பாலிடெக்னிக் மாணவர்களிடையே ஆங்கில மொழித் திறனை மேம்படுத்தும் வகையில்
பாடத் திட்டத்தில் முழுமையான மாற்றத்தை தொழில்நுட்பக் கல்வி இயக்குநர்
அலுவலகம் கொண்டு வருகிறது. வருகிற 2015-16-ஆம் கல்வியாண்டு முதல் இந்தப்
புதிய பாடத் திட்டம் நடைமுறைக்கு வர உள்ளது.
பாலிடெக்னிக் படிக்கும் மாணவ, மாணவிகளின் கல்வித்
திறன், செய்முறைப் பயிற்சி ஆகியவற்றை நவீன தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ற
வகையில் மேம்படுத்தும் வகையில், பாடத் திட்டத்தை மாற்றியமைக்கும் முயற்சியை
தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலகம் மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக,
மாணவர்களின் ஆங்கில மொழித் திறனை மேம்படுத்துவதற்கு இதில் அதிக
முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து தொழில்நுட்ப கல்வி இயக்குநர் அலுவலக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:
பாலிடெக்னிக் மாணவர்கள் மட்டுமின்றி பொறியியல் மாணவர்களும் ஆங்கிலத் திறன்
குறைந்து காணப்படுகின்றனர். இதை மேம்படுத்துவதற்கான முயற்சிகளை இப்போது
எடுத்து வருகிறோம். அதற்காக ஆங்கில பாடத் திட்டத்தில் முழுமையான மாற்றத்தை
செய்து வருகிறோம்.
அதாவது, வழக்கமான மானப்பாட முறை ஆங்கிலப் பாடத் திட்டமாக இல்லாமல், செயல்
வடிவ ஆங்கிலப் பாடத் திட்டமாக மாற்றும் முயற்சியை மேற்கொண்டு வருகிறோம்.
மேலும், அதை நடைமுறைப்படுத்துவதற்கு முன்னர் பாலிடெக்னிக் ஆசிரியர்கள்
அதில் முழுத் திறன் பெற வேண்டும் என்பதற்காக, அமெரிக்க தூதரக உதவியுடன்
அமெரிக்க வெஸ்ட்கிலிஃப் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியர் ஜூலி சியான்சியோ
மூலம் ஆசிரியர்களுக்கு பயிற்சிகளை அளித்து வருவதோடு, அவர்கள் மூலமாகவே
பாடத் திட்ட குறிப்பேடுகளையும் உருவாக்கி வருகிறோம்.
தொழில்நுட்ப இயக்குநர் அலுவலக வளாகத்தில் கடந்த 5-ஆம் தேதி தொடங்கி 9-ஆம்
தேதி வரை இப் பயிற்சி அளிக்கப்படுகிறது. பாடத் திட்டமானது வருகிற 31-ஆம்
தேதி நிறைவுபெற்றுவிடும்.
அதன் பிறகு பல்வேறு தரப்பினரின் கருத்துக்களை கேட்பதற்காக இயக்குநர் அலுவலக
இணையதளத்தில் வெளியிடப்பட்டு, பாடத் திட்டம் இறுதி செய்யப்பட்டு
2015-16-ஆம் கல்வியாண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்படும்.
அடுத்தகட்டமாக பொறியியல் பாடத் திட்டத்திலும் இந்த மாற்றம் கொண்டு வரப்படும் என்றார் அவர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...