அண்ணாமலைப் பல்கலையில், எம்.பி.பி.எஸ்.
படிப்பிற்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத்தை குறைப்பதற்கு உத்தரவிட
முடியாது என்று தெரிவித்த சென்னை உயர்நீதிமன்றம், அதுதொடர்பான மனுவை
தள்ளுபடி செய்துவிட்டது.
சென்னை உயர்நீதிமன்றத்தில், சிதம்பரம் அண்ணாமலை
பல்கலைக்கழக மருத்துவ மாணவர்கள் அமீராபாத்திமா உட்பட,189 மாணவர்கள்
தாக்கல் செய்த மனு: அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், ராஜா முத்தையா மருத்துவ
கல்லூரியில், கடந்த 2013-2014ம் கல்வியாண்டில், எம்.பி.பி.எஸ். மற்றும்
பி.டி.எஸ். மருத்துவ படிப்பில் சேர்ந்தோம்.
அப்போது, இந்த பல்கலைக்கழகத்தை,
பல்கலைக்கழகத்தின் நிறுவனரின் குடும்பத்தை சேர்ந்தவர்கள் நிர்வகித்து
வந்தார்கள். பல்வேறு முறைகேடுகள் நடந்ததால், இந்த பல்கலைக்கழகத்தின்
நிர்வாகத்தை கடந்த கல்வியாண்டில் தமிழக அரசு எடுத்துக் கொண்டது. தற்போது,
தமிழக அரசு இந்த பல்கலைக்கழகத்தை நிர்வகித்து வருகிறது.
இந்த நிலையில், எம்.பி.பி.எஸ். படிப்புக்கு,
5.54 லட்சம் ரூபாய் எனவும், பி.டி.எஸ். படிப்புக்கு, 3.50 லட்சம் ரூபாய்
எனவும், ஆண்டு கல்வி கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. அரசு
நிர்வகிக்கும் கல்லூரி என்பதால், அரசு மருத்துவ கல்லூரியில் வசூலிக்கும்
கல்வி கட்டணத்தைதான் வசூலிக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும். இவ்வாறு,
மனுவில், மாணவர்கள் கோரியிருந்தனர்.
இம்மனு, நீதிபதி ராமசுப்பிரமணியன் முன்பு
விசாரணைக்கு வந்தது. அப்போது, அட்வகேட் ஜெனரல் ஏ.எல்.சோமயாஜி ஆஜராகி,
அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், கடந்த 20 ஆண்டுகளாக நடந்த தவறான நிர்வாகம்
மற்றும் முறைகேடினால், நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,
கல்விக் கட்டணத்தையும் குறைத்து விட்டால், பல்கலைக்கழக நிர்வாகம் செயல்பட
முடியாமல் முடங்கி விடும் நிலை ஏற்படும் என, வாதிட்டார்.
நீதிபதி பிறப்பித்த உத்தரவு
அண்ணாமலை பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும்
ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி மட்டும், கடந்த ஜூலை மாதம் நிதி
நிலவரப்படி, 385 கோடி ரூபாய் நஷ்டத்தில் இயங்குகிறது என தெரியவருகிறது.
எனவே, இந்த பல்கலைக்கழகத்தை நிர்வகிக்கும் அரசு, லாப நோக்கத்துடன் கல்வி
கட்டணத்தை நிர்ணயம் செய்யவில்லை. மருத்துவ கல்லூரிக்கு ஆகும் செலவினை
ஈடுசெய்ய, கட்டணத்தை நிர்ணயம் செய்துள்ளது. இந்த மருத்துவ கல்லூரி நிதி
ஆதாரம், அவசர சிகிச்சை பிரிவில் (மோசமான நிலையில்) உள்ளது.
இப்போது, கட்டணத்தை குறைக்க உத்தரவிட்டால்,
அந்த கல்லூரி இழுத்து மூட வேண்டிய நிலை ஏற்படும். கல்லூரியை மீண்டும்
நிறுவனரின் குடும்பத்தினரிடம் ஒப்படைக்க வேண்டிய நிலை வரும். எனவே, இந்த
மனுக்களை எல்லாம் தள்ளுபடி செய்கிறேன். இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...