல்திட்டம், செய்துபார்த்து
கற்றல், உற்றுநோக்கி கற்றல், ஆய்வு அடிப்படையில் கற்றல் போன்ற புதிய
அணுகுமுறை பள்ளிகளில் தற்போது நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.
பல திறன்கள்
முதன்மை கல்வி அதிகாரிகளின் ஆய்வுக்கூட்டத்தில் பள்ளிக் கூடங்களின் அனைத்து
வகுப்பறைகளும் முழுமையாக பயன்படுத்தப்படுகிறதா என்று ஆய்வு நடத்தப்பட்டது.
அப்போது சில பள்ளிகளில் சில வகுப்பறைகளை பயன்படுத்தாது உள்ள நிலை
கண்டறியப்பட்டது.
எனவே மாணவர்களின் கற்றல் திறன், எழுதும் திறன், வரையும் திறன், பாடும்
திறன், மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் திறன் போன்றவற்றை வெளிக்கொண்டு வரும்
வகையில் வகுப்பறைகளை மாற்றி அமைக்கவேண்டும்.
கணித அறை, மொழி ஆய்வகம்
பள்ளிக் கூடங்களில் தற்போது பயன்படுத்தப்படாமல் உள்ள சில வகுப்பறைகள் கீழே
குறிப்பிட்டுள்ளவாறு மாற்றி அமைத்தால் மாணவர்களுக்கு பயன்படும் வகையில்
அமையும்.
ஓவிய அறை, செயல்திட்ட அறை, அறிவியல் கண்காட்சி அறை, தகவல் மற்றும்
தொழில்நுட்ப அறை, படிக்கும் அறை, முதல் உதவி அறை, உள்விளையாட்டு அரங்கு,
தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டுக்கு செயல்திட்டம் மற்றும் மன்ற
நடவடிக்கைக்கான அறை, பெண்கள் ஓய்வு அறை, யோகா, உடற்பயிற்சி மற்றும் தியான
அறை, புவியியல் ஆய்வகம், இசை பயிலும் அறை, கணித அறை, மொழி ஆய்வகம்,
பார்வையாளர் அறை முதலிய அறைகளை அமைக்கலாம்.
கல்வித்துறை மூலம் வழங்கப்பட்டுள்ள குறுந்தகடுகளை பயன்படுத்தி
மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வத்தை ஏற்படுத்தி அவர்களின் தகுதியை
மேம்படுத்தவேண்டும்.
இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் தனது கடிதத்தில் தலைமை ஆசிரியர்களுக்கு குறிப்பிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...