திருப்பூர் மாநகராட்சி பள்ளி வளாகத்தில்,
வெளியாட்களால் ஆசிரியர் தாக்கப்பட்டார்; மூடி மறைக்கப்பட்ட இச்சம்பவம், ஒரு
வாரத்துக்குபின் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
திருப்பூர் ஜெய்வாபாய் மாநகராட்சி பள்ளியில்,
7,200 மாணவியர் படிக்கின்றனர். சில மாணவியர், ஆண் நண்பர்களோடு போனில்
அரட்டை அடிப்பதாக புகார் வந்தது; அவர்களை, ஆசிரியர்கள் கண்காணித்தனர். 5ம்
தேதி, ஒரு ஆசிரியர், ரயில்வே ஸ்டேஷன் அருகில் சில மாணவியர், காயின்
பூத்தில், பேசிக்கொண்டிருப்பதை பார்த்துள்ளார்.
அவர்களில் ஒரு மாணவியை அழைத்து
கண்டித்துள்ளார். அந்த ஆசிரியரை அம்மாணவி தரக்குறைவாக பேசியதாகவும்,
அதனால், அம்மாணவியை ஆசிரியர் அறைந்ததாகவும் கூறப்படுகிறது. அதன்பின்,
ஆசிரியரின் மொபைல்போனுக்கு தொடர்பு கொண்ட சிலர், மிரட்டல் விடுத்துள்ளனர்.
கடந்த 8ம் தேதி காலை, பள்ளி வளாகத்துக்குள் அத்துமீறி நுழைந்த சிலர், தலைமை
ஆசிரியர் அறை முன் நின்றிருந்த அந்த ஆசிரியரை, தாக்கியதாக தெரிகிறது.
சக ஆசிரியர்களும், மாணவியரும் அதிர்ச்சி
அடைந்தனர். சம்பவம் நடந்து ஒரு வாரமாகியுள்ள நிலையில், நேற்று நடந்த
கலெக்டர் குறைதீர்ப்பு கூட்டத்தில், நல்லூர் நுகர்வோர் நலமன்றம் சார்பில்
மனு அளித்தபோது, வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தலைமை ஆசிரியர் போஜனிடம் கேட்டபோது, "மாணவியர்
சிலர் போனில் பேசுவதை தடுக்க, கண்காணிக்குமாறு ஆசிரியர்களுக்கு
அறிவுறுத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, இப்பிரச்னை ஏற்பட்டது. பள்ளிக்குள்
ஆசிரியர் தாக்கப்படவில்லை; கழுத்தை பிடித்து தள்ளியதாகவே கூறப்பட்டது"
என்றார்.
கல்வித்துறை விழிக்குமா?
ஆசிரியர்களுக்கு பாதுகாப்பில்லை என்ற
குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், பள்ளி வளாகத்துக்குள் வெளியாட்கள்
நுழைந்து, ஆசிரியரை தாக்கியது அதிர்ச்சியளிக்கிறது. இதுகுறித்து போலீசில்
புகார் அளிக்காமல், மூடி மறைக்கப்பட்டது ஏன் என்ற கேள்வியும் எழுகிறது.
கல்வித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, இதுபோன்ற சம்பவங்கள் இனியும்
தொடராமல் தடுக்க வேண்டும்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...