அண்ணல் காந்திஜி 1937-ஆம் ஆண்டு, வார்தாவில்
அகில இந்திய அளவிலான கல்வியாளர்கள், கல்வி அமைச்சர்கள் மாநாட்டை துவக்கி
வைத்து உரையாற்றினார். அப்போது, அனைத்து குழந்தைகளுக்கும் கட்டாய இலவசக்
கல்வி அளிக்கப்பட வேண்டும் எனவும், இத்தகைய கல்வி நன்மதிப்பை உடைய ஒரு நல்ல
குடிமகனை உருவாக்குவதாக அமைய வேண்டுமெனவும் கூறினார்.
மராட்டிய மாநிலத்தில் சமூக சீர்திருத்த
இயக்கத்தை நடத்திய ஜோதிபா பூலே, அதே மாநிலத்தில் மலைவாழ் மக்கள் வசிக்கும்
பகுதிகளில் கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடியான கோதாவரி பர்லேக்கர் ஆகியோர் எளிய
குடும்பங்களின் குழந்தைகளுக்காக பல பள்ளிகளை நிறுவினார்கள்.
மகாகவி ரவீந்திரநாத் தாகூர் துவக்கிய சாந்தி
நிகேதன் கல்வி நிலையம் தற்போது இந்தியாலுள்ள சிறந்த பல்கலைக்கழகங்களில்
ஒன்றாக விளங்கி வருகிறது. கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னோடிகளில் ஒருவரான
தோழர் பி.சுந்தரையா நெல்லூர் மாவட்டத்தில் தனது சொந்த கிராமத்தில் ஏழை
குழந்தைகளுக்காக இரவுப் பள்ளியை நடத்தினார்.
தமிழகத்தில் சென்னையில் பி.எஸ்.
உயர்நிலைப்பள்ளி, முத்தையா செட்டியார் உயர்நிலைப் பள்ளி (எம்.சி.டி.எம்.)
மற்றும் மதுரை, கோவை, நெல்லை, திருச்சி போன்று மாநிலத்தின் பல்வேறு
பகுதிகளில் பல மனிதாபிமானிகள், கிறித்துவ தேவாலயங்கள், அறக்கட்டளைகள்
சுதந்திரப் போராட்ட காலத்திலேயே ஏராளமான பள்ளிகளைத் துவக்கி நடத்தினார்கள்.
நாடு விடுதலை பெற்ற பின், கல்வியின்
முக்கியத்துவத்தை உணர்ந்த காமராஜர் தலைமையிலான அரசு, மாநிலம் முழுவதும்
ஏராளமான ஆரம்பப் பள்ளிகளையும், உயர்நிலைப் பள்ளிகளையும் துவக்கியது.
மேற்கண்ட நடவடிக்கைகளெல்லாம் கல்விக்கு -
குறிப்பாக ஏழை, எளிய குடும்பத்தைச் சார்ந்த குழந்தைகளின் கல்விக்கு -
அளிக்கப்பட்ட முக்கியத்துவத்தையே எடுத்துக்காட்டுகின்றன. ஆனால், தற்போது
நடப்பது என்ன?
தமிழகத்தில் சமீப காலத்தில் சுமார் 1,000
அரசுப் பள்ளிகள் மூடப்பட்டுவிட்டதாக தகவல்கள் வெளியாகின. சென்னை மாநகரில்
மொத்தமிருந்த 303 மாநகராட்சிப் பள்ளிகளில், 22 பள்ளிகள் மூடப்பட்டு விட்டன.
இதனால், மாநகராட்சிப் பள்ளிகளில் 1,20,000-ஆக இருந்த மாணவர்களின்
எண்ணிக்கை 85,000-ஆக குறைந்துவிட்டது.
அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை
குறைந்து தனியார் பள்ளிகளில் அதிகரித்துக் கொண்டே போகுமானால், நாளடைவில்
அரசுப் பள்ளிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்.
சென்னையில் ஏழு மாநகராட்சிப் பள்ளிகளை நடத்தும்
பொறுப்பை தனியாரிடம் ஒப்படைக்கப் போவதாக வந்த செய்தியை அடுத்து அதற்கு
கடுமையான எதிர்ப்பு எழுந்ததால், மாநகராட்சி நிர்வாகம் தனது முடிவை
கைவிட்டதாகவும் தகவல்கள் வெளியாகின.
திண்டுக்கல் மாவட்டத்தில் சில பள்ளிகள்
மூடப்பட்டு விட்டன. மேலும், சுமார் 140 பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை
20-க்கும் குறைவாக இருக்கிறது. இந்நிலை நீடித்தால், அடுத்தடுத்த ஆண்டுகளில்
இப்பள்ளிகளும் மூடப்படக்கூடிய அபாயம் உள்ளது.
அரசுப் பள்ளிகள் மூடப்பட்டால், ஏழைக்
குழந்தைகள் எங்கே போவார்கள்? இந்த ஆபத்தை உணர்ந்த மாநில அரசு, ஆங்கில வழிக்
கல்வியை அறிமுகப்படுத்தினால் எல்லாம் சரியாகி விடும் என்று கருதியது.
அதனால், பல பள்ளிகளில் கடந்த இரண்டு ஆண்டுகளில் ஆங்கில வழி வகுப்புகள்
தொடங்கப்பட்டன.
ஆனால், 2013-14, 2014-15 ஆகிய ஆண்டுகளில்
அரசின் அறிக்கையின்படியே அரசுப் பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை 55,774
குறைந்துள்ளது. இது எதை எடுத்துக்காட்டுகிறது? பிரச்னை பாட மொழி எது
என்பதல்ல.
குடிநீர், கழிப்பிடம், பரிசோதனைக் கூடம் போன்ற
அடிப்படை கட்டமைப்பு இல்லாதது, ஆசிரியர் பற்றாக்குறை, ஆங்கிலத்தை கற்பிக்க
சரியான ஏற்பாடு இல்லாதது, சில ஆசிரியர்களின் அக்கறையின்மை, தனியார்
பள்ளிகளை ஊக்குவிக்கும் அரசின் கொள்கை போன்ற காரணங்களால்தான் அரசுப்
பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
இத்தகைய சூழலிலும் அர்ப்பணிப்பு உணர்வுடன்
அரசுப் பள்ளி ஆசிரியர்கள் சிலர் தனியார் பள்ளிகளை விட சிறந்த முறையில்
அரசுப் பள்ளிகளை நடத்திக் காட்டிய உதாரணங்களும் உள்ளன.
நாமக்கல் மாவட்டம் ஊத்துப்புளிக்காடு ஊராட்சி
ஒன்றிய துவக்கப் பள்ளியில், 1999-ஆம் ஆண்டில் மாணவர்களின் எண்ணிக்கை வெறும்
34 மட்டுமே. ஆனால், தற்போது 172.
இவ்வூருக்குப் பேருந்து வசதி இல்லாத போதும்,
சுற்று வட்டார கிராமங்களிலிருந்து 20 வேன்களில் மாணவர்கள் இந்த அரசுப்
பள்ளிக்கு வருகின்றனர்.
ஈரோடு நகராட்சி துவக்கப் பள்ளியில் 2009-ஆம்
ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 72 மட்டுமே. ஆனால் தற்போது அப்பள்ளியில் 235
மாணவர்கள் உள்ளனர்.
இப்பள்ளி மாணவர்களுக்கு உடற்பயிற்சி, யோகா
போன்றவை கற்பிக்கப்படுகிறது. இதனால், ஒரு தனியார் மெட்ரிகுலேசன்
பள்ளியிலிருந்து 75 மாணவர்கள் இப்பள்ளிக்கு வந்து சேர்ந்துள்ளனர்.
2002-ஆம் ஆண்டு கரூர் மாவட்டம் நரிக்கட்டியூர்
ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை வெறும் ஐந்து.
இந்த ஓராசிரியர் பள்ளிக்கு தலைமை ஆசிரியராக பொறுப்பேற்றவர் எடுத்த
முயற்சியினால் தற்போது மாணவர்களின் எண்ணிக்கை 217.
தற்போது ஏழு ஆசிரியர்களுடன் இப்பள்ளி
நடுநிலைப்பள்ளியாக வளர்ந்துள்ளது. இப்பள்ளியில் அறிவியலுக்கு மட்டுமன்றி
எல்லாப் பாடங்களிலும் ஆண்டுதோறும் எல்லா வகுப்புகளுக்கும் கண்காட்சி
நடத்தப்படுகிறது. மாணவர்கள் மட்டுமன்றி, பெற்றோரும் இதைக் காண
வருகிறார்கள்.
வகுப்புக்கு ஒரு கணினி வீதம் ஐந்து கணினிகள்
உள்ளன. தமிழகத்திலேயே இணைய வசதி உள்ள ஊராட்சி ஒன்றியப் பள்ளி இதுவாகத்தான்
இருக்க வேண்டும். தொலைபேசி வசதியும் அவ்வாறே. ஆசிரியர்கள் தங்கள் அலைபேசியை
பாட வேளைகளில் அணைத்து வைத்துவிட்டு, அவசர அழைப்புகளுக்கு இந்தத்
தொலைபேசியைப் பயன்படுத்துகிறார்கள்.
தினமும் மாலை பள்ளி முடிந்த பின்பு ஒரு மணி நேரம், கல்வியில் பின்தங்கிய மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கப்
படுகின்றன.
குமரி மாவட்டம், பூச்சிவிளாகம் ஊராட்சி ஒன்றிய
துவக்கப் பள்ளியில் 2011-ஆம் ஆண்டு மாணவர்களின் எண்ணிக்கை 24. இப்பள்ளியின்
தலைமையாசியரும், மற்ற ஆசிரியர்களும் எடுத்த முயற்சியினால், மாணவர்களின்
எண்ணிக்கை தற்போது 112-ஆக உயர்ந்துள்ளது.
கோவை மாவட்டம் ராமம்பாளையம் துவக்கப் பள்ளியில்
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின் எண்ணிக்கை 27. அது தற்போது 74-ஆக
உயர்ந்துள்ளது. இப்பள்ளி ஆசிரியர்கள் எடுத்த முயற்சியும், கிராம மக்கள்
அளித்த ஒத்துழைப்பும்தான் இந்த முன்னேற்றத்திற்குக் காரணம்.
புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் ஊராட்சி
ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சில ஆண்டுகளுக்கு முன்பு மாணவர்களின்
எண்ணிக்கை 22. இப்பள்ளி தலைமை ஆசிரியர் எடுத்த முயற்சியினால், மாணவர்களின்
எண்ணிக்கை இப்போது 124-ஆக உயர்ந்துள்ளது.
வேலூர் மாவட்டம் சொங்காடு மோட்டூர்
கிராமத்திலுள்ள அரசுப் பள்ளியில் 2010-ஆம் ஆண்டில் மாணவர்கள் எண்ணிக்கை
123. தலைமை ஆசிரியர் எடுத்த முயற்சியினால் தற்போது 151.
ஆசிரியர்கள் முயற்சி செய்தால் அரசுப்பள்ளிகளை
பாதுகாப்பதோடு, மாணவர்களின் எண்ணிக்கையையும் உயர்த்த முடியும் என்பதற்கான
உதாரணங்களே இவை.
மாநில அரசு மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாநில அரசின் 10 ஆண்டு கனவுத் திட்டத்திற்கான
(2013-2023) மொத்த ஒதுக்கீடு ரூபாய் 15 லட்சம் கோடி. இதில் கல்விக்கும்,
சுகாதாரத்துக்கும் சேர்த்து உத்தேச ஒதுக்கீடு ரூபாய் 59,000 கோடி. இது 10
ஆண்டுகளுக்கான ஒதுக்கீடு. அதுவும் அரசு, தனியார் கூட்டு ஒதுக்கீடு. இது
போதுமானதல்ல.
அரசுப் பள்ளிகளை பாதுகாத்திட,
தாய்மொழி பயிற்று மொழியாக தொடர வேண்டும்
ஆங்கில மொழி கற்பிக்க சிறப்பு ஏற்பாடு செய்திட வேண்டும்
அரசே மழலையர் பள்ளிகளை துவக்கிட வேண்டும்
மாணவர்கள் இடை நிற்றலைத் தடுத்திட வேண்டும்
பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்திட வேண்டும்
கல்வித் தரத்தை உயர்த்திட ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்து ஊக்குவிக்க வேண்டும்
மத்திய அரசின் கட்டாய இலவசக்கல்வி உரிமை சட்டத்தை தமிழகத்தில் அமலாக்கிட வேண்டும்
இதற்கான நிதிவளங்களை மத்திய அரசை நிர்பந்தித்துப் பெற வேண்டும்.
ஆம், அரசுப் பள்ளிகளை பாதுகாக்க அரசின் கொள்கையில் மாற்றம் வேண்டும். பாட மொழியில் அல்ல.
கட்டுரையாளர்: ஜி. ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...