விசாரணை குழுவின் அறிக்கையின் அடிப்படையில் 31 பேராசிரியர்களின் நியமனத்தை ரத்து செய்து இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் பிறப்பித்த உத்தரவை சென்னை ஐகோர்ட்டு ரத்து செய்துள்ளது.
சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகம் கடந்த 2012-ம் ஆண்டு
செப்டம்பர் மாதம், 63 பேராசிரியர்கள், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள்
பணியிடங்களுக்கு விண்ணப்பம் கோரி விளம்பரம் செய்தது. இதன்படி, நடந்த
தேர்வில் 33 பேர் தேர்வு செய்யப்பட்டார் கள். இவர்களது தேர்வுக்கு
பல்கலைக்கழகத்தின் நிர்வாக கவுன்சில் ஒப்புதல் அளித்தது. இதையடுத்து,
அவர்கள் அனை வருக்கும் பணி நியமன உத்தரவு வழங்கப்பட்டது. அதில், 2 பேரை
தவிர 31 பேர் பணியில் சேர்ந்தனர்.
நியமனம் ரத்து
இந்த நிலையில், இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்தில் முறைகேடு நடந்துள்ளதாக
எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில், அதுகுறித்து விசாரிக்க ‘கேப்டன்’
மோகன் குழுவை கடந்த 2013-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் மத்திய அரசு நியமித்தது.
இந்த குழு விசாரணை நடத்தி தாக்கல் செய்த அறிக்கையின் அடிப்படையில்,
பேராசிரியர்கள், இணை மற்றும் உதவி பேராசிரியர்கள் பதவிக்கு 31 பேரை நியமனம்
செய்த உத்தரவை ரத்து செய்து, கடல்சார் பல்கலைக்கழகம் உத்தரவிட்டது. இந்த
உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது.
சட்டப்படி தவறு
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ் பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:-
பேராசிரியர் பதவிக்கு தேர்வு செய்யப்பட்டவர்கள் உரிய தகுதியை
கொண்டுள்ளார்கள். அவர்களது தேர்வினை பல்கலைக்கழகத்தின் தேர்வு குழுவும்,
நிர்வாக கவுன்சிலும் ஒப்புதல் அளித்துள்ளது. இவர்களது தேர்வு, முறையாக
நடந்துள்ளது.
அப்படி இருக்கும்போது, கேப்டன் மோகன் குழுவின் அறிக்கையின் அடிப்படையில்,
இவர்களது நியமனத்தை ரத்து செய்தது சட்டப்படி தவறாகும். எனவே,
பேராசிரியர்கள் நியமனத்தை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து
செய்கிறேன்.
பலன்கள்
அவர்கள் எப்போது பணியில் சேர்ந்தார்களோ, அன்று முதல் அவர்களது பணியை
வரன்முறை செய்து, அவர்களுக்கு வழங்கவேண்டிய பண பலன்கள், பதவி உயர்வு
உள்ளிட்டவைகளை முறையாக வழங்க வேண்டும்.
இவ்வாறு நீதிபதி கூறியுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...