சென்னையில் 50 ஆயிரம் பேரைக்கொண்டு, மனித தேசியக்கொடி உருவாக்கி உலக சாதனை படைக்கப்பட்டது.
சென்னை நந்தனம்
ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் டிசம்பர் 7–ந்தேதி (நேற்று) பிரமாண்ட மனித
தேசியக்கொடியை அமைத்து, உலக சாதனை படைக்க வட மாவட்டங்களை உள்ளடக்கிய
‘ரோட்டரி மாவட்டம் 3230’ முடிவு செய்தது. இதற்காக சுமார் 50 ஆயிரம் பேரை
திரட்டவும் தீர்மானித்தது.
இதில் பங்கேற்குமாறு
பள்ளி, கல்லூரிகள், பல்கலைக்கழக மாணவர்கள், கம்பெனிகளில் பணிபுரிபவர்கள்
மற்றும் பொதுமக்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.
50 ஆயிரம் பேர்
அதன்படி, நேற்று அதிகாலையில் இருந்தே இளைய தலைமுறையினர் அணி, அணியாக நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் வந்து குவியத்தொடங்கினர்.
காலை 8 மணிக்கு 50
ஆயிரம் பேர் சேர்ந்து பட்டொளி வீசும் மனித மூவர்ண கொடியை அமைத்துக்
காட்டினார்கள். இதில் நடிகர் சரத்குமார் உள்பட திரையுலகை சேர்ந்த பல்வேறு
பிரபலங்களும் கலந்துகொண்டனர்
இந்த மனித
தேசியக்கொடியின் நீளம் 480 அடி, அகலம் 320 அடி. மனித தேசியக்கொடியின்
மூவர்ணங்கள் மற்றும் அதன் நடுவே அசோக சக்கரம் கழுகுப் பார்வையில் கலை
நயத்துடன் காட்சியளித்தது. ‘போலியோ இல்லாத இந்தியாவை உருவாக்குவோம்’ என்ற
விழிப்புணர்வு வாசகம், மனித தேசியக்கொடியை சுற்றி இடம்பெறும் வகையில்
விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டிருந்தன.
கின்னஸ் அங்கீகாரம்
50 ஆயிரம் பேரைக்கொண்டு உருவாக்கப்பட்ட இந்த மனித தேசியக்கொடி, புதிய உலக சாதனை ஆகும். இதை கின்னஸ் சாதனை ஏடு அங்கீகரித்தது.
கின்னஸ் உலக சாதனை
சான்றிதழை ‘ரோட்டரி மாவட்டம் 3230’ கவர்னர் ஐசக் நாசரிடம், கின்னஸ் அதிகாரி
சையதா சுபாஷி வழங்கினார். இந்த சாதனை பற்றி சையதா சுபாஷி நிருபர்களிடம்
கூறும்போது, ‘‘இந்தியா மிகப்பெரிய வரலாற்று சாதனை படைத்துள்ளது. இந்த
சாதனையை நிகழ்த்த திரண்டு வந்திருந்தவர்களை பார்த்து நான் தனிப்பட்ட
முறையில் நெகிழ்ச்சி அடைந்தேன். நமது ஒற்றுமையை பறைசாற்றும் விதமாக
ஒன்றுகூடி சாதனை படைத்ததற்காக அனைவருக்கும் என் வாழ்த்துகளை
தெரிவித்துக்கொள்கிறேன்’’ என்றார்.
பாக். சாதனை முறியடிப்பு
இதுவரை,
பாகிஸ்தானில் லாகூரில் 28 ஆயிரத்து 957 பேரைக்கொண்டு அமைக்கப்பட்ட
மனிதக்கொடிதான் கின்னஸ் சாதனையாக பதிவாகி இருந்தது. இப்போது அந்த சாதனையை
சென்னையில் அமைத்துக் காட்டப்பட்ட மனித தேசியக்கொடி முறியடித்து, புதிய
சாதனை படைக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ‘ரோட்டரி
மாவட்டம் 3230’ கவர்னர் ஐசக் நாசர், ‘‘ தேசப்பற்றை இளைஞர்களிடம்
உருவாக்கவும், ஊக்குவிக்கவும்தான் மனித தேசியக்கொடி உருவாக்க முடிவு
செய்தோம். இதற்கு அமோக வரவேற்பு கிடைத்தது. 50 ஆயிரம் பேர் பங்கேற்று மனித
தேசியக்கொடியை உருவாக்க முடிவு செய்திருந்த வேளையில், ஒன்றரை லட்சம் பேர்
குவிந்து விட்டனர். இதற்கு காரணம் தேசப்பற்றுதான்’’ என பெருமிதத்துடன்
கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...