”மதுரை காமராஜ் பல்கலை தொலை நிலைக் கல்வியில் ஜனவரி முதல் ’ஆன்லைனில்’ தேர்வுகள் நடக்கும்,” என துணைவேந்தர் கல்யாணி தெரிவித்தார்.
பல்கலை ’செனட்’ கூட்டத்தில் அவர் பேசியதாவது: தொலைநிலைக் கல்வியில் ’இ- லேர்னிங்’ முறை சமீபத்தில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இதில் 1600 ’இ-புக்ஸ்’ பயன்படுத்தப்பட்டு உள்ளன. இந்த நடைமுறையால் பல்கலைக்கு பாடங்கள் எழுதுதல், பிரிண்டிங், தபால் செலவு போன்றவை தவிர்க்கப்படும். ஆசிரியர்களும் மாணவர்களும் ’ஆன்லைனில்’ கலந்துரையாடும் வசதி ஏற்படுத்தப்பட்டு உள்ளது.
’இ- லேர்னிங்’ முறையில் தொலைநிலைக் கல்வியில் இளநிலை, முதுநிலை கல்விக்கான பாடதிட்டங்கள் தயார் செய்யப்படுகின்றன. 2015 ஜனவரி முதல் இது நடைமுறைக்கு வரும். தேர்வில் 40 சதவீதம் ’அப்ஜெட்டிவ்’ கேள்விகள் கேட்கப்படும். தொலைநிலைக் கல்விக்காக அறிவியல் ஆய்வகம் மற்றும் மாணவர்களின் வசதிக்காக ஏ.டி.எம்., மையமும் துவங்கப்பட்டுள்ளது. பல்கலையில் பல கோடி மதிப்பிலான திட்டங்கள் பல துறைகளில் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளன, என்றார்.
பதிவாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். ’சிண்டிகேட்’ உறுப்பினர்கள் கண்ணன், பெரியகருப்பன், பிச்சுமணி, ராமகிருஷ்ணன் பங்கேற்றனர்.தொடர்ந்து நடந்த விவாதத்தில் ’செனட்’ உறுப்பினர்கள் சாந்தா, முத்துமாணிக்கம், சந்திரசேகர் பல்கலையில் நடந்த வளர்ச்சிப் பணிகளை குறிப்பிட்டு பேசினர்.
உறுப்பினர் நேரு பேசுகையில், ”பட்டதாரி பிரதிநிதிகளுக்கான தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. இதனால் ’செனட்’ கூட்டத்தில் பட்டதாரிகளின் கருத்துக்களை விவாதிக்க முடியாத நிலை உள்ளது,” என்றார். அதற்கு பதிலளித்த சின்டிகேட் உறுப்பினர் கண்ணன் ”உயர் கல்வித்துறை செயலருக்கு இது தொடர்பாக பரிந்துரை கடிதம் அனுப்பியுள்ளோம். இதற்கு அரசு ஒத்துழைத்தால் தேர்வு நடத்த தயாராக உள்ளோம்,” என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...