முதலில் இரண்டு செய்திகள். ஒன்று ‘எல்லோருக்கும் கல்வி’ என்ற குறிக்கோளை,
உலகம் நிறைவேற்ற முடியாமல் முடங்கி கிடப்பதற்கு இந்தியாதான் முக்கிய காரணம்
என்கிறது யுனெஸ்கோ. நம் நாட்டில் 37 சதவீதம் மக்கள் எழுத்தறிவு (கவனிக்க:
கல்வியறிவு அல்ல) இல்லாமல் இருப்பதாக அது தெரிவிக்கிறது.
இரண்டு, உயர் கல்வி வழங்குகிற நிறுவனங்களின் எண்ணிக்கையில் இந்தியா
முன்னணியில் உள்ளது. சமீபத்திய எர்னஸ்ட் - யங் அறிக்கையின்படி நம் நாட்டில்
44,668 கல்வி நிலையங்கள் உயர்கல்வி வழங்குகிறதாம். சீனாவில் 4192 என்றால்
அமெரிக்காவிலேயே 6,500 தான் உள்ளதாம்.
சரி, இந்த முரண் நிஜங்களை விவாதிப்பதற்கு முன் இன்னொரு முக்கிய புள்ளிவிவரத்தையும் பார்த்துவிடலாமே!
கல்வி மற்றும் பயிற்சிக்கான முக்கியமானச் சந்தையாக இந்தியா இருக்கிறது
என்கிறது இன்வெஸ்டர் ரிலேஷன் சொசைட்டி. தொடர்ந்து வருடா வருடம் வேலை
வாய்ப்புகள் பெருகும் துறை கல்வித்துறையே என்கிறது இண்டியன் ஜாப் அவுட்லுக்
சர்வே.
என் பார்வையில் 2014- ல் கல்வியின் முக்கிய போக்குகள் இவை தான்:
# ஆரம்பக் கல்வி சவலைப்பிள்ளையாய்தான் இருக்கிறது. கல்வி உரிமைச் சட்டம்
மற்றும் இன்ன பிற அரசாங்க, தனியார் மற்றும் அயலார் முயற்சிகள் சில
நகர்வுகளை ஏற்படுத்தினலும் வீச்சும் தரமும் இன்னமும் போதுமானதாக இல்லை.
அரசாங்கத்திடம் அதிக ஆதாயம் பெறும் கார்ப்பரேட்டுகள் கருணை காண்பித்தால்
சி.எஸ்.ஆர் புண்ணியத்திலும் சில மாறுதல்கள் கொண்டு வரலாம்.
# அதே போல ஆசிரியர் பயிற்சிக்கும், கல்வி முறை புதுப்பித்தலுக்கும்
இன்னமும் நிறைய முதலீடுகள் தேவை. 2014 ஆம் ஆண்டில் இவை சொல்லிக்கொள்ளும்
அளவு நடைபெறவில்லை.
# பள்ளிகளில் தாய்மொழி, கைத்தொழில், விளையாட்டு, கலை, நீதி போதனை போன்றவை
பின்னுக்குத் தள்ளப்பட்டுள்ளன. கணிதமும் அறிவியலும் ஆங்கிலமும்
முன்னிறுத்தப்படும் போக்கு வலுத்துள்ளது. நகரங்களை மிஞ்சும் வண்ணம்
கிராமங்களிலும் இவை தீவிரமாக வளர்ந்து வருகின்றன.
தனியார் பள்ளி மோகமும் ஆங்கிலம் பற்றிய
அச்சமும், பிற்கால வேலைக்கு இவை மட்டும்தான் பயன்படும் என்கிற நுகர்வோர் மன
நிலையும் முக்கியமான காரணங்கள்.
# திறன் பற்றாக்குறைதான் இந்தியாவின் பேராபத்து. 130 கோடிகள் கொண்ட மக்கள்
தொகையில் 80 கோடி மக்கள் வேலை பார்க்கக்கூடியவர்கள். திறனற்ற மாணவர்களை
உருவாக்கியதால் உலகம் முழுக்க நம் நாட்டவர் சென்று பணியாற்றக் கூடிய அற்புத
வாய்ப்பை தவற விட்டுக் கொண்டிருக்கிறோம்.
பொறியியல் மாணவர்களில் வெறும் 17 சதவீதமும், நிர்வாக மாணவர்களில் வெறும் 10
சதவீதமும்தான் வேலைக்குத் தகுதியானவர்கள் என்ற அதிர்ச்சியான
புள்ளிவிவரத்தை 2014- ல் சி.ஐ.ஐ நிறுவனம் ‘இண்டியா ஸ்கில் ரிப்போர்ட்’ டில்
சுடச்சுட வெளியிட்டுள்ளது. கல்வித்துறையைச் சாராமல் திறன் வளர்ப்பை
மேற்கொள்ள வேண்டும் என அது சொல்வதைக் கவனிக்க வேண்டும். பள்ளிகளில்
கைத்தொழில்கள் கற்றுத் தரும் காலம் தான் வருங்காலத்தைக் காப்பாற்றும்.
# கடந்த 20 வருடங்களாக பொறியியல் பட்டதாரிகள் தேவைக்கும் அதிகமாக
உருவாக்கப்பட்டுள்ளார்கள். தமிழகத்தில் ஒரு கோடிக்கு மேல் பொறியியல்
பட்டதாரிகள் அந்த வேலை கிடைக்காமல் இருப்பதாக ஒரு ஆய்வு சொல்கிறது.
பொறியியல் கல்லூரிகளில் காலி இடங்கள் அதிகரிப்பது மக்களின் விழிப்புணர்வைக்
காட்டுகிறது.
தமிழகத்தில் மட்டுமல்ல, வடக்கு மற்றும் மேற்கு மாநிலங்களிலும் இதுவே நிலை.
ஒரு Default Degree அந்தஸ்தை பி.ஈ துறப்பது ஒரு ஆரோக்கியமான போக்கு. கலைக்
கல்லூரிகளையும் மக்கள் சற்று ஏறெடுத்துப் பார்க்கும் வாய்ப்புகள்
தென்படுகின்றன.
# இந்தியாவின் 10 சதவீத மக்களுக்குத்தான் உயர்கல்விக்குச் செல்லும்
வாய்ப்பு உள்ளது. ஆனால் உயர்கல்விக்காக இங்கு ஒரு பெரிய சந்தை
உருவாகியுள்ளது. பல வெளி நாட்டு பல்கலைக் கழகங்கள் மெல்ல இங்கு கடை
விரிக்கும் போக்கு பெருகியுள்ளது. “மேக் இன் இண்டியா” கல்வித்துறையில்
பலமாக வெற்றிப் பெறும் எனத் தோன்றுகிறது. அது இந்தியர்களுக்கு பயன்பட
வேண்டும் என்பதுதான் என் அவா.
# வெளி நாட்டுக் கல்வி வாங்க விரும்பும் இந்தியர்களின் எண்ணிக்கை பெருகி
வருகிறது. வெளி நாட்டு பல்கலைக் கழகங்களும் இங்கு தொடங்கப்படுவதால் அயல்
நாட்டு கல்வி அனுபவங்கள் இங்கு கிடைப்பதன் பலன் கல்விக்காக
வெளிநாடுகளுக்குப் போவதைத் தடுக்குமா என்பதைப் பொறுத்துத்தான் பார்க்க
வேண்டும்.
# ஆன்லைன் கல்வி முறை பிரபலமாகி வருகிறது. 2014- ல் மட்டும் இந்தியாவின் பல
பெரிய பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகள் மூலம் உலகமெங்கும் மாணவர்களை
சேர்க்க ஆரம்பித்துள்ளன. Coursera போன்ற பன்னாட்டு முயற்சிகள் உலகின் எந்த
பல்கலைக்கழக படிப்பையும் உங்கள் மடிக்கணினியில் இலவசமாகத் தருவது இளைஞர்களை
வெகுவாக கவர்ந்துள்ளன.
எந்த அடிப்படையும் இல்லாமல் எந்தப் பாடத்தை வேண்டுமானாலும் சேர்ந்து
படிக்கலாம் எனும் வசதிதான் இதன் வெற்றிக்குக் காரணம். பாரம்பரியக்
கல்வியின் குரல்வளையை ஆன்லைன் கல்வி நெரிக்கும் என்பதில் எனக்கு
சந்தேகமில்லை.
#பெரியார் மிச்சம் வைத்த சீர்திருத்தத்தைத் தொழில்நுட்பம் செய்து
முடிக்கும். சாதி, மத, வர்க்க பேதமின்றி அவர்கள் வசதிக்குக் கல்வி கற்கும்
வசதி எல்லோருக்கும் வாய்க்கும் எனத் தோன்றுகிறது. கைப்பேசியில் மொபைல்
கல்வி வலைதளங்கள் 2015-ல் பிரபலமாகலாம்.
# இன்றைய பள்ளி மாணவர்கூட “மாதா பிதா கூகுள் தெய்வம்” என்கிறார். பத்தாவது
டியூஷன் போகும் மாணவர்கள் Khanacademy, Mertitnation வலைதளங்கள் சென்று
அதிலும் படிக்கிறார்கள். ஆசிரியரை மீறி கற்கும் வாய்ப்பும் விபரீதமும்
உள்ளன.
# பழைய அதிகாரங்கள் இழந்த நிலையில் தன் பங்களிப்பையும் மதிப்பை யும் தக்க வைக்கும் முனைப்புகள்தான் தற்கால ஆசிரியர்களின் சவால்கள்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...