‘‘வானத்துக்கு மேல
போர்வை மாதிரி ஓசோன் படர்ந்திருக்கு... அந்த ஓசோன்ல ஒரு ஓட்டை
விழுந்திடுச்சு. அதனால பூமிக்கு ஒடம்பு சரியில்லை. இதோ இந்த விதை
இருக்குல்ல... இதுதான் மாத்திரை... இதை பூமியோட வாய்க்குள்ள போட்டுட்டா
மரம் வந்திடும். மரம் வந்திட்டா பூமிக்கு உடம்பு குணமாயிடும்...- மழலை
மாறாத அந்த மாணவி, இயற்கையையும் பூமித்தாயையும் புரிந்து வைத்திருக்கும்
நுட்பத்தைக் கேட்கும்போது மனம் பரவசமாகிறது.
ஒரு குழந்தையின் மனதில்
கல்விக்கூடம் உருவாக்க வேண்டிய நுண்ணிய புரிதல் இது. அந்தப் புரிதலை
அச்சுப் பிசகாமல் குழந்தைகள் மத்தியில் உருவாக்குவதோடு குழந்தைகளின்
பங்களிப்போடு பள்ளியை ஒரு பசுமைப் பூங்காவாகவும் மாற்றியிருக்கிறார்கள்
சேதுபாவாசத்திரம் ஒன்றியத்தில் உள்ள சோழகனார்வயல் ஊராட்சி ஒன்றிய
தொடக்கப்பள்ளி ஆசிரியைகள் சாமுண்டீஸ்வரியும் மேரி மேகலாவும்!
வாழ்க்கையில் எந்தச்
சூழலிலும் பயன்படுத்த இயலாத ஒரு பாடத் திட்டத்தைத்தான் நம் பள்ளிகள்
சுமந்து கொண்டிருக்கின்றன என்று கல்வியாளர்கள் கவலைப்படும் காலம் இது.
வெறும் மதிப்பெண்களை பொரிக்கும் பிராய்லர் கோழிகளாக மாணவர்கள் உருவாகிக்
கொண்டிருக்கும் சூழலில் சோழகனார்வயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி அதே
பாடத்திட்டத்தை வாழ்க்கையின் இயல்புக்குள் நுழைந்து கற்றுக் கொடுக்கிறது.
குழந்தைகள் வில்லுப் பாட்டில் சுகாதாரம் பேசுகிறார்கள். சாலையில் விழுந்து
காயமடைந்து கிடப்பவருக்கு முதலுதவி செய்கிறார்கள். இந்தச் சின்ன வயதில்
விவசாயத்தைப் பற்றி முழு நுட்பமும் புரிந்து வைத்திருக்கிறார்கள்.
பூக்கொல்லையில்
இருந்து பெருமகளூர் செல்லும் சாலை இட்டுப் பிரிக்கிற சிற்றூர்
சோழகனார்வயல். காவிரியின் கடைமடை. முற்றிலும் விவசாயம் சூழ்ந்த ஊர். இந்த
ஊரின் மையத்தில் இருக்கிறது ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி.
தலைமையாசிரியர் செ.சாமுண்டீஸ்வரி. உதவி ஆசிரியை அ.மேரி மேகலா. படிப்பு,
வாசிப்பு, சரளமான ஆங்கில உச்சரிப்பு, இயற்கையின் மீதான நாட்டம், சமூக
அரசியல், கலை, தனித்திறன் மேம்பாடு, சுயசார்பு என கற்பித்தல் தாண்டியும்
குழந்தைகளை மேம்படுத்துகிறார்கள் இந்த ஆசிரியைகள். ஒரு மாணவனுக்கு ஒரு
விதை, ஒரு பிறந்த நாளுக்கு ஒரு செடி ஆகிய இரு திட்டங்களே இப்பள்ளியின்
முகத்தை பசுமையாக மாற்றியிருக்கின்றன.
மிகவும்
தன்னடக்கத்தோடு பேசுகிறார் தலைமையாசிரியர் சாமுண்டீஸ்வரி.“குடும்பத்தில
நிறைய ஆசிரியர்கள் இருக்காங்க. அதோடு, அன்பும் அக்கறையும் கொண்ட நிறைய
ஆசிரியர்களை பள்ளியில கடந்து வந்திருக்கேன். அது எல்லாம்தான் இந்த வேலை மேல
ஒரு ஈர்ப்பை உருவாக்குச்சு. ஒரு ஆசிரியையா மாணவர் களுக்கு எல்லா
விஷயத்திலயும் முன்மாதிரியா இருக்கணும்னு நினைப்பேன். குழந்தைகள் பெற்றோரை
விட ஆசிரியர்கள்கிட்டதான் நிறைய நேரம் இருக்காங்க. அதனால ஆசிரியர்களுக்கு
பொறுப்பு அதிகம். ஒரு பையன் நல்லவிதமா படிச்சு ஒரு பெரிய பொறுப்புக்குப்
போனால் ஆசிரியருக்குத்தானே பெருமை? ஒரு பையன் திசைமாறி தப்பு செஞ்சான்னா
அதுக்கும் ஆசிரியர் தான் பொறுப்பேற்கணும்.
இன்னைக்கு வெறும்
வார்த்தையால பிள்ளைகளுக்கு அறிவுரை சொன்னாப் போதாது. வாழ்ந்து காட்டணும்.
‘நாங்க இப்படி வளந்திருக்கோம். நீயும் இப்படி இரு’ன்னு சொன்னாத்தான் அவங்க
யோசிப்பாங்க. அவங்களுக்கு நம்மை விட நிறைய விஷயம் தெரிஞ்சிருக்கு.
ஊடகங்கள் அவங்களை உயரத்துக்கு எடுத்துக்கிட்டுப் போயாச்சு. ஆசிரியர்கள்
அதுக்குத் தகுந்த மாதிரி தயாராக வேண்டி யிருக்கு. தினம் தினம்
பிள்ளைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறதுக்கு முன்னாடி நாம புதுசா விஷயங்களைக்
கத்துக்க வேண்டியிருக்கு. மாணவர்களை உளவியல் ரீதியா அணுகவும் ஆசிரியர்கள்
தங்களை நிகழ்காலத்துக்கு ஏற்ப தயார் பண்ணிக்கவும் எங்க துறையில நிறைய
பயிற்சிகள் கொடுக்கிறாங்க.
எங்க பள்ளி ஏதோவொரு
விதத்துல முன்மாதிரியா இருக்குன்னா அதுக்கு அந்த பயிற்சிகள்தான் காரணம்.
பிள்ளைகளுக்கு நிறைய செயல்முறைப் பயிற்சிகள் கொடுக்கிறோம். அது நல்ல
புரிதலை உருவாக்குது. கிராமப்புற பிள்ளைகளுக்கு இருக்கிற பெரிய பிரச்னை
ஆங்கில உச்சரிப்பு. அதுக்கு நிறைய தனிப்பயிற்சிகள் கொடுக்கிறோம்.
குழந்தைகளை அடக்குறதில்லை. நிறைய பேச விடுறோம். பிரச்னைகளை விவாதிக்கச்
செய்றோம். தீர்வை யும் அவங்களையே சொல்லவும் வைக்கிறோம். அவங்க
தனித்திறமையை புரிஞ்சுக்கிட்டு அது தொடர்பான பயிற்சிகளைக் கொடுக்கிறோம்.
இந்தப் பகுதியைச் சுத்தி நிறைய ஆங்கிலப் பள்ளிகள் இருக்கு. பெற்றோர்அந்தப்
பள்ளிக்கூடங்களை நாடியே போய்க்கிட்டிருந்தாங்க. நாங்க வீடு வீடா போய்
பேசினோம்.
‘ஆங்கிலம்கிறது ஒரு
மொழி. அதுவே கல்வியில்லை. ஒரு குழந்தை எந்த வயசுல எதைக் கத்துக்கணும்கிறதை
பெரிய நிபுணர்கள் ஆய்வு செய்து முறைப்படி உருவாக்கப்பட்ட கல்வித் திட்டம்
அரசுப்பள்ளி கல்வித் திட்டம்தான். உங்களுக்காகத்தான் இந்தப் பள்ளிக்கூடம்.
உங்க குழந்தைக்காகத்தான் நாங்கள்... பிள்ளைகளை எங்ககிட்ட அனுப்புங்க.
தேவையான விஷயங்களை நாங்க கத்துக் கொடுக்கிறோம்’னு கேட்டோம்.
பெற்றோர்-ஆசிரியர் கழகத்தைச் சேர்ந்தவங்களும், ஊராட்சி மன்ற தலைவர்,
நிர்வாகிகளும் உதவியா நின்னாங்க. தனியார் பள்ளிகள்ல படிச்சுக் கிட்டிருந்த
பல குழந்தைகளை இப்போ எங்க பள்ளியில சேத்திருக்காங்க. இந்தப் பள்ளி ஏதோ ஒரு
விதத்துல முன்மாதிரியா மாறியிருக்குன்னா அதுக்குக் காரணம் எங்க ஏ.இ.ஓ.
சார் மற்றும் கல்வித்துறை அதிகாரிகளோட ஒத்துழைப்புதான்’’ என்கிற
சாமுண்டீஸ்வரி, “பள்ளியை பசுமைச்சூழலுக்குள் கொண்டு வந்த பெருமை உதவி
ஆசிரியை மேகலாவையே சேரும் என்கிறார்.
மேரி மேகலா
பெருமகளூரைச் சேர்ந்தவர். பெற்றோர் இருவரும் ஆசிரியர்கள். “விவசாயத்து மேல
இப்ப உள்ள தலைமுறைக்கு ஆர்வம் குறைஞ்சுக்கிட்டே போகுது. குழந்தைகளுக்கு
விவசாயத்தின் மேலயும் இயற்கை மேலயும் ஈடுபாட்டை உருவாக்கணும்.
சுற்றுச்சூழல் பிரச்னைகள் பற்றி புரிதலை உருவாக்கணும்கிற நோக்கத்துலதான்
ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு விதை திட்டத்தைக் கொண்டு வந்தோம். எங்கோ காய்த்த
ஒரு காய்கறி, எங்கோ பூத்த ஒரு பூன்னு இல்லாம நாம வச்ச செடியில காய்ச்ச
காய்கறி, நாம வச்ச செடியில பூத்த பூ, நாம வச்ச விதையில வளர்ந்த மரம்கிற
சந்தோஷம் பிள்ளைகளை உண்மையிலேயே குதூகலப்படுத்துது. அவங்க உலகத்தைப்
பசுமையாக்குது. உலகத்துல பிறந்த எல்லாருக்கும் இந்தப் பூமியில கடமைகள்
இருக்கு. அந்தக் கடமையைப் பிள்ளைகளுக்கு உணர்த்துறோம்.
முதல்ல இந்த இடம்
திறந்தவெளியாத்தான் கிடந்துச்சு. அதைச் செப்பனிட்டு முறைப்படுத்தினோம்.
விதைகள் சேகரிச்சோம். ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு விதை நடணும். அந்த விதை
கன்றாகி மரமாகும் வரை பராமரிக்கணும். அந்த மரத்துக்கு அந்தக் குழந்தையோட
பெயரையே வைப்போம். இப்போ 60க்கும் அதிக மரச்செடிகள் நிழல் தர்ற அளவுக்கு
இந்தப் பள்ளியைச் சூழ்ந்து நிற்குது. அஞ்சாம் வகுப்பு முடிச்சுட்டுப் போன
குழந்தைகள் கூட அவங்கவங்க மரத்தை இன்னும் பராமரிக்கிறாங்க. ஊர்ல இருந்து
யாராவது விருந்தாளி வந்தா, அவங்களை அழைச்சுக்கிட்டு வந்து, ‘இது நான் நட்டு
வளர்த்த மரம்’னு பெருமிதமாக் காட்டுறாங்க. அந்த பெருமிதத்துக்கு எதுவுமே
இணையில்லை.
பிள்ளைகளோட
பிறந்தநாளை எல்லாரும் சேர்ந்து கொண்டாடுவோம். அன்னைக்கு அந்தக் குழந்தை ஒரு
செடி நடணும். அதை எல்லோரும் சேர்ந்து பராமரிப்போம். இங்கே இருக்கிற எல்லா
செடிகள், மரங்களோடவும் இந்தப் பிள்ளைகளுக்கு நேரடி உறவிருக்கு.
குழந்தையைக் கொஞ்சுற தாய்மாதிரி மரத்தை தொடுறதும், அதோட விளையாடுறதுமா
ரொம்பவே குழந்தைகள் ஒன்றியிருக்காங்க. வீட்டுக்கு வரும்போது பிள்ளைகளுக்கு
பழங்கள், பிஸ்கெட் வாங்கிட்டு வர்றது மாதிரி, ஸ்கூலுக்கு வரும்போது
பெற்றோர்கள் மரக்கன்றுகளையும் விதைகளையும் எடுத்துட்டு வர்றாங்க.
இன்னைக்கு விவசாயத்துல நிறைய ரசாயனங்கள் சேக்குறாங்க. போன தலைமுறை
வரைக்கும் நாம சாப்பிட்ட காய்கறிகளே வேற. அந்த காய்கறிகளோட ருசியை இந்தத்
தலைமுறை அறியாது. உரம் போடாம பூச்சிக்கொல்லி அடிக்காம வளர்ந்து காய்க்கிற
காய்கறிகள் 60% ருசி அதிகமா இருக்கு மாம்.
நம்ம பாரம்பரியமான
இயற்கை வேளாண்மை பத்தி குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கிறோம். தியரியா
இல்லாம பிள்ளைகளே புரிஞ்சுக்கிட்டு செய்யணுங்கிறதால நாங்களே தோட்டமும் போட
ஆரம்பிச்சோம். அவரைக்காய், மொச்சை, முருங்கை, கத்தரி, பரங்கிக்காய்,
ஏழெட்டு கீரைகள், பூசணி, தக்காளின்னு நிறைய காய்கறிகள் போடுறோம்.
தொடக்கத்துல அந்தக் காய்கறிகளை சத்துணவுக்குப் பயன்படுத்தினோம்.
அதுக்கப்புறம் மொத்தமாப் பறிச்சு பிள்ளைகள் வீட்டுக்குப் பகிர்ந்து
கொடுத்து விட்டுடுவோம். இப்போ எங்க தோட்டத்துக்கு சிட்டுக்குருவி, தட்டான்,
தேனி, வண்ணத்துப்பூச்சியெல்லாம் வருது.
குழந்தைகளோட இயல்பே
மாறிடுச்சு. அதுமட்டுமில்லாம பள்ளிக்கூடத்தை கசப்பில்லாத,
விருப்பத்துக்குரிய இடமாவும் மாத்தியிருக்கு... என்கிறார்
மேகலா.குழந்தைகளை பள்ளிக்கு ஈர்ப்பதுதான் அரசுப்பள்ளிகள் எதிர்கொள்ளும்
பெரிய சவால். அதை எளிய முறையில், குழந்தைகளின் பங்களிப்போடு
சாதித்திருக்கிறது சோழகனார்வயல் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளி.
சாமுண்டீஸ்வரியும் மேகலாவும் தம் பள்ளித் தோட்டத்தில் ஒரு ஆக்கப்பூர்வமான
மாற்றத்தை விதைத்திருக்கிறார்கள்! -
அருமை!
ReplyDeleteவாழ்த்துக்கள்!
Super
ReplyDeleteI thank to follow me our student
ReplyDeleteReally super...congrats teachers...
ReplyDeletecongratulation teachers. ...
ReplyDeleteஅனைத்து பள்ளிகளும் நடைமுறை படுத்தவேண்டும்
ReplyDeleteதங்களது பணி தொடரட்டும். வாழ்த்துக்கள். வாழ்க வளமுடன்
ReplyDelete