இராமநாதபுரம் மன்னராக இருந்தவர் பாஸ்கர சேதுபதி. இவர் ஆன்மீகத்தில்
அறிவாற்றல் மிக்கவராகவும் சொறபொழிவு நிகழ்த்துவதில் வல்லவராகவும்
திகழ்ந்தார். அதனால் அமெரிக்காவில் உள்ள சிகாகோவில் நடக்க இருந்த உலக
ஆன்மீக மாநாட்டில், இந்து மதத்தின் பிரதிநிதியாகக் கலந்து கொள்ள மன்னருக்கு
அழைப்பு வந்தது. இந்த அழைப்பு மன்னருக்கு வந்த வேலையில்தான் விவேகானந்தர்
இராமநாதபுரம் வந்திருந்தார்.
விவேகானந்தருக்கும் மன்னருக்கும் அறிமுகம் ஏற்பட்டது.
அறிமுகம் நட்பாக மாறியது. நட்பு விவேகானந்தரிடம் மன்னரை பக்தி செலுத்த
வைத்தது. விவேகானந்தர் அறிவாற்றலும், ஆன்மீகச் சிந்தனையும் தெளிந்த
பார்வையும், தேர்ந்த ஞானமும் மன்னரை வியக்க வைத்தது. அதனால் தம்மைவிடச்
சிறந்தவரான விவேகானந்தர் சிகோகோ செல்வதே சிறந்தது என்று மன்னர் முடிவு
செய்தார். முடிவை விவேகானந்தரிடம் தெரிவித்தார். யோசித்துச் சொல்வதாகச்
சொல்லிவிட்டு விவேகானந்தர் மன்னரிடம் விடைபெற்றார்.
அதன்பின் தாம் அமெரிக்கா செல்வதாக விவேகானந்தர் சென்னையிலிருந்து
அறிவித்தார். அதையறிந்த இராமநாதபுரம் மன்னர் பாஸ்கர சேதுபதி, விவேகானந்தர்
அமெரிக்கா செல்வதற்கு வேண்டிய ஏற்பாடுகளை செய்தார். 1893 மே 31 அன்று
அமெரிக்கா புறப்பட்ட விவேகானந்தர், ஜூலை மாதத்தில் அமெரிக்காவில் உள்ள
சிகாகோவை அடைந்தார். உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொள்வதற்கு முன்
மெட்காப் என்ற நகரில் மகளிர் மன்றக் கூட்டத்தில் இந்தியப் பெண்கள் என்ற
தலைப்பில் விவேகானந்தருக்குப் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. இதுதான்
அமெரிக்க மண்ணில் ஒலித்த விவேகானந்தரின் முதல் முழக்கமாகும். பெண்கள்
நிறைந்த அந்த மாநாட்டில் விவேகானந்தரின் முழக்கம் எழுச்சியோடு
வரவேற்கப்பட்டது. இந்த மாநாட்டில் கலந்துகொண்ட ஒரு இளம் பெண்
விவேகானந்தரின் மீது அளவற்ற அன்பு கொண்டாள். அதனால் அமெரிக்காவில்
விவேகானந்தரின் ஒவ்வொரு காலடியையும் இந்த இளம் பெண் உன்னிப்பாகக் கவனிக்கத்
தொடங்கினாள்.
இந்த மாநாட்டிற்குப் பின் உலக ஆன்மீக மாநாட்டில் கலந்து கொண்ட
விவேகானந்தர், அனைத்துச் சமயத்தைச் சார்ந்தவர்கள் பேசுவதையும் கவனித்தார்.
அங்கு பேசிய மேலைநாட்டு மத போதகர் அனைவரும் “ஜென்டில்மேன்” என்று தங்களின்
பேச்சைத் தொடங்கினர். இந்த வார்த்தை கூடியிருப்போருக்கும்,
சொற்பொழிவாளருக்கும் இடைவெளி ஏற்படுத்துவதாக விவேகானந்தர் எண்ணினார்.
செப்டம்பர் 1-ம்தேதி விவேகானந்தர் பேச வேண்டிய முறை வந்தது. அவர் மேடை
ஏறியதும், வேடிக்கைப் பொருளைப் பார்ப்பதுபோல் அனைவரும் விவேகானந்தரைப்
பார்த்தனர். அவருடைய காவி உடையும், தலைப்பாகையும் மேலை நாட்டவர்களுக்குச்
சிரிப்பை உருவாக்கியது. பேண்ட், கோர்ட், டை என் மேடையில் பேசியவர்கள்
மத்தியில் இப்படியொரு கோலத்தில் விவேகானந்தர் மேடையில் தோன்றியதும்,
கூடியிருந்தோரில் பலர் முகம் சுளித்தனர். இதுபற்றி அவர் கவலை கொள்ளவில்லை;
கண்டு கொள்ளவும் இல்லை.
சிறப்புமிக்க சிகாகோ பேச்சு
சகோதர சகோதரிகளே! என்று தமது சொற்பொழிவைக் கம்பீரமாக விவேகானந்தர்
தொடங்கினார். ஏளனம் செய்தவர்கள் வாய் மூடினர். ஆடையைக் கண்டு
அறுவறுப்டைந்தவர்கள் ஆச்சரியப்பட்டனர். சிறிது இடைவெளிவிட்டு மீண்டும்
விவேகானந்தர் தமது பேச்சைத் தொடங்கினார். அரங்கம் முழுவதம் அவரையே
பார்த்தது; அவர் பேச்சை மட்டுமே கேட்டது; அவர் சொல்வதைத் தங்கள் மனதில்
பதிந்து கொண்டது. இந்தக் கூட்டத்தில ஆடையிலும், தோற்றத்திலும் அவர் தனித்து
நின்றார் மேடை முழக்கத்திலும் அவரே தனித்து வென்றார். பேசி முடித்த பின்
அவரைத் தொடர்ந்து ஒரு கூட்டமே வந்தது. அந்தக் கூட்டத்தில் மெட்காப்’ நகர்
மகளிர் மன்றத்தில் விவேகானந்தர் பேசிய போது மனதைப் பறிகொடுத்த அந்த இளம்
பெண்ணும் இருந்தாள். இந்த மாநாட்டில் மீண்டும் செப்டம்பர் 15, 19, 20 ஆகிய
மூன்று நாட்கள் விவேகானந்தர் முழங்கினார். அப்போது, “அளவுக்கு மீறிய
மதப்பற்று, மூடபக்தி இவற்றிலிருந்து தோன்றிய மதவெறி, இவை இந்த அழகிய உலகை
நெடுநாளாகப் இறுகப் பற்றியுள்ளன; வன்முறையை நிரப்பியுள்ளன; அடுத்தடுத்து
உலகை உதிரப் பெருக்கில் மூழ்கடித்து, நாகரீகத்தை அழித்து, எத்தனையோ
சமுதாயங்களை நம்பிக்கை இழக்கச் செய்து விட்டன.
அந்தப் பயங்கரப் பைசாக் கொடூரச் செயல்கள் தோன்றாதிருப்பின், மனித சமுதாயம்
இன்றிருப்பதை விடப் பன்மடங்கு உயர் நிலை எய்திருக்கும் என்று விவேகானந்தர்
முழங்கினார். விவேகானந்தர் பேசிவிட்டு வெளியில் வந்ததும் ஒரு பெரும்
கூட்டம், அவரிடம் கையெழுத்துப் பெறுவதற்காகக் காத்திருந்தது அதன்பின்
விவேகானந்தரின் மந்திரச் சொற்பொழிவைக் கேட்டு மயங்கிய அமெரிக்கர்கள்,
அயோவா, செயிண்ட் லூயிஸ், கேம்பிரிட்ஜ், வாஷிங்டன், நியூயார்க் ஆகிய
இடங்களில் எல்லாம் விவேகானந்தரைப் பேச வைத்து மகிழ்ந்தனர். விவேகானந்தர்
அமெரிக்காவில் இருந்தபோதே அவருடைய சொற்பொழிவுகள் நூல்வடிவம் பெற்று
அமெரிக்க மக்களிடத்தில் மகத்தான வரவேற்பைப் பெற்றன.
அமெரிக்காவில், சிகாகோ நகரத்தில் 1893 செப்டம்பர் 11 ஆம் நாள் நடைபெற்ற
“சர்வ சமயப் பேரவை’யில் விவேகானந்தர் நிகழ்த்திய இந்த சொற்பொழிவு, அவரது
விவேகத்திற்கு ஓர் எடுத்துக்காட்டு.
அமெரிக்க நாட்டின் சகோதரிகளே, சகோதரர்களே!
இதயம் கனிந்த உங்கள் வரவேற்புக்கு பதிலளிப்பதற்கு, இப்போது நான் உங்கள் முன் நிற்கிறேன்.
என் இதயத்தில் மகிழ்ச்சி பொங்குகிறது. அதை வெளியிடுவதற்கு எனக்கு
வார்த்தைகள் இல்லை. உலகத்தில் மிகவும் பழமை வாய்ந்த சந்நியாசிகள்
பரம்பரையின் பெயரால், நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
அனைத்து மதங்களின் தாய் மதமாகிய இந்துமதத்தின் பெயரால், நான் உங்களுக்கு
நன்றி கூறுகிறேன். பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த கோடிக்கணக்கான இந்துக்களின்
பெயரால், நான் உங்களுக்கு நன்றி கூறுகிறேன்.
இந்த மேடையில் எனக்கு முன்பு சொற்பொழிவாளர்கள் பேசினார்கள். அவர்களில்
சிலர், கிழக்கு நாடுகளிலிருந்து வந்திருக்கும் பிரதிநிதிகளைப் பற்றிக்
குறிப்பிடும்போது, “மற்ற மதங்களை வெறுக்காத பண்பைப் பல நாடுகளுக்கும்
எடுத்துச் சென்ற பெருமை தொலைவில் உள்ள நாடுகளிலிருந்து வந்திருக்கும்
இவர்களையே சேரும்’ என்று உங்களுக்குக் கூறினார்கள், அவர்களுக்கும் என்
நன்றி.
பிற மதக்கொள்கைகளை வெறுக்காமல் மதித்தல் அவற்றை எதிர்க்காமல் ஏற்றுக்
கொள்ளுதல் ஆகிய இரண்டு பண்புகளை உலகத்திற்கு வழங்கிய ஒரு மதத்தைச்
சேர்ந்தவன் நான் என்பதில் பெருமை அடைகிறேன்.
“எந்த மதத்தையும் வெறுக்காமல் மதிக்க வேண்டும்’ என்னும் கொள்கையை நாங்கள்
நம்புவதோடு, “எல்லா மதங்களும் உண்மை’ என்றும் நாங்கள் ஏற்றுக் கொள்கிறோம்.
உலகிலுள்ள எல்லா நாடுகளாலும் எல்லா மதங்களாலும்
கொடுமைப்படுத்தப்பட்டவர்களுக்கும் தங்கள் நாட்டைவிட்டு
துரத்தப்பட்டவர்களுக்கும் புகலிடம் அளித்த நாட்டைச் சேர்ந்தவன் நான்
என்பதில் பெருமைப்படுகிறேன்.
ரோமானிய மக்களின் கொடுமையால், இஸ்ரேல் மக்களின் திருக்கோயில் சிதைந்து
சீரழிந்தது. அப்போது எஞ்சியிருந்த இஸ்ரேல் மக்கள், அதே வருடம்
தென்னிந்தியாவிற்கு வந்தார்கள். அவ்விதம் எங்களிடம் தஞ்சமடைந்த இஸ்ரேல்
மக்களை, மனதார ஏற்றுக் கொண்டவர்கள் நாங்கள் என்று சொல்லிக் கொள்வதில் நான்
பெருமைப் படுகிறேன்.
பெருமை மிக்க ஜொராஷ்டிரிய மதத்தைச் சேர்ந்தவர்களில் எஞ்சியிருந்தவர்களுக்கு
அடைக்கலம் அளித்து, இன்றும் பாதுகாத்து வருகிற ஒரு மதத்தைச் சேர்ந்தவன்
நான் என்பதில் பெருமைப்படுகிறேன்.
என் சகோதரர்களே! கோடிக்கணக்கான இந்திய மக்கள் நாள் தோறும், இன்றும்
தொடர்ந்து ஒரு துதிப்பாடலைச் சொல்லி வருகிறார்கள். நான் என்
சிறுவயதிலிருந்து சொல்லி வரும் அந்தத் துதிப்பாடலின் சில வரிகளை, இங்கு
உங்களிடம் சொல்ல விரும்புகிறேன்:
“பல்வேறு ஆறுகள், பல்வேறு இடங்களில் தோன்றினாலும் முடிவில் அவை ஒரே கடலில்
சென்று கலக்கின்றன. அதுபோல், பலவிதமான மனப்பான்மை கொண்டவர்கள் பின்பற்றும்
வழிமுறைகள் நேரானவையாகவும் குறுகலானவையாகவும் தோற்றம் அளித்தாலும் இறைவா,
முடிவில் அவை உன்னிடமே அழைத்துச் செல்கின்றன.’
இந்தப் பேரவை, இது வரையில் நடந்த மாநாடுகளில் மிகவும் சிறந்தது. இந்த
மாநாடு கீதையில் சொல்லப்பட்டிருக்கும் பின்வரும் அற்புதமான ஓர் உண்மையை
உலகத்திற்குப் பிரகடனம் செய்திருக்கிறது:
“யார் என்னை எப்படி வழிபடுகிறார்களோ, அவர்களை அப்படியே நான்
வழிநடத்துகிறேன். மனிதர்கள் எப்போதும் என்னுடைய வழியையே
பின்பற்றுகிறார்கள்.’
மத வேறுபாடுகளாலும், மதக்கொள்கைகளில் அளவுக்கு மீறிய பிடிவாதத்தாலும்
ஏற்பட்ட மதவெறி, இந்த அழகான இறுக்கிப் பிடித்திருக்கிறது. அவை இந்தப்
பூமியை வன்முறையால் நிரப்பியிருக்கிறது.
இது போன்ற வன்முறைகள் உலகத்தை இரத்த வெள்ளத்தில் மீண்டும் மீண்டும்
மூழ்கடித்தது. அது நாகரிகத்தை அழித்து, எத்தனையோ நாடுகளை நிலைகுலையச்
செய்துவிட்டது. அந்தக் கொடிய அரக்கத்தனமான செயல்கள் இல்லாமல்
இருந்திருந்தால் மனித சமுதாயம் இன்று இருப்பதைவிட பல மடங்கு உயர்ந்த நிலை
அடைந்திருக்கும்.
இத்தகைய கொடிய செயல்களுக்கு இப்போது அழிவு காலம் வந்துவிட்டது. இன்று
காலையில் இந்தப் பேரவையின் ஆரம்பத்தைக் குறிப்பிடுவதற்கு மணியோசை
முழங்கியது. அந்த மணியோசை எல்லா மதவெறிகளுக்கும் வாளாலும் பேனாவாலும்
நடைபெறுகின்ற கொடுமைகளுக்கும் மக்களிடம் நிலவும் இரக்கமற்ற
உணர்ச்சிகளுக்கும் சாவு மணியாகும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.
Why dont we have these information in text books, so that atleast next generation will have a clear path
ReplyDelete