முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் போட்டித் தேர்வுக்காக 1.50 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளை (ஹால் டிக்கெட்) பதிவிறக்கம் செய்துள்ளனர்.
1,807 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்களைத் தேர்வு செய்வதற்கான போட்டித்
தேர்வு சனிக்கிழமை (ஜன.10) நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்கான தேர்வுக்கூட
அனுமதிச் சீட்டு சில வாரங்களுக்கு முன்பு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டது.
தேர்வுக்காக 2 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இதுவரை 1.50
லட்சத்துக்கும் அதிகமானோர் தங்களது தேர்வுக்கூட அனுமதிச் சீட்டுகளைப்
பதிவிறக்கம் செய்துள்ளனர். தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளவர்கள் உடனடியாக
தங்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச்சீட்டைப் பதிவிறக்கம் செய்துகொள்ள
வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் கூறியது: இந்தத் தேர்வுக்காக தமிழகம்
முழுவதும் 400-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. தேர்வு
மையங்கள் பெரும்பாலும் நகர்ப்புறங்களில் அமைக்கப்பட்டுள்ளன. தேர்வர்கள்
முன்கூட்டியே தங்களது தேர்வு மையங்களுக்குச் சென்று முகவரியைத்
தெரிந்துகொண்டால், தேர்வு நாளன்று பதற்றத்தைத் தவிர்க்கலாம்.
மாவட்ட ஆட்சியர்கள், கல்வித் துறை அதிகாரிகள், தேர்வறை கண்காணிப்பாளர்கள்
என சுமார் 4 ஆயிரம் பேர் இந்தத் தேர்வுக்கான கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட
உள்ளனர்.
வினாத்தாள்கள், விடைத்தாள்கள் வைக்கப்பட்டுள்ள மையங்கள் 24 மணி நேரமும்
சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படுகின்றன. பிளஸ் 2, பத்தாம்
வகுப்பு பொதுத் தேர்வுகளைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியத்தின்
முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் தேர்விலும் தேர்வர்களின் புகைப்படங்கள்,
விடைத்தாள் எண், ரகசியக் குறியீடுகள் ஆகியவற்றுடன் விடைத்தாள்கள்
அச்சிடப்பட்டுள்ளன.
இதன்மூலம் விடைத்தாள் விவரங்களைப் பதிவு செய்வதில் தவறுகளைக் குறைக்கலாம்.
மாவட்ட ஆட்சியர் தலைமையிலான குழுக்கள், பறக்கும் படையினர், பள்ளிக் கல்வி
அதிகாரிகள் என மூன்று விதமான குழுக்கள் ஒவ்வொரு மாவட்டத்திலும் தேர்வு
கண்காணிப்புப் பணிகளில் ஈடுபட்டிருப்பர். அதோடு, தேர்வு மையங்களுக்கு
போலீஸ் பாதுகாப்பும் வழங்கப்படும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள்
தெரிவித்தனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...