இந்தியாவில் பயிற்சி பெற்ற தொழிலாளர்கள்
எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. இந்த நிலை நீடித்தால், நாட்டை உற்பத்தி
மையமாகவும், ஏற்றுமதி மையமாகவும் மாற்ற வேண்டும் என்ற கனவை நனவாக்குவது
கடினம்.
எனவே, பயிற்சிபெற்ற தொழிலாளர்களை அதிக அளவில் உருவாக்க வேண்டியது அவசியம் என, நிபுணர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
இதுதொடர்பாக நிபுணர்கள் கூறியுள்ளதாவது:
அறிவுத்திறன் உடையவர்கள் மற்றும் புத்திசாலிகளை அதிகம் கொண்ட நாடு இந்தியா
என்ற பெருமை தற்போது உள்ளது. அதேநேரத்தில், பயிற்சிபெற்ற தொழிலாளர்கள்
நிறைந்த நாடு என்ற பெருமை இந்தியாவுக்கு இல்லை. இந்தியாவில் தொழிலாளர்
சந்தையில் ஒவ்வொரு ஆண்டும், 1.2 கோடி பேர் இணைகின்றனர். ஆனாலும்,
பயிற்சிபெற்ற தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது.
போதிய பயிற்சி
உற்பத்தி துறையில், அண்டை நாடான சீனா,
மிகப்பெரிய அளவில் சாதனை படைத்து வருகிறது. அதற்கு, பள்ளி அளவிலேயே,
முறையான பயிற்சி திட்டங்களை மாணவர்களுக்கு போதிப்பதே காரணம். இதனால்,
ஆண்டுக்கு ஆண்டு பயிற்சிபெற்ற தொழிலாளர்கள் எண்ணிக்கை, அங்கு அதிகரித்து
வருகிறது. இந்தியாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிப்போர் அதிகம்
இருந்தாலும், அவர்கள் எல்லாம், பயிற்சிபெற்ற தொழிலாளர் அந்தஸ்தை பெற
முடிவதில்லை.
அதேநேரத்தில், பள்ளிகளுக்கு செல்லாமல், தொழிற்
பயிற்சி நிறுவனங்களில் சேர்ந்து படிப்போரும், முறையான மற்றும் காலத்திற்கு
ஏற்ற பயிற்சியை பெறுவதில்லை. அதற்கு காரணம், தொழில் பயிற்சி நிறுவனங்களில்
காலத்திற்கு ஒவ்வாத பாடத் திட்டங்கள் நடத்தப்படுவதே.
உதாரணமாக, ஐ.டி.ஐ.,க் களில் கார் மெக்கானிக்
படிக்கும் மாணவர்கள், கார்பரேட்டர்கள் தொடர்பான பயிற்சிகளையே இன்றும்
பெறுகின்றனர். ஆனால், கார்களில் கார்பரேட்டர்கள் என்பது, 1990ம்
ஆண்டுகளிலேயே இல்லாமல் போய் விட்டது. நவீன முறைகள் வந்து விட்டன.
இந்தியாவில், பயிற்சிபெற்ற தொழிலாளர்களாக, ஒவ்வொரு ஆண்டும், 35 லட்சம்
பேர்தான் உருவாகின்றனர்.
ஆனால், சீனாவில், ஒன்பது கோடி பேர்
உருவாகின்றனர். இதுவே, அந்நாடு தொழில் ரீதியாக பிரமாண்டமான வளர்ச்சிபெற
காரணம். பயிற்சிபெற்ற தொழிலாளர்களை உருவாக்குவதில், மத்திய, மாநில அரசுகள்
அக்கறை காட்டததே இந்நிலைமைக்கு காரணம். இந்த நிலை நீடித்தால்,
வருங்காலங்களில், எலக்ட்ரீசியன்கள், செங்கல் தயாரிப்போர் மற்றும்
பிளம்பர்களின் தேவை அதிகமாக இருக்கும். அந்தப் பணியில் இருப்போருக்கு
மவுசும், சம்பளமும் அதிகமாக இருக்கும்.
கீழ் மட்டம்
இந்தியாவில், உடை மற்றும் கையில் அழுக்குப்படிய
வேலை செய்வோர் எல்லாம் கீழ்மட்டத்தில் உள்ளவர்கள்; அவர்கள் எல்லாம்
ஒதுக்கப்பட்ட பிரிவினர் என்ற எண்ணம் மக்களிடத்தில் உள்ளது. குறிப்பிட்ட
பிரிவினர்தான் இந்த வேலைகளைச் செய்வர் என்றும் நம்புகின்றனர். அதனால் தான்
கட்டுமான துறையில் உள்ளவர்களில், 10ல் ஒருவர் மட்டுமே, பயிற்சிபெற்ற
தொழிலாளர்களாக உள்ளனர்.
இப்படி ஒவ்வொரு துறையிலும் பயிற்சிபெற்ற
தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைவாக இருப்பதால், வரும், 2022ம் ஆண்டுக்குள்,
பயிற்சிபெற்ற தொழிலாளர்கள், 5 கோடிப் பேரை மத்திய அரசு உருவாக்க வேண்டும்.
அப்போதுதான், ஒவ்வொரு பொருளையும் உற்பத்தி செய்யும் மற்றும் ஏற்றுமதி
செய்யும் மையமாக இந்தியா மாற வேண்டும் என்ற கனவு நனவாகும். அவரின், மேக்
இன் இந்தியா திட்டமும் வெற்றி அடையும். இவ்வாறு, நிபுணர்கள்
தெரிவித்துள்ளனர்.
அதிக சம்பளம் பெறும் பிளம்பர்கள்
* இளைஞர்களில் பெரும்பாலானவர்கள், உடல் உழைப்பு
குறைவான பணிகளையே விரும்புகின்றனர். பயிற்சிபெற்ற தொழிலாளர்களாக
விரும்புவதில்லை. அதற்கு, டிப்டாப் உடை அணிந்து, அலுவலகம் செல்வோருக்கு,
சமூகத்தில் அதிக மரியாதை அளிக்கப்படுவதே காரணம் என்கின்றனர் நிபுணர்கள்.
* தகவல் தொழில்நுட்பத்தில், இன்ஜினியரிங்
பட்டம் பெற்று, கீழ்மட்ட அளவில் வேலை பார்க்கும் பலர் பெறும் சம்பளத்தை
விட, எலக்ட்ரீசியன்கள் மற்றும் பிளம்பர்கள் அதிக சம்பளம் பெறுகின்றனர்;
அதிகம் சம்பாதிக்கின்றனர் என்பதே ஆய்வுகள் தெரிவிக்கும் தகவல்.
* தற்போது அமலில் உள்ள தொழிலாளர்கள் தொடர்பான
சட்டங்களும், பழையனவாக, காலத்திற்கு ஒவ்வாததாக உள்ளன. இவற்றில் காலத்திற்கு
ஏற்ற மாற்றம் கொண்டு வராததும், பயிற்சி பெற்ற தொழிலாளர்கள்
பற்றாக்குறைக்கு காரணம்.
* பயிற்சிபெற்ற தொழிலாளர்கள் அதிகம் உருவாக
வேண்டும் எனில், ஐ.டி.ஐ.,க்களில் பாடத்திட்டங்கள் மாற்றப்பட வேண்டும். நவீன
ரக மற்றும் தரமான பயிற்சிகளை அளிக்க வேண்டும். அத்துடன், ஐ.டி.ஐ.,க்களில்
படிப்போருக்கு, தனியார் நிறுவனங்களுடன் இணைந்து பயிற்சிகளையும், அவ்வப்போது
அளிக்க வேண்டியது அவசியம்.
எல் அண்ட் டி பயிற்சி நிறுவனம்
கட்டுமான தொழிலில் பெரிய அளவில் ஈடுபட்டுள்ள,
லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம், பயிற்சிபெற்ற தொழிலாளர்களை
உருவாக்குவதற்காக, மும்பையின் புறநகர் பகுதியில் பயிற்சி மையம் ஒன்றை
நிறுவி உள்ளது. இங்கு கைவினைக் கலைஞர்களின் கடவுளான விஸ்வகர்மாவின் முன்,
சுத்தியல், ஸ்பேனர் போன்றவற்றை காட்டி பயிற்சி அளிக்கப்படுகிறது.
அத்துடன், கட்டுமான தொழிலுக்கு தேவையான சாரம்
கட்டுவது, செங்கல் தயாரிப்பது உட்பட, பல வகையான பயிற்சிகளும்
அளிக்கப்படுகின்றன. இதுபற்றி, எல் அண்ட் டி நிறுவன அதிகாரி யோகேஷ் தேவதாஸ்
கூறுகையில், "கிராமப்புறங்களுக்கு சென்று ஆட்களை தேர்வு செய்து, எங்களின்
நிறுவனத்தில், சாரம் கட்டுவது உட்பட, பலவிதமான பயிற்சிகளை அளிக்கிறோம்.
அப்படி பயிற்சி பெற்ற அனைவரும், எங்கள் நிறுவனத்திலேயே வேலைக்கு சேர்ந்து
விடுகின்றனர்" என்றார்.
இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் இல்லை; பயிற்சி பெற்ற தொழிலாளர்கள் பற்றாக்குறையே உள்ளது, என்கின்றனர் சிலர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...