சந்தாதாரர்கள் வீடு வாங்க உதவுவதற்கு வருங்கால
வைப்பு நிதி நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது தொடர்பான திட்டம் வரையறை
செய்ய நிபுணர் குழு பரிந்துரைக்கு அனுப்பப்பட்டுள்ளது. வருங்கால வைப்பு
நிதி நிறுவனத்தில் (இபிஎப்ஓ) 5 கோடிக்கு அதிகமான சந்தாதாரர்கள் உள்ளனர்.
இவர்களின் ரூ.6.5 லட்சம் கோடிக்கு மேலான நிதியை
பிஎப் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. பிஎப் சந்தாதாரர்களில்
பெரும்பாலானோர் குறைந்த வருவாய் பிரிவினர்தான். அதாவது, மாதம் ரூ.15 ஆயிரம்
அல்லது அதற்கு குறைவாக சம்பளம் வாங்குவோர் எண்ணிக்கை 70 சதவீதமாக உள்ளது.
இப்படிப்பட்ட குறைந்த வருவாய் ஈட்டும் தொழிலாளர்களுக்காகவே சொந்த வீடு
வாங்கும் திட்டத்தை கொண்டுவர மத்திய தொழிலாளர் அமைச்சகம் முடிவு
செய்துள்ளது. கடந்த மாதம் புதுடெல்லியில் வருங்கால வைப்பு நிதி நிறுவனம்
சார்பில் ஆலோசனை கூட்டம் நடந்தது.
இதில் இந்த திட்டம் குறித்தும் இதை
செயல்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும், பிஎப் நிதியை
பங்குச்சந்தைகளில் முதலீடு செய்வது குறித்தும் ஆராயப்பட்டன. இதற்கான
நிபுணர் குழுவை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின்படி
பொதுத்துறை நிறுவனமான தேசிய கட்டிட கட்டுமான நிறுவனம் மற்றும் டிடிஏ,
பியுடிஏ, எச்ஐடிஏ போன்று அந்தந்த மாநிலங்களில் உள்ள ஊரக மேம்பாட்டு
அமைப்புகள் மற்றும் வீட்டு வசதி வாரியங்களுடன் இணைந்து செயல்பட
திட்டமிடப்பட்டுள்ளது. இவற்றின் மூலம் குறைந்த விலையிலான வீடுகள் அரசு
நிர்ணயித்த விலையின்படி கட்டித்தரலாம் என்று தொழிலாளர் துறை வட்டாரங்கள்
தெரிவிக்கின்றன.
பிரதமர் அலுவலகத்தில் இருந்து சமீபத்தில்
அளிக்கப்பட்ட குறிப்பேட்டின்படி, வருங்கால வைப்பு நிதியை வைத்து இதை
செயல்படுத்த வேண்டும். குறிப்பாக வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தில் உள்ள
தொழிலாளர் நிதியில் சுமார் 15 சதவீதத்தை குறைந்த விலை வீடுகள்
திட்டத்துக்கு ஒதுக்கீடு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது
சுமார் 70 ஆயிரம் கோடி நிதியின் மூலம் வீடுகள் கட்டப்படும். இதில் சுமார்
3.5 லட்சம் வீடுகள் கட்டித்தர முடியும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.
பிஎப் நிதியில் ஆண்டுக்கு சுமார் ரூ.70,000 கோடி நிதி சேர்ந்து வருகிறது.
எனவே, இதை தொழிலாளர் வீட்டு திட்டத்துக்கு பயன்படுத்துவதன் மூலம் நிதி
பற்றாக்குறை எதுவும் ஏற்பட வாய்ப்பு இல்லை.
தற்போது வீடு வாங்கும் தொழிலாளர்கள் ஆயுள்
காப்பீடு நிறுவனத்தின் மூலமும், வங்கிகளின் மூலமும் வீட்டுக்கடன்
வாங்குகிறார்கள். வருவாய் ஆதாரத்தை காண்பிக்க வேண்டும் என்பதால்,
பெரும்பாலானவர்களுக்கு வீட்டுக்கடன் வழங்க வங்கிகள் ஒப்புக்கொள்வதில்லை.
தங்களது வருவாய்க்குள் வீடு வாங்கவேண்டுமானால் பெரிய தொகையை முன்பணமாக
செலுத்தவேண்டிவரும். தற்போதுள்ள நடைமுறையின்படி ஐந்து ஆண்டு பணியாற்றிய
பிறகு சந்தாதாரர்கள் வீட்டுக்கடன் வாங்கிக்கொள்ள முடியும். இத்தகைய வசதி
இருந்தாலும், குறைந்த வருவாய் பிரிவில் உள்ள தொழிலாளர்களின் சொந்த வீடு
கனவு நிறைவேறுவதில்லை. அதிலும் இஎம்ஐ தொகை பெரும் சுமையாக உள்ளது. எனவே,
பிஎப் தொகையில் இருந்து இஎம்ஐ செலுத்துவதற்கு இந்த திட்டத்தில் வகை
செய்யப்பட உள்ளது. இதை தொழிலாளர் அமைச்சகமும் பரிந்துரை செய்துள்ளது.
தொழிலாளர் அமைச்சகம் சார்பில் இந்த திட்டத்துக்கு மானியம் அளிக்கப்படும்
எனவும் தெரிகிறது. பிஎப் சந்தாதாரர்கள் குறைந்த வருவாய் பிரிவினர், நடுத்தர
வருவாய் பிரிவினர், அதிக வருவாய் பிரிவினர் என பிரிக்கப்பட்டு அதற்கேற்ப
தனித்தனியாக சலுகை அளிக்கும் வகையில் திட்டம் வடிவமைக்கப்பட உள்ளது. எனவே,
ஓய்வு பெற்ற பிறகு நிம்மதியான வாழ்க்கைக்கும், பாதுகாப்பு
உத்தரவாதத்துக்கும் உறுதி அளிக்கும் வகையில் இந்த திட்டம் நிச்சயமாக
அமையும் என்று தொழிலாளர் அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...