''ஆசிரியர்களுக்கு, கலந்தாய்வு என்பது காசாய்வாக முடிகிறது'' என, தமிழ்நாடு ஆசிரியர் மன்ற செயலர் மீனாட்சிசுந்தரம் குற்றஞ்சாட்டியுள்ளார்.
திருவாரூரில், அவர் கூறியதாவது: தமிழக தேர்தல் ஆணையரை சந்தித்து, பல
கோரிக்கைகளை வைத்துள்ளோம். கர்ப்பிணிப் பெண்கள், கைக்குழந்தை வைத்துள்ள
பெண்கள், இதய நோயாளிகள் ஆகியோருக்கு, தேர்தல் பணியிலிருந்து விலக்கு அளிக்க
வேண்டும்; பாதுகாப்பான போக்குவரத்து வசதியுள்ள நகர்ப்புற பகுதிகளில்
மட்டுமே, பெண்களை தேர்தல் பணியில் அமர்த்த வேண்டும். தேர்தலில் பணிபரியும்
ஆசிரியர்கள், அரசு ஊழியர்களுக்கான மதிப்பூதியத்தை இரட்டிப்பாக்க வேண்டும்,
இவை தான் எங்கள் கோரிக்கைகள். வகுப்புகளில் தேர்ச்சி சதவீதம் குறைந்தால்,
ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுப்பதாக அரசு மிரட்டுகிறது. ஒன்றாம் வகுப்பு
முதல் ஒன்பதாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களையும் தேர்ச்சி பெற்றவர்களாக
அறிவிக்க, அரசு கூறுகிறது. ஒன்பதாம் வகுப்பு வரை, பள்ளி பாடங்களைச் சரியாக
படிக்காதவர்கள், 10ம் வகுப்பு தேர்வு எழுதும் போது, எப்படி தேர்ச்சி பெற
முடியும். தனியார் பள்ளிகளில், தேர்ச்சி சதவீதம் அதிகரிக்க, 10ம் வகுப்பு
அரசு தேர்வு எழுதும் மாணவர்களை, 9ம் வகுப்பில் 10ம் வகுப்பு, பிளஸ் 2 அரசு
தேர்வு எழுதவுள்ள மாணவர்களை, பிளஸ் 1 வகுப்பில், பிளஸ் 2 பாடங்களை படிக்க
வைக்கின்றனர். இதுபோன்ற நிலை, அரசு பள்ளிகளில் இல்லை. கணினி மூலம்,
ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு பணியிட மாற்றம் செய்வதாக, அரசு சொல்கிறது.
ஆனால், கலந்தாய்வு முறை என்பது, காசாய்வு முறையாகிவிட்டது. அங்கு பணம்
விளையாடுகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...