அகமதிப்பீட்டின் அவசியம் :
அன்று பிற்பகல் நேரம். தமிழாசிரியர் முழக்கம்
சனவரி இதழ் கிடந்தது. பொதுச்செயலர் அவர்கள் தனது மடலில் பத்தாம் வகுப்பு தமிழ் பாடத்திற்கான
அகமதிப்பீடு சார்ந்த கோரிக்கை அரசின் கவனத்தில் உள்ளதாக தெரிவித்திருந்தார்.
தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் இக்கோரிக்கை
பிறநிலை ஆசிரியர்களிடையே வரவேற்பினைப் பெறாததற்குக் காரணம் என்னவென யோசிக்கையில் பாடத்தளம்
குறித்து
புரிதல்கள் இன்னும் பரவலாக்கப்படவில்லையெனத் தோன்றியது.
ஒரு பாடத்தில் அதிக எண்ணிக்கையில் மாணவர்கள்
தோல்வி அடைந்தால் அதுகுறித்த
விவாதங்கள் ஆண்டு தோறும் நடைபெறுகின்றன. அது இறுதியில் ஆசிரியரின் திறன்குறை நிலையை
மையப்படுத்தி முடிந்துவிடும் . மாணவர்களின் திறன் அங்கு மையப்படுத்தப்படவில்லையென்பது
விவாதத்தின் ஒருசார்நிலையினை வெளிக்கொணர்வதை அனைவரும் அறிந்திருந்தாலும் அது பற்றி
எத்தரப்பிலும் கருத்துகள் எழுவதில்லை.
முன் ஆண்டுகளில் தமிழ்ப்பாடம் மாணவர்களுக்கு
எளிமையாக இருந்ததெனவும், இப்போது அவர்களுக்குக் கடினமாக மாறியது ஏன் எனவும் தற்போது
எங்கும் பரவலாகப் பேசிவரும் நிலையில் நாம் சில
முன்கருத்துவரைவுகளை எடுத்துக் காட்டுவது காலத்தின் கட்டாயமாகிறது.
சமச்சீர்கல்வி தமிழ்ப்பாட அமைப்பு இயல்பாகவே
அமைந்துள்ளது. அது மாணவர்க்கு கடினமாக இல்லையெனினும் அதன் போக்கு மாணவரை சுயசிந்தனை
நோக்கி இட்டுச் செல்கிறது என்பதில் இருவேறு கருத்தில்லை. ஆனால் திறன் சோதனை என்பது
வெறும் மதிப்பீட்டு நிலையிலேயே இங்கு உள்ளது. இது சுயசிந்தனை என்ற மைய இலக்கினின்றும்
விலகிச் செல்வதை கல்வியாளர்கள் கண்டு கொள்ளவில்லை என்பதே தமிழாசிரியர்களின் ஆதங்கம்.
தமிழ் இரண்டாம் தாளில் அறிதலுக்கு இருபது மதிப்பெண்களும்,
புரிதலுக்கு முப்பது மதிப்பெண்களும், பயன்படுத்தலுக்கு இருபத்தைந்து மதிப்பெண்களும்
திறனுக்கு இருபத்தைந்து மதிப்பெண்களும் வழங்கப்பட்டுள்ளன.
கட்டுரை,
கடிதம், படைப்பாற்றல் வினாக்களான கவிதை, சிறுகதை எழுதுதல் போன்றவை மாணாக்கர்களால் தன்
சுயசிந்தனை சார்ந்து எழுதப்படுகிறதாவென்றால் அது கேள்விக்குறிதான். என்னிடமே நிறைய
மாணவர்கள் கவிதை எழுதித்தருமாறு கூறி அதனை மனப்பாடம் செய்து தேர்வில் எழுதுவதை நான்
கண்டிருக்கிறேன். இது மாணவர்களின் அடைவுநிலையில் எத்தகு மாற்றத்தையும் ஏற்படுத்தப்
போவதில்லை. மாறாக மனப்பாடம் செய்யுந்திறனே அதிகரிக்கும் .இது மாணவரின் திறன் சோதனைக்கு
முரணாக அமைந்துள்ளதை மறுக்கவியலாது. மாணவர் திறனை மதிப்பீடு செய்வதில் புறத்தேர்வு
முழுஅளவுகோலாக இருக்கவியலாது என்பது கல்வியாளர்களாலேயே ஏற்றுக்கொள்ளப்பட்ட கருதுகோள்
ஆகும். இச்சூழலில் இதிறன் சோதனையை அகத்தேர்வாக மதிப்பீடு செய்வது மாறிவரும் கல்விச்சூழலில்
அவசியமான ஒன்றென்றே நாங்கள் கருதுகிறோம்.
மாணவர்கள் ஏற்கனவே ஒன்பதாம் வகுப்பில்
செயல்திட்டம் என்ற அகஒப்படைவு ஒன்றை வழங்கி வருகின்றனர். இது அவர்களின் களப்பயணம்,
சமூகச் சிக்கல்கள், வாழ்வியல் சூழல், குடும்ப அமைவு போன்றவை சார்ந்ததாகவே அமைகின்றது.
இச்செயல்திட்டம் தொடர் மற்றும் முழுமையான மதிப்பீட்டில் மாணவர்களுக்கு மிகுந்த தன்னம்பிக்கையினையும்
முழுத்திறன் அடைவையும் வெளிக்கொண்ர்ந்துள்ளது என்பது கல்வியியளாளர்களின் ஆய்வு முடிவாகும்.இவ்வக
ஒப்படைவு பத்தாம் வகுப்பிலும் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவது மாணவனின் திறனைடவை வெற்றியாக்கும்.
இது மேல்நிலை வகுப்பிற்கான ஆயத்தமாகவும் அமையும் எனலாம்.
எனவே மாணவர்களின் திறன்களுக்கான அகமதிப்பீடு
காலத்தின் கட்டாயமாகும். அது மாணவர்களின் களப்பயணம், சமூகச்சிக்கல்களைத் தீர்க்கும்
நுண்ணறிவு, தலைமைப்பண்பு வெளிப்பாடு, ஆளுமை வளர்ச்சி, நல்லொழுக்க நெறி வழுவாமை, முன்னோர்களின்
தடம்பற்றல், மொழிப்பற்று போன்றவை சார்ந்து மதிப்பிடப்படல் வேண்டும். இரண்டாம் தாளில்
திறன் மதிப்பீடும், பயன்படுத்தல் மதிப்பீடும் அகமதிப்பீடாக வழங்கப்படின் கல்வியின்
மையப்பொருளான சுயசிந்தனை மேம்படலென்னும் குறிக்கோள் வெற்றியடையும். இது மாணவர்களை மனப்பாடப்
பாலைநிலத்திலிருந்து மீட்கும். மாணவர்களின் சுயகற்றலை மேம்படுத்தும். கல்வியாளர்கள்
கூறும் மனம்மகிழ் கற்றல் மாணவர்களுக்குக் கிட்டும். அரசு இது சார்ந்து விரைந்து முடிவெடுத்து
இக்கல்வியாண்டிலேயே மொழிப்பாடத்தில் அகமதிப்பீட்டினை நடைமுறைப்படுத்த வேண்டுமென்பது
தமிழகத் தமிழாசிரியர் கழகத்தின் கோரிக்கை மட்டுமல்ல. மனப்பாடம் செய்வதை வெறுக்கும்
கோடானுகோடி மாணவர்களின் அவாவுமாகும்.
சி.குருநாதசுந்தரம்,
மாவட்டச்செயலர்,
தமிழகத்
தமிழாசிரியர் கழகம்,
புதுக்கோட்டை.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...