தமிழகம் முழுவதும் 2 லட்சம் பேர் பங்கேற்கும் முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்
போட்டித் தேர்வு சனிக்கிழமை நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 499 தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கடந்த ஆசிரியர் தகுதித் தேர்வின்போது போலி
வினாத்தாள்கள் விற்பனை செய்யப்பட்ட தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில்
இந்தத் தேர்வுக்காகக் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
வினாத்தாள் மையங்களில் ஆயுதமேந்திய போலீஸார் பாதுகாப்புப் பணியில்
ஈடுபட்டுள்ளனர். அதோடு, ஒவ்வொரு வினாத்தாள் மையத்திலும் சி.சி.டி.வி.
கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகின்றன.
தருமபுரியில் உள்ள இணைய சேவை மையங்கள், நகலகங்கள், பாலங்கள் உள்ளிட்ட
மறைவான இடங்களில் போலீஸார், அரசு அலுவலர்கள் கண்காணிப்பில்
ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மாவட்ட ஆட்சியர் விவேகானந்தன், மாவட்ட போலீஸ் எஸ்.பி. லோகநாதன் ஆகியோருடன்
பள்ளிக் கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உள்ளிட்ட அதிகாரிகள் இந்த
மாவட்டத்தில் தேர்வுப் பணிகளை மேற்பார்வையிட்டு வருகின்றனர்.
தருமபுரி மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள 20 தேர்வு மையங்களில் 8,566 பேர் இந்தத் தேர்வை எழுத உள்ளனர்.
கிருஷ்ணகிரியில் விடியோ...: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அனைத்துத் தேர்வு
மையங்களும் விடியோவில் பதிவு செய்யப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த மாவட்டத்தில் இரவு 8 மணிக்குப் பிறகு நகலகங்கள் இயங்கக் கூடாது என
அறிவுறுத்தப்பட்டது. அதோடு, திருமண மண்டபங்கள், சமூக நலக் கூடங்கள்,
தங்கும் விடுதிகளில் காலை, மாலை வேளைகளில் போலீஸார் சோதனையிட்டனர்.
இந்த மாவட்டத்தில் 20 தேர்வு மையங்களில் 6,713 பேர் தேர்வு எழுதுகின்றனர்.
சென்னையில்....: சென்னையில் 34 மையங்களில் 15,050 பேர் இந்தத் தேர்வை எழுதுகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...