ஒவ்வொரு சாமானியனின் கனவும், தனக்கென ஒரு செல்போன் வாங்குவதாக
இருந்தது ஒரு காலத்தில். இப்போது அது ஒரு ஸ்மார்ட்போன் வாங்குவதாக
மாறியிருக்கிறது. இன்னும் சொல்லப்போனால் ஒரு ஸ்மார்ட்போன் வாங்கி தனக்கு
தேவை இருக்கிறதோ இல்லையோ, இலவசமாக கிடைக்கும் எல்லாவித செயலிகளையும்(Apps)
நிறுவிக்கொள்வது வேட்கையாக மாறியிருக்கின்றது.
வாட்ஸ் அப் உள்ளிட்ட செயலிகளை நிறுவிக்கொண்டவர்கள் அதற்குள்,
என்னவெல்லாம் இருக்கிறதெனத் தேடிப்பார்க்கிறார்கள். குழு
ஏற்படுத்திக்கொள்ளும் வாய்ப்பிருப்பதைக் கண்டவுடன் உடனே தாங்களும் ஒரு
குழுவை ஆரம்பிக்கிறார்கள். குழுக்களில் 20% அவசியமானதாக, தொடர்புடையதாக,
பயனுள்ளதாக இருக்கலாம். 80% குழுக்களில் பெரும்பாலும் அதன் அட்மின்
எனப்படும் நிர்வாகியைத் தவிர மீதி அனைவரும் ஒருவருக்கொருவர் அறியப்படாத
நபர்களாக இருப்பார்கள்.
யாரோ ஒரு குழு நிர்வாகியால் இழுத்துவிடப்படும் நம் முகப்பு
படமும், கை பேசி எண்ணும் குழுமங்களில் இருக்கும் யாரென்றே தெரியாத பலநூறு
பேருக்கும் பந்திவைக்கப்படுகிறது. பெண்களின் முகப்பு படம், கை பேசி எண்கள்
தனக்கு அறிமுகமும், அவசியமும் இல்லாத உலகத்தின் ஏதோ ஒரு மூலையில் இருக்கும்
பல நூறு பேருக்கு கிடைக்கும்போது அதனால் வரும் ஆபத்துகள் குறித்த சிந்தனை
குழு நிர்வாகிக்கோ அல்லது அதிலிருக்கும் பெண்களுக்கோ தெரியாமல்
இருப்பதுதான் கொடுமை. இதுபோன்ற குழுமங்களில் மிக எளிதாக ஒரு ஆபாச படத்தையோ,
காணொளியையோ ஒருவர் நொடிப்பொழுதில் ஏற்றிவிட்டு அனைவரின் கை பேசிக்குள்ளும்
அதை கொட்டிவிட முடிகிற ஆபத்தும் இருக்கின்றது.
அடுத்ததாக இந்த அரட்டைச் செயலிகளில் இருக்கும் மிகப்பெரிய
அபத்தமும், ஆபத்தும் தனக்கு வரும் ஒரு செய்தியை, அதன் உண்மைத்தன்மை
குறித்தெல்லாம் கிஞ்சித்தும் சிந்திக்காமல் நண்பர்களிடமோ, குழுக்களிலோ
பகிர்வது.
அரட்டைச் செயலிகளின் வாயிலாக அரசு ஆம்புலன்சின் எண்
தற்காலிகமாக மாற்றப்பட்டிருக்கிறது, குளிர்பான பாட்டிலில் எய்ட்ஸ்
நோயாளியின் இரத்தம் கலக்கப்பட்டிருக்கிறது, இந்த செய்தியை அனுப்பினால்
உங்கள் கணக்கில் ஐம்பது ரூபாய் கிடைக்கும் என்பது போன்றவை சலிப்பேயின்றி
காலம் காலமாய் பகிரப்பட்டுக் கொண்டேயிருக்கின்றன.
சென்னையில் வீடுவீடாக திருடுபவர் என ஒரு காவல் ஆய்வாளரின்
குரல் பதிவோடு ஒரு பெண்ணின் படம் பரப்பப்பட்டது. அதை லட்சக்கணக்கானவர்கள்
பகிர்ந்து சமூகக் கடமையாற்றினார்கள். அதை உண்மையென்று நம்பிய சில
செய்தித்தாள்கள், அந்த பெண் படத்துடன் செய்தியாகவும் வெளியிட்டனர்.
சிலநாட்கள் கழித்து அதே பெண்ணின் படம் போட்டுதான் மும்பையில் வேலை
பார்ப்பதாகவும், தன் படத்தை வேண்டுமென்றே யாரோ பயன்படுத்தி பெயரைக்
கெடுத்துள்ளதாகவும் ஒரு தகவல் வர அதையும் லட்சக்கணக்கானவர்கள் பகிர்ந்து
சமூகக் கடமையாற்றினார்கள். அந்த மறுப்புச் செய்தியும் பொய் என ஒரு தகவல்
பரவியபோது கிறுகிறுத்து மயக்கமே வரும்போல் இருந்தது.
”இரத்தம் தேவை” என வரும் வேண்டுகோள்கள் தர்மநியாயம்
பார்க்காமல் பரப்பப்படுகின்றன. குறைந்தபட்சம் அதிலிருக்கும் எண் வேலை
செய்கிறதா? அந்தச் செய்தி உண்மைதானா? எங்கு இரத்தம் தேவைப்படுகிறது?
என்பதுபோன்ற அடிப்படைக் கேள்விகள் ஏதுமில்லாமல் பகிர்வதில் மட்டும்
வெறித்தனமாய் இயங்குகிறார்கள். இப்படியானவற்றை ஏன் வெறிகொண்டு, தன்
நண்பர்களுக்கு, குழுமங்களுக்கு அனுப்புகிறார்கள் என ஆராய முற்பட்டால்,
முதலில் அவர்கள் புரிந்து வைத்திருப்பது, தான் செய்வது ஒரு ”சமூக சேவை”
என்றுதான்.
”எனக்கு வந்துச்சு, நான் நாலு பேருக்கு அனுப்பிட்டேன்,
எதாச்சும் நல்லது நடந்தா நல்லதுதானே பாஸ்” எனும் மொக்கையான சமாதானத்தில்
திருப்திப்பட்டுக் கொள்கிறார்கள்.
தாங்கள் அனுப்புவது உண்மையானதா, அவசியமானதா என ஆராய்வதைவிட,
வந்த சூட்டோடு சூடாக அனுப்பிவிடுவது என்பது துரிதமான சமூக சேவையென்றே
கருதுகிறார்கள்.
”இல்லை அதிலிருக்கும் எண்ணில் தொடர்புகொண்டு எதும்
விசாரித்தீர்களா!?” எனும் கேள்விக்கு “நாம ஏன் வெட்டியா செலவு
பண்ணிக்கூப்பிடனும்” என்பார்கள். இந்தியாவில் எந்த நகரத்தில் இருக்கும்
எண்ணை தொடர்புகொண்டாலும் அதிகபட்சம் ஒரு ரூபாய் செலவு ஆகுமா!?.
இதில் ஏற்படும் செலவு, அழைப்பு எடுக்கும் சிரமத்தைவிட, தனக்கு
வந்ததை இன்னொருவருக்கு அனுப்பிவிடுவதே சமூகத்துக்கு ஆற்றும் சேவையென
திருப்தியுறும் நோய்மை மனப்பாங்குதான் இங்கு சிக்கலே.
சமீபத்தில் ”RK.R school bus accident in kovilpatti bypass
road. 30 LKG children serious. pls prayfor them” எனும் ஒரு செய்தி
வாட்ஸப் வழியே மீண்டும் மீண்டும் வந்துகொண்டிருந்தது. அப்படி ஒரு செய்தியை
தொலைக்காட்சிகள் பார்க்கவில்லையே என இணையத்தில் தேடினால், 2012ம் ஆண்டே ஒரு
ஃபேஸ்புக் பக்கத்தில் அந்த செய்தி வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் கொடுமை
என்னவென்றால் 2012 வெளியான அந்த ஃபேஸ்புக் நிலைத்தகவலுக்கு, இன்று
வரைக்கும் ”அய்யய்யோ” என அதிர்ச்சி தெரிவித்தும், ஆண்டவனை பிரார்த்தனை
செய்வதாகவும் கணினி பாவிக்கக்கூடிய அளவிற்கு கல்வியறிவு கொண்டிருப்பவர்கள்
பின்னூட்டங்கள் இட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
எதையும் புனிதப்படுத்தாதே, கேள்விக்குட்படுத்து என்பதுதானே
அறிவின் விதி. எல்லாவற்றையும் வெறும் உணர்வுப்பூர்வமாக மட்டுமே அணுகக்கூடிய
ஒரு மனநிலையும்தான் இப்படியான பகிர்வுகளுக்கு காரணம் எனச் சொல்லலாம். ஒரு
சொடுக்கில் உலகம் முழுமைக்கும் ஒன்றை பரப்பிவிடும் வேகமான காலத்தில் நான்
இருக்கின்றோம். தவறுதலாய் பரப்பப்படும் ஒரு எண் வழியே வரும் அழைப்புகள்
எவ்வளவு பெரிய மன உளைச்சலைக் கொடுக்கும் என்பது பற்றியெல்லாம்
பரப்புபவர்கள் அறிவார்களா!?.
இந்தியாவில் கை பேசிகளின் எண்ணிக்கை 93 கோடியைக்
கடந்துவிட்டது எனும் செய்தி வந்திருக்கும் நிலையில், 2013ம் ஆண்டு 7.5
கோடியாக இருந்த ஸ்மார்ட்போன் பயன்படுத்தும் இந்தியர்களின் எண்ணிக்கை 2015ல்
16 கோடியாக மாறும் என ஒரு அறிக்கை சொல்கிறது.
சமூக சேவையெனும் நினைப்பில் தவறான அல்லது போலித் தகவல்களை
தொடர்ந்து பரப்பிக் கொண்டிருப்பவர்கள் மற்றும் அதன் மூலம்
அவதிப்படுபவர்களின் எண்ணிக்கையும் பெருகும் என்பதை நினைத்தால் மிரட்சியாக
இருக்கின்றது.
by A.balu
by A.balu
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...