மத்திய அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை
ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும் என்ற தமிழக அரசு பள்ளி
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலிக்க வேண்டும் என சென்னை
உயர்நீதிமன்றம் ஆணையிட்டிருந்த போதிலும், அவர்களின் கோரிக்கையை ஏற்க தமிழக
அரசு மறுத்துவிட்டது. இக்கோரிக்கை நியாயமற்றது; சாத்தியமற்றது என அரசு
கூறியுள்ளது.
ஆறாவது ஊதியக் குழுவின் பரிந்துரைகள்
செயல்படுத்தப்பட்ட போது, தமிழக அரசு பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை
ஆசிரியர்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட புதிய ஊதிய விகிதம் அவர்களுக்கு பாதிப்பை
ஏற்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. ஊதிய விகிதத்தை மாற்றியமைப்பதில்
நிகழ்ந்த குளறுபடிகள் காரணமாக அவர்களுக்கு கிடைக்க வேண்டிய ஊதியத்தில்
ரூ.360 இழப்பு ஏற்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி, அவர்களது பணி
நிலையில் உள்ள மத்திய அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்
ஊதியத்தைவிட தங்களுக்கு சுமார் ரூ.4800 குறைவாக நிர்ணயிக்கப் பட்டு
இருப்பதாகவும், இக்குறைபாட்டை களையும் வகையில் மத்திய அரசு இடைநிலை
ஆசிரியருக்கு இணையாக தங்களுக்கும் ஊதியம் நிர்ணயிக்க வேண்டும் என்றும்
இடைநிலை ஆசிரியர்கள் கோரினர்.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை குறித்து
பரிசீலிக்க 2010 ஆம் ஆண்டில் அமைக்கப்பட்ட ஒருநபர் ஆணையம், அவர்களுக்கு
ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட ஊதிய விகிதத்துடன் ரூ.750 சிறப்பு ஊதியம்
சேர்த்து வழங்க ஆணையிட்டது. இதன்மூலம் இடைநிலை ஆசிரியர்களுக்கு மாத ஊதியம்
ரூ.1553 கூடுதலாக கிடைக்கும். ஆனால், இது போதுமானதல்ல என்று கூறி
தொடரப்பட்ட வழக்கில் கடந்த செப்டம்பர் மாதம் தீர்ப்பளித்த உயர்நீதிமன்றம்,
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை கனிவுடன் ஆய்வு செய்ய வேண்டும் என்று
அறிவுறுத்தியிருந்தது. ஆனால், ஆசிரியர்கள் கோரிக்கையில் உள்ள நியாயத்தை
கருத்தில் கொள்ளாமலேயே அதை தமிழக அரசு நிராகரித்துள்ளது.
இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை
நிராகரிப்பதற்காக தமிழக அரசு தெரிவித்துள்ள காரணங்கள் எதுவும்
ஏற்கத்தக்கதல்ல. மத்திய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளிகள்
நகர்ப்புறங்களில் இருப்பதால் அதில் பணியாற்றும் ஆசிரியர்கள் பல்வேறு
சிரமங்களை எதிர்கொள்வதால் அவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கப்படுகிறது; ஆனால்,
தமிழக அரசு பள்ளிகளின் ஆசிரியர்கள் கிராமங்களில் பணியாற்றுவதால் எந்த
சிரமமும் இல்லை என்பதால் அவர்களுக்கு அதிக ஊதியம் வழங்கத் தேவையில்லை என்று
தமிழக அரசின் தரப்பில் கூறப்பட்டுள்ள காரணம் நகைப்புக்குரியது.
நகரங்களில் பணியாற்றுவதை விட கிராமப்புறங்களில்
பணியாற்றுவதில் தான் சிரமங்கள் அதிகம் என்பதும், மருத்துவர்கள் மற்றும்
மருத்துவம் சார்ந்த பணியாளர்களுக்கு கிராமப்பகுதிகளில் பணியாற்ற கூடுதல்
ஊதியம் வழங்கப்படுவதும் அனைவரும் அறிந்ததே. அதுமட்டுமின்றி,
நகர்ப்புறங்களில் உள்ள கேந்திரிய வித்யாலயாக்களில் பயிலும் ஒப்பீட்டளவில்
முன்னேறிய மாணவர்களுக்கு கற்பிப்பதைவிட, எந்த வசதியும் இல்லாத கிராமப்புற
மாணவர்களுக்கு கற்பிப்பதற்கு தான் அதிக முயற்சியும், உழைப்பும்
தேவைப்படும். இதையெல்லாம் உணராமல் கிராமப்புறங்களில் பணியாற்றுவதால் தமிழக
அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு அதிக ஊதியம் தரத் தேவையில்லை என்ற அரசின் வாதம்
கேலிக்குரியது என்பது மட்டுமின்றி, கிராமப்புறங்களை அரசு இரண்டாம் தரமாக
பார்க்கிறது என்பதற்கும் சிறந்த உதாரணமாகும். ஒருவேளை வாதத்திற்காக
கிராமப்புற பள்ளிகளில் பணியாற்றுவதில் சிரமம் இல்லை என்று வைத்துக்
கொண்டால் கூட, இந்தியாவிலேயே அதிக அளவில் நகரமயமாக்கப்பட்ட மாநிலமான
தமிழ்நாட்டில் 50%-க்கும் அதிகமான இடைநிலை ஆசிரியர்கள் நகரப்பகுதிகளில்
பணியாற்றி வரும் நிலையில், அவர்களுக்கும் இதே காரணத்தைக் கூறி அதிக
ஊதியத்தை மறுப்பது எந்த வகையில் நியாயம்?
கேந்திரிய வித்யாலயா ஆசிரியர்களுக்கு கல்வித்
தகுதி அதிகம்; மாநில அரசு பள்ளி இடைநிலை ஆசிரியர்களுக்கு கல்வித் தகுதி
குறைவு என்பதும் தவறான வாதமாகும். கேந்திரிய வித்யாலயாக்களின் ஆசிரியர்கள்
ஆங்கிலத்தில் கற்பிக்கின்றனர்; தமிழக அரசு ஆசிரியர்கள் தமிழில்
பயிற்றுவிக்கிறார்கள் என்று கூறுவதையும் ஏற்க முடியாது. தமிழக அரசு
பள்ளிகளில் ஆங்கில வழி வகுப்புகள் தொடங்கப் பட்டுவிட்டன என்பது
ஒருபுறமிருக்க, ஆங்கிலத்தில் கற்பிப்பதை விட தமிழில் பயிற்றுவிப்பது தகுதி
குறைவானது என்று தமிழை ஆட்சி மொழியாகக் கொண்ட அரசே கூறுவதை சகிக்க
முடியவில்லை. தமிழை இதைவிட அவமதிக்கமுடியாது. அதேபோல் கேந்திரிய
வித்யாலயாக்களில் மொத்தம் 1017 இடைநிலை ஆசிரியர்கள் மட்டுமே இருப்பதால்
அவர்களுக்கு அதிக ஊதியம் தரலாம்; ஆனால், தமிழக அரசு பள்ளிகளில் 1.16 லட்சம்
இடைநிலை ஆசிரியர்கள் இருப்பதால் அவர்களுக்கு தர முடியாது என்று என்று அரசு
அளித்துள்ள விளக்கத்தை எந்த வகையில் சேர்த்துக் கொள்வது என்று
தெரியவில்லை.
எதிர்காலத் தலைமுறையினரை உருவாக்குவதில்
முக்கியப் பங்கு வகிப்பது தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் தான். இதை உணர்ந்து
மத்திய அரசு பள்ளிகளின் இடைநிலை ஆசிரியர்களுக்கு இணையான ஊதியம் தேவை என்ற
அவர்களின் கோரிக்கையை தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...