வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வழிவகுக்கும் அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) செல்லாது என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
எஸ்.விமல்ராஜ், ஜி.ஜோசப் தாமஸ் ரிச்சர்டு, வி.முருகையா உள்பட ஐந்து பேர்
உயர் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தனர். அதில், நாங்கள் 2006-08-ஆம்
ஆண்டு ஆசிரியர் பயிற்சி படிப்பு முடித்தோம்.
அரசுப் பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் பணி நியமனம் வேலைவாய்ப்பு
அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படுகிறது.
இதற்கு, அரசுப் பணிகளின் விதி 10 (ஏ) வழிவகை செய்கிறது. இந்த விதியால்
நாங்கள் பாதிக்கப்படுகிறோம்.
இந்த விதி அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. எனவே, இந்த விதியை ரத்து
செய்ய வேண்டும், செல்லாதது என அறிவிக்க வேண்டும் என மனுவில் கோரினர்.
இந்த மனுவை விசாரணை செய்த தனி நீதிபதி அதை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை எதிர்த்து மனுதாரர்கள் ஐந்து பேரும் மேல்முறையீட்டு மனு
தாக்கல் செய்தனர். இந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள்
என்.பால்வசந்தகுமார், பி.ஆர்.சிவகுமார் ஆகியோர் அடங்கிய அமர்வு
விசாரித்தது.
விசாரணைக்குப் பிறகு நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: உயர் நீதிமன்றங்கள்,
கீழமை நீதிமன்றங்களில் காலிப் பணியிடங்களை நிரப்புவது தொடர்பான ஒரு
வழக்கில், வேலைவாய்ப்பு அலுவலகங்களிலிருந்து பதிவு மூப்புப் பட்டியல்
பெறுவது மட்டுமில்லாமல், இரண்டு பத்திரிகைகளில் காலிப்பணியிடங்களை
நிரப்புவது குறித்து விளம்பரம் செய்ய வேண்டும். அதில், ஒன்று, அதிகம்
படிக்கக் கூடிய வட்டார மொழி பத்திரிகையாக இருக்க வேண்டும்.
அவ்வாறு விளம்பரம் செய்து, அதன் மூலம் வரும் விண்ணப்பங்களைப் பரிசீலனை
செய்தும் பணி நியமனம் செய்ய வேண்டும் என கடந்த ஆண்டு உத்தரவிட்டது.
இதே போன்று, சென்னை உயர் நீதிமன்றமும் ஒரு வழக்கில் கடந்த ஆண்டு ஒரு
உத்தரவு பிறப்பித்தது. ஆனால், அரசுப் பணி விதி 10 (ஏ) வேலைவாய்ப்பு
அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் மட்டுமே பணி நியமனம் செய்ய வகை
செய்கிறது.
எனவே, இந்த விதியை செல்லாது என அறிவிக்கிறோம் என நீதிபதிகள் தங்களது உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...