தமிழ்நாடு அரசுத் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) சார்பில் தமிழ்நாடு
முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற குரூப் 4 தேர்வை 10 லட்சத்துக்கும்
மேற்பட்டோர் எழுதினர். இந்தத் தேர்வு முடிவுகள் இரண்டரை மாதங்களில்
வெளியாகும் என்று டிஎன்பிஎஸ்சி தலைவர் தெரிவித்தார்.
இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர், நில அளவர்,
வரைவாளர் உள்ளிட்ட பணியிடங்கள் குரூப் 4 தொகுதியில் வருகின்றன. இந்தத்
தொகுதியில் 4
ஆயிரத்து 963 பணியிடங்கள் காலியாகவுள்ளன. இந்தக் காலியிடங்களை
நிரப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்குரிய அறிவிக்கை கடந்த அக்டோபர் 14-ஆம்
தேதி வெளியிடப்பட்டது. அவர்களுக்கான தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தேர்வாணைய
இணையதளத்தில் வெளியிடப்பட்டது. இந்தத் தேர்வுக்கு 12 லட்சத்து 72 ஆயிரத்து
293 பேரின் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.
4,448 தேர்வுக் கூடங்கள்: ஒவ்வொரு தாலுகாவுக்கும் ஒரு மையம் என்ற அளவில்
தேர்வு மையங்கள் ஏற்படுத்தப்பட்டன. சென்னை போன்ற பெருநகரங்கள் மூன்று
பிரிவுகளாக தெற்கு, வடக்கு, மத்தி என மூன்றாகப் பிரிக்கப்பட்டு தேர்வு
மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்தத் தேர்வுப் பணிக்கென 4,448 முதன்மை கண்காணிப்பாளர்கள், 63,665
தேர்வுக் கூட கண்காணிப்பாளர்கள், 457 பறக்கும் படை அலுவலர்கள்
நியமிக்கப்பட்டிருந்தனர்.
இதைத் தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் பகல் 1 மணி வரை தேர்வு நடைபெற்றது.
மொத்தம் 244 மையங்களுக்கு உள்பட்ட 4,448 தேர்வுக் கூடங்களில் 10
லட்சத்துக்கும் மேற்பட்டோர் அதாவது விண்ணப்பித்தவர்களில் 84 சதவீதம் பேர்
தேர்வெழுதினர்.
இந்தத் தேர்வில் பொதுஅறிவு, திறனறிவு பிரிவில் 100 கேள்விகளும்,
பொதுத்தமிழ் அல்லது ஆங்கிலத்தில் இருந்து 100 கேள்விகளும் என மொத்தம் 200
கேள்விகள் இடம்பெற்றிருந்தன. இந்தக் கேள்விகளுக்கு 300 மதிப்பெண்கள்
அளிக்கப்படும். குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற குறைந்தபட்ச மதிப்பெண்களாக
90 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
எளிமையான கேள்விகள்: பொதுத் தமிழ் பிரிவில் உலகின் எட்டாவது அதிசயம் என
பாராட்டப்படுபவர் யார், தொண்ணூற்று ஒன்பது பூக்களின் பெயர்கள்
இடம்பெற்றுள்ள நூல் எது, ஏற்றுமதி-இறக்குமதி குறித்து கூறும் நூல்கள் எவை
உள்ளிட்ட கேள்விகள் இடம்பெற்றிருந்தன.
பொது அறிவுப் பிரிவில் சிட்டிசன் என்ற சொல் எந்த மொழியிலிருந்து
பெறப்பட்டது உள்ளிட்ட கேள்விகளும், வரலாறு பிரிவிலிருந்து மௌரிய வம்சத்தின்
கடைசி அரசர் யார், சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் யார் போன்ற
எளிமையான கேள்விகளும் இடம்பெற்றிருந்தன.
இது குறித்து சென்னையைச் சேர்ந்த நந்தக்குமார், ராஜ்குமார், கவிதா, ஷிவானி
உள்ளிட்டோர் தேர்வு எழுதிய பின்பு தெரிவித்த கருத்துகள்: பொதுத் தமிழ்,
வரலாறு, அறிவியல் ஆகிய பிரிவுகளில் கேட்கப்பட்டிருந்த அனைத்துக்
கேள்விகளும் மிகவும் எளிமையாக இருந்தன.
கணிதத்தைப் பொருத்தவரை ஒரு சில கேள்விகளைத் தவிர மற்றவை அனைத்துக்கும்
சுலபமாக பதிலளிக்க முடிந்தது. நடப்பு விவகாரங்கள் குறித்து அதிகளவு
கேள்விகள் கேட்கப்படும் என எதிர்பார்த்தோம். ஆனால் சில கேள்விகளே
கேட்கப்பட்டிருந்தது ஏமாற்றமளிக்கிறது. இருப்பினும் ஒட்டுமொத்தமாக
பார்க்கும்போது குரூப் 4 தேர்வு எளிதாக இருந்தது என மகிழ்ச்சி
தெரிவித்தனர்.
முன்னதாக பதற்றத்திற்குரிய தேர்வு மையங்கள் இணையதளம் மூலம் நேரடியாகக்
கண்காணிக்கப்பட்டன. தேர்வுக் கூடங்களின் நடவடிக்கைகள் விடியோ மூலம் பதிவு
செய்யப்பட்டன.
இரண்டரை மாதத்தில் தேர்வு முடிவுகள்:
டிஎன்பிஎஸ்சி தேர்வாணையத்தின் தலைவர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன்
சென்னையில் செய்தியாளர்களிடம் கூறுகையில், இந்தத் தேர்வுகளுக்குரிய விடைகள்
ஒரு வாரத்தில் இணையதளத்தில் வெளியிடப்படும். தேர்வு முடிவுகள் இரண்டரை
மாதத்தில் வெளியிடப்படும் என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...