தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பேருந்து விபத்தில் சிக்கியதால் தேர்வு எழுத
முடியாத நிலைக்கு ஆளானதை எண்ணி கவலையில் இருந்த பிளஸ் 2 மாணவிக்கு
அமைச்சர்கள் ஆறுதல் கூறினர்.
பாலக்கோடு வட்டம் மல்லுப்பட்டி பகுதியைச் சேர்ந்த
மாரப்பன் மகள் மகேஸ்வரி (17). இவரும் ஒகேனக்கல் பேருந்து விபத்தில் பலத்த
காயமடைந்து தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை
பெற்று வருகிறார். காயம்பட்டவர்கள் மற்றும் இறந்தவர்களின் குடும்பத்தாரை
போக்குவரத்துத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி, உயர்கல்வித் துறை அமைச்சர்
பழனியப்பன் ஆகியோர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, நிவாரண தொகைக்கான
காசோலைகளையும் வழங்கினர்.
மகேஸ்வரிக்கும் நிவாரணத் தொகைக்காக காசோலையை அமைச்சர்கள் வழங்கி ஆறுதல்
கூறினர். அப்போது மகேஸ்வரி விம்மி அழத் தொடங்கினார். அமைச்சர்கள் அவரைத்
தேற்ற முயன்றபோது தான் அவர் காயத்தால் ஏற்பட்ட வேதனையை விட பிளஸ் 2 தேர்வை
எழுத முடியாமல் போனதைக் கருதி கவலையில் அழுகிறார் என்பது தெரிய வந்தது.
மகேஸ்வரி மல்லுப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 2 அறிவியல் குரூப்
பயின்று வருகிறார். மார்ச் 5 தேதி பிளஸ் 2 தேர்வு துவங்க உள்ள நிலையில்
விபத்தில் மகேஸ்வரி பலத்த காயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகிறார்.
தேர்வுக்கு சுமார் 40 நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் காயமடைந்திருப்பதால்
மகேஸ்வரி தேர்வுக்கு படிக்கவும், தேர்வு எழுதவும் முடியாத நிலை
ஏற்பட்டுள்ளது. இதை நினைத்து அவர் தொடர்ந்து அழுது வருகிறார். இதை அறிந்த
அமைச்சர்கள் இருவரும் உடல்நிலை தேறட்டும் தேர்வை பார்த் துக் கொள்ளலாம்
என்று அந்த மாணவிக்கு ஆறுதல் கூறிச் சென்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...