மத்திய உளவுத்துறை எச்சரிக்கையின் விளைவாக, தமிழகத்தில் பள்ளிகளின்
பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. இது குறித்த விவரம்: பாகிஸ்தானின்
பெஷாவர் நகரில் உள்ள ராணுவ பள்ளிக்கூடத்துக்குள் தலிபான் தீவிரவாதிகள்
செவ்வாய்க்கிழமை புகுந்து கொடூர தாக்குதல் நடத்தினர். இத் தாக்குதலில்
அங்கு 132 பள்ளிக் குழந்தைகள் இறந்தனர்.
இந்தத் தாக்குதலின் விளைவாக இந்தியாவிலும் பாதுகாப்பு
பலப்படுத்தப்பட்டுள்ளது. அதேநேரத்தில் பாகிஸ்தானில் பள்ளிக்குள் புகுந்து
தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதுபோல, இந்தியாவிலும் சில தீவிரவாத
அமைப்புகள் தாக்குதல் நடத்துவதற்கான வாய்ப்பு இருப்பதாக மத்திய உளவுத்துறை
கருதியுள்ளது. ஏற்கனவே சில தீவிரவாத இயக்கங்களிடமிருந்து அச்சுறுத்தல்
இருப்பதால் மத்திய உளவுத்துறை நாடு முழுவதும் பள்ளிகளில் பாதுகாப்பை
அதிகரிக்கும்படி மாநில அரசுகளை எச்சரித்துள்ளது. இதன் விளைவாக அந்தந்த
மாநில காவல்துறை டி.ஜி.பி.க்கள், ஒவ்வொரு மாவட்ட காவல் கண்காணிப்பாளர்,
மாநகர காவல்துறை ஆணையர் ஆகியோருக்கு அந்தந்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில்
பாதுகாப்பை பலப்படுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
ஆலோசனை: இதன் விளைவாக பள்ளிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது தொடர்பாக
புதன்கிழமை அந்தந்த மாவட்ட காவல்துறை அதிகாரிகளும், மாநகர காவல்துறை
அதிகாரிகளும் ஆலோசனை செய்தனர். இதில் பள்ளி பகுதிகளில் ரோந்து, கண்காணிப்பை
அதிகப்படுத்துவது, குறிப்பாக காலையில் வகுப்பு தொடங்கும்போதும்,
முடிவடையும்போதும் அந்தப் பகுதியில் போலீஸார் நடமாட்டம் இருக்கும் வகையில்
பார்த்துக் கொள்வது, பள்ளி பகுதியில் சந்தேகப்படும்படியான நபர்கள் சுற்றித்
திரிந்தால் அவர்களைக் கண்டறிந்து விசாரணை செய்வது உள்ளிட்ட பல்வேறு
முடிவுகள் எடுக்கப்பட்டன.
சென்னையில் பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும் என
அறிவுறுத்தப்பட்டு வருகிறது. மேலும் பள்ளி பாதுகாப்பு குறித்து 6
மாதத்துக்கு ஒரு முறை காவல்துறை ஆலோசனைக் கூட்டம் நடத்துகிறது. இதன்
விளைவாக பெரும்பாலான பள்ளிகளில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளன.
இருப்பினும் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்யாத பள்ளிகளை கண்டறிந்து,
அவற்றின் பாதுகாப்பை அதிகரிக்க சென்னை காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதேபோல
அனைத்து மாவட்ட காவல்துறையும் தங்களது பகுதிகளில் பாதுகாப்பு குறைவாக உள்ள
பள்ளிகளை கண்டறிந்து, அவற்றின் பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து
வருகின்றனர்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...