தனியார் பள்ளி ஆசிரியர்களின் ஆர்ப்பாட்டத்தைத்
தொடர்ந்து, கடலூர், கல்வி மாவட்ட அலுவலர், அதிரடியாக பணியிலிருந்து
விடுவிக்கப்பட்டார்.
கடலூர் கல்வி மாவட்ட அலுவலராக இருந்த மல்லிகா, கடந்தாண்டு மாவட்ட
முதன்மைக் கல்வி அலுவலராக பதவி உயர்வு பெற்று
கோவைக்கு மாற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து கடலூர் கல்வி மாவட்ட அலுவலர்
பணியிடம் காலியாக இருந்தது.
இப்பணியை, மாவட்ட மெட்ரிக் பள்ளிகளின் ஆய்வாளர்
பிச்சையப்பன் கூடுதலாக கவனித்து வந்தார். இவர், விழுப்புரம் மாவட்ட வயது
வந்தோர் கல்வி திட்ட அதிகாரி பணியிடத்தையும் கூடுதலாக கவனித்து வந்தார்.
இந்நிலையில், மாவட்டக் கல்வி அதிகாரியின் நேர்முக உதவியாளர், அரசு உதவி
பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம்
வழங்குவதில் தாமதம் செய்து வந்தார். இதனைக் கண்டித்து கடந்த 14ம் தேதி
சேத்தியாத்தோப்பு டி.ஜி.எம்., மேல்நிலைப் பள்ளி ஆசிரியர்கள், கடலூரில்,
மாவட்ட கல்வி அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தி, கலெக்டர் உள்ளிட்ட
அதிகாரிகளிடம் மனு கொடுத்தனர். கலெக்டர் உத்தரவின் பேரில் மாவட்ட முதன்மைக்
கல்வி அலுவலர் பாலமுரளி விசாரணை மேற்கொண்டார். அதில், அரசு உதவி பெறும்
பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கு சம்பளம் மற்றும் பிற பண பலன்களை
தாமதமாக வழங்கி வந்தது உறுதியானது.
தொடர்ந்து, மாவட்டக் கல்வி அலுவலர் பொறுப்பில்
இருந்த பிச்சையப்பன் அப்பணியிலிருந்து உடனடியாக விடுவிக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக, பெரியப்பட்டு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்
ரவிச்சந்திரன், மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடத்தை கூடுதல் பொறுப்பாக
கவனிக்க நியமித்தார். மேலும், ஊழியர்களுக்கு சம்பளம் உள்ளிட்ட பணப் பலன்களை
தாமதமாக வழங்கிய மாவட்டக் கல்வி அலுவலரின் நேர்முக உதவியாளர் மீது
நடவடிக்கை எடுக்க, பள்ளிக் கல்வித்துறை இயக்குனருக்கு பரிந்துரை
செய்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...