எஸ்.எஸ்.எல்.சி.மற்றும் பிளஸ்-2 மாணவர்கள் 100
சதவீதம் தேர்ச்சி பெற வேண்டும் என்று அதற்கான வழிமுறைகளை தலைமை
ஆசிரியர்களுக்கு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி
உள்ளார்.
பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன்
தமிழ்நாட்டில் உள்ள அனைத்து முதன்மை கல்விஅதிகாரிகள், மாவட்ட கல்வி
அதிகாரிகள் வழியாக தலைமை ஆசிரியர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது:-
மூன்று நிலை மாணவர்கள்
தலைமை ஆசிரியர்களே, எஸ்.எஸ்.எல்.சி. மற்றும்
பிளஸ்-2 மாணவ-மாணவிகள் பெற்ற 8 அரையாண்டுத் தேர்வுக்கான மதிப்பெண்களை
வைத்து மாணவர்களை முதல்நிலை மாணவன், இடைத்தர மாணவன், கடைநிலை மாணவன் என
இனம் பிரித்துக் கொள்ளுங்கள். முதல்நிலை மாணவர்களும் இடைத்தர மாணவர்களும்
தேர்ச்சி பெறுவது திண்ணம். இருப்பினும் அவர்களுக்கும் காலத்தின் அருமையை
எடுத்துச் சொல்லி, நிறைய மதிப்பெண் பெற்று தேர்ச்சி பெற வேண்டும் என்பதனை
தெரிவித்துக்கொள்கிறேன்.
கலங்கரை விளக்கம்
மாணவர்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் பக்கமே
திரும்பக் கூடாது என்பதனையும் வலியுறுத்த வேண்டும். தன்னுடன் பயிலும் நல்ல
மாணவர்களுடன் மட்டும் நட்புக் கொள்ள வேண்டும் என்றும், பிற மாணவர்களின்
நட்பு கூடாது என்றும் அறிவுரை கூறுங்கள். நீங்கள் மாணவர்களின் கலங்கரை
விளக்கம் என்பதனையும், ஏற்றி விடும் ஏணி என்பதனையும் அறியாமைச்
சுழலிலிருந்து காப்பாற்றும் தோணி என்பதனையும் உணர்ந்து செயல்படுங்கள்.
வெற்றி பெறச்செய்யவேண்டும்
அரையாண்டுத் தேர்வில் தேர்ச்சி பெறாத
மாணவர்களையே நாம் இங்கு கடைநிலை மாணவர்கள் என்று கூற விழைகின்றோம். அந்த
மாணவர்களும் அரசுப் பொதுத் தேர்வில் வெற்றி பெறச் செய்ய வேண்டும்.
காலையில் சிறப்பு வகுப்பு : மாணவர்களின்
எதிர்கால நல்வாழ்வினைக் கருத்தில் கொண்டு தலைமையாசிரியர்களிடமும்
ஆசிரியர்களிடமும் தியாகத்தையும், சிறந்த கல்வித் தொண்டினையும் நான்
எதிர்பார்க்கின்றேன். காலையில் 8 மணிக்கெல்லாம் பத்தாம் வகுப்பு மாணவர்களை
பள்ளிக்கு வருகை புரியச் செய்தல் வேண்டும். அன்றைய தினம் தலைமையாசிரியரால்
நியமிக்கப்பட்ட குறிப்பிட்ட ஆசிரியர்களும் வருகை புரிந்து மாணவர்களை
வரிசையாக அமரச் செய்து அமைதியாகப் படிக்கும்படிச் செய்தல் வேண்டும். .
குழுவாகப் பிரித்து படிக்கச் செய்தல்
ஒவ்வொரு பிரிவிலும் உள்ள பத்தாம் வகுப்பு
மாணவர்களைப் பல குழுக்களாகப் பிரித்து மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப 6
முதல் 8 வரை இருக்கும் படியாகச் செய்தல் வேண்டும். இந்தக் குழுக்களுக்கு
முதல் நிலையிலுள்ள ஆளுமை மிக்க மாணவர்களைத் தலைமைப் பொறுப்பேற்று செயல்படச்
செய்தல் வேண்டும். ஒவ்வொரு குழுவிலும், இடைத்தர, கடைநிலை மாணவர்களும்,
தலைமைப் பொறுப்பேற்றது போக எஞ்சிய முதல்நிலை மாணவர்களும் இருத்தல் அவசியம்.
அன்றாடம் படிக்க வேண்டிய பகுதிகள் பாட ஆசிரியர்களால் பிரித்துத் தரப்பட
வேண்டும். சிறுவினா, குறுவினா, பெருவினா, மனப்பாடப் பகுதிகள் படித்து
ஒப்புவிக்கச் செய்தல் வேண்டும். ஒப்புவித்த பகுதிகள் இறுதியில் எழுதிக்
காண்பிக்கப்பட்டு திருத்தப்பட வேண்டும்.
சாப்பாட்டு நேரம்
மதிய உணவு இடைவேளை நேரம் : பத்தாம் வகுப்பு
மாணவர்களை, பத்து மணித்துளிகளில் மதிய உணவு உண்ணச் செய்து, எஞ்சிய
நேரத்தில் தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் ஆகிய ஐந்து
பாடங்களுக்கும் நேரம் சமமாகப் பிரித்து ஒதுக்கப்பட வேண்டும். அனைத்துப் பாட
ஆசிரியர்களும் அந்த வாரநாள்களுக்கான தேர்வு பகுதிகளை முன் கூட்டியே
பிரித்து மாணவர்களுக்கு அளித்திடல் வேண்டும். இதில் குழுக்கற்பித்தலில்
குறிப்பிடப்பட்ட சிறுவினா, குறுவினா, பெருவினா மற்றும் மனப்பாடப்
பகுதிகளும் கடிதம் மற்றும் கட்டுரைகளும் இடம் பெறுதல் வேண்டும். மாணவர்கள்
எழுதிய விடைத் தாள்கள் அந்தந்தப் பாட ஆசிரியர்களின் மேற்பார்வையில்
குழுக்கற்பித்தலில் தலைமைப் பொறுப்பேற்ற மாணவர்கள் போக எஞ்சிய முதல்நிலை
மாணவர்களை வைத்துத் திருத்தப்பட வேண்டும்.
மாலை நேரப் படிப்பு
மாலை நேரப்படிப்பின் போதும் மாணவர்கள் வரிசையாக
அமர்ந்து அமைதியாகப் படிக்கும் சூழ்நிலையை உருவாக்கித் தருதல் வேண்டும்.
மதிய உணவு இடைவேளையின் பொழுதும் நடத்தும் தேர்வுக்கான பகுதியைப் படிக்கச்
செய்தல் வேண்டும். இந்த மாலைப் பொழுதிலும் பிற்பகுதியை
குழுக்கற்பித்தலுக்கு ஒதுக்கலாம். ஆனால் மாணவர்கள் அமைதி காத்து செவ்வனே
செய்யும் படி பார்த்துக் கொள்ளுதல் வேண்டும். இந்த நேரத்தில் அனைத்துப் பாட
ஆசிரியர்களும் பங்கேற்று கற்றல் பணி செம்மையாக நடக்க உறுதுணை புரிதல்
கட்டாயம். மேலும் மாலை 6 மணிக்குள் மேற்பார்வைப் படிப்பு முடித்து விடுதல்
வேண்டும்.
கூட்டு முயற்சி
எந்தக் காரணத்தை முன்னிட்டும் மாணவர்கள் மாலை 6 மணிக்கு மேல் பள்ளி வளாகத்தில் இருப்பதைத் தவிர்த்து வீட்டிற்கு அனுப்பி வைக்க வேண்ட
ும். இந்தக் கூட்டு முயற்சியின் மூலம் நம்முடைய
‘நூற்றுக்கு நூறு’ தேர்ச்சி விழுக்காடு இலக்கினை அடைந்து பள்ளிக்கும்,
ஊருக்கும், கல்வித்துறைக்கும், தமிழ்நாடு அரசுக்கும் பெருமை சேர்ப்போம்.
இவ்வாறு பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...