பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு
பொதுத்தேர்வுக்கு தயாராகி வரும் மாணவர்களின் அரையாண்டு தேர்வு முடிவுகள்
குறித்து, கோவை மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தலைமையில், ஆய்வு
கூட்டம் நடத்தப்பட்டது.
மாநிலம் முழுவதும் பொதுத்தேர்வுகள் வரும்
மார்ச் முதல் வாரத்திலிருந்து துவங்கவுள்ள நிலையில், பள்ளி வாரியாகவும்,
மாவட்ட வாரியாகவும் தேர்ச்சி விகிதத்தை அதிகரிக்க பல்வேறு நடவடிக்கைகள்
மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக, அரையாண்டு தேர்வுகளின்
முடிவுகளை கொண்டு மாணவர்களின் தரம் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.
கோவை மாவட்டத்தில், 540 பள்ளிகளிலிருந்து
மாணவர்கள் பொதுத்தேர்வுக்கு ஆயத்தமாகி வருகின்றனர். இப்பள்ளிகளில்,
பின்தங்கிய மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்படுவதுடன், சக
மாணவர்களுக்கு மாதிரி தேர்வுகள் நடந்து வருகின்றன. அரையாண்டு தேர்வுகள்
டிசம்பர் 22ம் தேதி முடிந்தநிலையில், அதன் முடிவுகள், பள்ளி வாரியாக
மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, கோவை மணி மேல்நிலைப்பள்ளியில்
ஆய்வுக்கூட்டம் நடந்தது. இதில், முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி தலைமையில்,
மாவட்ட கல்வி அதிகாரி மந்திரபதி, மெட்ரிக் பள்ளிகள் ஆய்வாளர் சந்திரன்
ஆகியோர் பங்கேற்று ஆய்வு பணிகளை மேற்கொண்டனர். பள்ளி வாரியாக மாணவர்களின்
தேர்ச்சி விகிதம், பாட வாரியாக மாணவர்கள் பெற்றுள்ள மதிப்பெண், தேர்ச்சி
விகிதம் குறைந்துள்ள பாடங்கள் என அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டது.
முதன்மை கல்வி அதிகாரி ஞானகவுரி கூறுகையில்,
"அரையாண்டு தேர்வு முடிவுகள் கடந்த கல்வியாண்டு தேர்ச்சி விகிதத்துடன்
ஒப்பிட்டு ஆய்வு செய்யப்பட்டுள்ளது. தேர்ச்சி விகிதத்தில் பின்தங்கியுள்ள
பள்ளிகளில் பயிற்சிகளின் தன்மை மாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போது,
கற்றல், கற்பித்தல் பணி எம்முறையில், நடக்கிறது என்பதும் கேட்டறியப்பட்டது.
பின்தங்கிய மாணவர்கள் மீது, அதிக கவனம் செலுத்தி, ஆக்கப்பூர்வமாக
பயிற்சிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...