கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை
ஜெர்மன் மொழிக்கு பதிலாக சமஸ்கிருதம் 3-வது மொழியாக பயிற்றுவிக்கப்படும்
என்றும், ஆனால் இந்த கல்வியாண்டில் சமஸ்கிருத பாடத்தில் தேர்வு நடத்தப்பட
மாட்டாது என்றும் மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்தது.
கடந்த அக்டோபர் 27-ந் தேதி மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி
ஸ்மிருதி இரானி தலைமையில் நடந்த கேந்திரிய வித்யாலயா சங்கதன் அமைப்பின்
நிர்வாக குழு கூட்டத்தில், மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா
பள்ளிகளில் ஜெர்மன் மொழி பாடத்தை ரத்து செய்து விட்டு, அதற்கு பதிலாக
சமஸ்கிருத பாடத்தை அறிமுகப்படுத்துவது என முடிவு எடுக்கப்பட்டது.
இதனால் நாடு முழுவதும் உள்ள 500 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் 6-ம்
வகுப்பில் இருந்து 8-ம் வகுப்பு வரை படிக்கும் சுமார் 70 ஆயிரத்துக்கும்
மேற்பட்ட மாணவ-மாணவியர் ஏற்கனவே படித்து வரும் ஜெர்மன் மொழிக்கு பதிலாக
புதிதாக சமஸ்கிருத மொழியை படிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. எனவே இதற்கு
பலத்த எதிர்ப்பு கிளம்பியது.
மத்திய அரசின் இந்த முடிவை ரத்து செய்யக்கோரி வி.எஸ்.ராமநாதன் உள்ளிட்ட
பெற்றோர் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடர்ந்து உள்ளனர்.
தேர்வு கிடையாது
இந்த மனு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் அனில் ஆர்.தவே மற்றும் குரியன்
ஜோசப் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது
மத்திய அரசின் சார்பில் ஆஜரான அட்டார்னி ஜெனரல் முகுல் ரோகத்கி, நடப்பு
கல்வியாண்டில் கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ-மாணவியர் ஜெர்மன் மொழி
பாடத்தை கூடுதல் பாடமாக தொடரலாம் என்றும், சமஸ்கிருத பாடத்தில் இந்த நடப்பு
கல்வியாண்டில் தேர்வு எதுவும் இருக்காது என்றும் மத்திய அரசு முடிவு
எடுத்துள்ளதாக தெரிவித்தார்.
இந்த முடிவு மத்திய அரசின் உயர் மட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவு என்று
கூறி, இது தொடர்பாக மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் இணைச்செயலாளர்
எழுதியுள்ள கடிதத்தின் நகலையும் கோர்ட்டில் அப்போது அவர் தாக்கல் செய்தார்.
கோர்ட்டு வழிகாட்டுதலின் படியும், மாணவ-மாணவியருக்கு ஏற்படும் மனஅழுத்தத்தை
குறைக்கும் வகையிலும் மூன்றாவது மொழியாக ஜெர்மன் பயிலும்
மாணவ-மாணவியருக்கு சமஸ்கிருதம் அல்லது வேறு இந்திய மொழிகளில் இந்த நடப்பு
கல்வி ஆண்டில் தேர்வு எதுவும் நடத்தப்படமாட்டாது என்று அந்த கடிதத்தில்
கூறப்பட்டு இருந்தது.
நீதிபதி கருத்து
இது நல்ல தீர்வு என்றும், புதிதாக அறிமுகப்படுத்தும் சமஸ்கிருத பாடத்தில்
தேர்வு எதுவும் நடக்காது என்றும் உறுதியளித்து இருப்பதால் மாணவர்களுக்கு
அழுத்தம் எதுவும் இருக்காது. ஒரு தந்தையாகவும் இதை நான் ஏற்றுக்கொள்ள
வேண்டும் என்று நீதிபதி அனில் ஆர்.தவே கருத்து தெரிவித்தார்.
அப்போது, மனுதாரர்களான கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் பயிலும்
மாணவ-மாணவியரின் பெற்றோர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல் ரீனா சிங், மத்திய
அரசாங்கம் தற்போது முன் வைத்திருக்கும் இந்த முடிவு குறித்து தன்னுடைய
கட்சிக்காரர்களுடன் கலந்து ஆலோசித்த பிறகு தங்கள் தரப்பு பதிலை முன்வைக்க
சிறிது அவகாசம் தேவை என்று கூறினார்.
ஒத்திவைப்பு
அதை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வழக்கு விசாரணையை வருகிற 8-ந் தேதிக்கு
ஒத்திவைத்தனர். பள்ளிகளில் சமஸ்கிருதத்தை அறிமுகம் செய்வது மாணவர்களின்
எதிர்காலத்துக்கு நல்லது என்றும் பொதுவாக அறிவுறுத்தினர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...