Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

நாற்பது வயதில் நாய்க்குணம்?

         நாற்பது வயதில் நாய்க்குணம் என்பது சென்ற தலைமுறைக்கு வேண்டுமானால் பொருந்தி இருக்கலாம், ஆனால் இந்த தலைமுறையில் பெரும்பாலோனோர்க்கு அது பொருந்துவது இல்லை. நாற்பது வயதில் தான் இப்போதெல்லாம் ஒரு மனிதன் பக்குவப்படுகிறான் அல்லது சூழலால் பக்குவப்படுத்தப் படுகிறான்.

             இருபதுகளின் இறுதியில் அல்லது முப்பதுகளின் ஆரம்பத்தில் திருமணம் செய்து கொள்பவன், ஆரம்ப காலகட்டத்தில் பிரச்சினைகளின் போது ரிமோட்டை உடைப்பான்,செல்போனை சிதறவிடுவான், சொந்த வீடாகவோ, வீட்டு உரிமையாளர் அருகில் இல்லாத வீடாகவோ இருந்தால் கதவை டமாரென சாத்துவான். ஆனால் நாற்பது வயது ஆனவன், இதை எல்லாம் செய்வது இல்லை.இந்தப் பெண் தன் கணவனைத் திட்டுகிறாள், தன்னை அல்ல என்ற ஆழ்ந்த புரிதலோடு இருப்பான். மேலும் நாற்பது வயதான உடன் மனைவி பேசும் போது காதுகளில் இருந்து மூளைக்கு செய்தியைக் கடத்தும் நியூரான்கள் வலுவிழந்து விடுவதாகவும், எனவே வார்த்தைகளானது பைபாஸில் பயணம் செய்து இன்னொரு காது வழியாக வெளியே சென்று விடுவதாகவும் ஒரு ஆராய்ச்சி முடிவு தெரிவிக்கிறது.

திருமணமான புதிதில் ஒருவன் தன் மனைவி வீட்டு விசேஷங்களுக்கு செல்லும் போதெல்லாம் இரத்தக் கொதிப்புக்கு ஆளாகும் நிலை ஏற்படும். உங்க கம்பெனி இப்போ டவுனாமே? என்ன இன்னும் வண்டி வாங்கலையா? எங்க அண்ணன் மகன் அங்க இருக்கான், அக்கா பொண்ணு இங்க வீடு வாங்கி இருக்கு என்று அவரவர் லெவலுக்கு ஏற்ப தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். இவர்களுக்காகவே இயல்பு நிலையில் இருந்து மீறி அலட்ட வேண்டியிருக்கும். நாற்பதில் இந்த சிக்கல் இருக்காது. மீறி யாராவது அலட்டினாலும், எங்க கம்பெனியில் இப்போ ரிசஷன், லோன் கட்ட முடியாம இருக்கேன் என்று பேச ஆரம்பித்து, எங்கே இவன் நம்மிடம் எதுவும் கேட்டு விடுவானே என்று அலட்டல் பார்ட்டிகள் அஞ்சும் அளவிற்கு பரிதாபமாக பேசும் கலை கைவந்து விடும்.

அலுவலகத்திலோ, யார் என்ன சொன்னாலும், வேலைன்னு வந்துட்டா திட்டத்தான் செய்வாங்க. அதுவும் இப்போ நவம்பர், வேலை போச்சுன்னா, அடுத்த வேலை எங்க கிடைக்குமோ, போற இடத்துல பிள்ளைகளுக்கு ஸ்கூல் அமையுமோன்னு பல வகையிலும் சிந்தித்து ஒரு அசட்டுத்தனமான முகபாவனையை காட்டுவிட்டு நகர்ந்து விடும் இயல்பு வந்துவிடும். இதே ஆள் இருபது சில்லறையில் இருக்கும் போது அந்த வார்த்தையை கேட்டிருந்தால், கூரை மேல சோத்தப் போட்டா ஆயிரம் காக்கா, என் படிப்புக்கும் திறமைக்கும் நான் எங்க இருக்க வேண்டியவன், எனக்கு எங்க போனாலும் வேலை கிடைக்கும், இங்க இருக்க என்ன தலையெழுத்தா? என்று புரட்சி முழக்கமிட்டிருப்பான். காலமும் ஒரு கல்யாணமும் ஒருவனை எப்படி பதப்படுத்தி விடுகிறது?
சரியான சில்லறை கேட்டதற்காக கண்டக்டரிடம் சண்டைக்கு போனவன், நண்பனை ஊர்ச் சண்டையில் அடித்து விட்டார்கள் என்பதற்காக அரிவாளை எடுத்தவன், பந்தியில் பீஸ் இல்லாமல் பிரியாணி போட்டதற்காக மூன்றாம் உலகப் போருக்கு அடிகோலியவன் எல்லாம் அமைதி அடைந்து இதெல்லாம் ஒரு மேட்டராப்பா? சமூகம்னா இப்படித்தாம்பா இருக்கும்னு மற்றவர்களை ஆறுதல் படுத்த தொடங்குவதும் இந்த நாற்பது வயதில்தான். ஒரு ஆங்கிரி யங் மேன் குணசித்திர நடிகராக மாறும் ரசவாதம் நிகழ்வது இந்த நாற்பதில்தான். சொல்லப் போனால் நாற்பது வயதில் நாய்க்குணம் என்பதை நாற்பது வயதில் எருமைக்குணம் என்று சொல்லும் அளவுக்கு இப்போதெல்லாம் ஆண்களின் இயல்பு மாறிவருகிறது.
நாற்பது வயதில் இன்னொரு குணமும் ஆண்களிடத்தில் அவர்கள் அறியாமலேயே உட்புகுந்து விடுகிறது. அதுதான் நரிக்குணம். என் நண்பர் ஒருவர், தன் மனைவி வீட்டாரால் பலமுறை அவமானப் பட்டவர். மனைவி யின் தம்பிக்கு நல்ல சம்பந்தம் வந்தது. பெண் நல்ல அழகி, ஏராளமான சொத்து, நல்ல மரியாதையான குடும்பம். அந்தக் குடும்பம் ஒரு வகையில் நண்பனுக்கு தூரத்து உறவு. சரி சம்பந்தம் பேசுவதற்கு முன் இவரிடம் ஒரு வார்த்தை கேட்போம் என அவர்கள் போன் செய்தார்கள். இந்த மாதிரி உன் மச்சினனுக்கு குடுக்கலாம்னு இருக்கோம்பா என்று அவர்கள் ஆரம்பிக்க இவர்என்று சொன்னார். எந்த மாடுலேசனில் என்று சொன்னார் என்று தெரியவில்லை. அவர்கள் பின்வாங்கி விட்டார்கள். அந்தப் பையன் இன்னும் மேட்ரிமோனி வெப்சைட்களுக்கு பிரிமீயம் மெம்பராகி பணம் கட்டிக் கொண்டிருக்கிறான்.
என்னுடைய இன்னொரு நண்பர் அவர் சொல்லும் பஞ்ச் இது. “என்னை வதைப்பவர்களை நான் ஒன்றும் செய்ய மாட்டேன், ஆனால் நான் உதவி செய்தால் அவர்கள் தப்பிப்பார்கள்என்னும் நிலை ஒரு காலத்தில் அவர்களுக்கு வரும் போது நான் பாராமுகமாய் இருப்பேன் என்பார். இது இருபது வயது இளைஞர்களிடம் நிச்சயம் இருக்காது.
மேலும் தனியார் நிறுவனங்களில் வேலை பார்ப்பவர்கள் நாற்பது வயதுக்கு மேல் நரியாகவே மாறும் நிலை ஏற்பட்டுவிடுகிறது. ஏனென்றால் அந்த வயதில் அவர்களுக்கு குறைந்தது 15 வருட அனுபவம் ஏற்பட்டு விடும். அந்த அனுபவ அளவுக்கு, அவர்கள் எதிர்பார்க்கும் சம்பளத்திற்கு வெளியே வேலை கிடைப்பது கடினம் ஆகிவிடும். மேனேஜர் லெவலில் குறைந்த அளவு பதவிகளே எல்லா இடங்களிலும் இருக்கும். எனவே போட்டி அதிகமாக இருக்கும். எனவே தான் இருக்கும் இடத்தில் தாக்குப் பிடிக்க வேண்டும் என்பதற்காக பல உபாயங்களை கையாளத் தொடங்குவார்கள். வேறு யாரையும் வளர விடமாட்டார்கள். முக்கியமாக தனக்குச் சமமாக விளங்குபவர்கள், ஒரு ஒயிட் ஷீட்டை வீட்டிற்கு எடுத்துச் சென்றாலும் ஒரு கோடி கையாடல் செய்துவிட்டது போல் மறைமுகமாக பெரிது படுத்துவார்கள். பெரும்பாலான அலுவலக அரசியலின் விதை நாற்பது வயதுக்காரர்களால்தான் விதைக்கப்பட்டு இருக்கும்.
ஒரு மத்திய தர ஆணுக்கு வாழ்க்கை மூன்று வாய்ப்புகளை வழங்குகிறது. பிறந்த உடன், இருபது வயதில், நாற்பது வயதில். பிறந்ததில் இருந்தே சமத்தாக இருந்து, ஒழுங்காகப் படிப்பவர்கள் இருபதின் ஆரம்பத்திலேயே நல்ல வேளை கிடைத்து உயர்ந்து விடுவார்கள். கல்லூரி முடிக்கும் வரை ஆவரேஜாக இருந்து பின்னர் இருபதுக்கு மேல் உழைப்பவர்களும் ஓரளவு நல்ல நிலையை அடைந்து விடுவார்கள். இந்த இரண்டு கட்டத்திலும் ஆவரேஜாக இருப்பவர்களுக்கு கடைசி வாய்ப்பாக கிடைப்பதுதான் நாற்பது வயது.
இந்த நாற்பது வயதில், துணைவியருக்கும் இவரால் இதுதான் முடியும் என்ற தெளிவு வந்து எதிர்பார்ப்பு குறைந்துவிடும். அல்லது வேற என்ன செய்ய என சலித்து பழக்கப்பட்டுக் கொள்வார்கள். பெற்றவர்களும் கூட தங்கள் எதிர்பார்ப்பைக் குறைத்துக் கொண்டு, அவனே கஷ்டப்படுறான், நமக்கென்ன போய்ச் சேர்ற காலத்துல என சமாதானம் அடைந்து
கொள்வார்கள்.

சுற்றமும் கூட செத்த பாம்பை அடித்து என்ன பலன் என்று புதிதாக வந்த சீறும் பாம்பை சீண்டத் தொடங்கும். அலுவலகத்திலும் இவர் கெப்பாசிட்டி இவ்வளவுதான் என உணர்ந்து அதிகம் துன்புறுத்த மாட்டார்கள். எனவே இந்த வயதில் சுதாரித்து ஒருவன் தன் உழைப்பை/திறமையை மேம்படுத்தினால் எல்லாரிடமும் நல்ல பெயர் கிடைக்கும். பிற்கால வாழ்க்கையை பெரிய கஷ்டமில்லாமல் கடந்துவிடலாம்




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive