தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நேற்று வெளியிட்ட அறிக்கை: குரூப்
2 பதவியில் அடங்கிய உதவியாளர், கீழ்நிலை எழுத்தர், கணக்காளர் மற்றும்
நேர்முக எழுத்தர் ஆகிய பதவியில் காலியாக உள்ள இடங்களுக்கான எழுத்து தேர்வை
டிஎன்பிஎஸ்சி கடந்த ஜூன் 29ம் தேதி நடத்தியது.
இத்தேர்வு தொடர்பான
சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு பிராட்வே பேருந்து நிலையம் அருகே
உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் வரும் 29ம் தேதி நடக்கிறது. தொடர்ந்து,
கிராம நிர்வாக அலுவலருக்கான (2013-14) சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
கலந்தாய்வு வரும் ஜனவரி மாதம் 21ம் தேதி முதல் நடைபெறும். சான்றிதழ்
சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின்
தரவரிசை அடங்கிய தற்காலிக பட்டியல் தேர்வாணைய இணையதளமான www.tnpsc.gov.in-ல் வெளியிடப்பட்டுள்ளது.
கலந்தாய்வுக்கு அழைக்கப்பட்டவர்களின் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
கலந்தாய்விற்கான தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு விண்ணப்பதாரர்களுக்கு
அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. மேற்கூறிய
விவரங்கள் அடங்கிய அழைப்பு கடிதத்தினை தேர்வாணைய இணையதளத்திலிருந்தும்
பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நடைபெற உள்ள சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
கலந்தாய்விற்கு கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள்
பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, அவர்களின் இடஒதுக்கீட்டு பிரிவு,
விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், தகுதியுடைமை மற்றும் நிலவும்
காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர்.
அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற
இயலாது. விண்ணப்பதாரர்கள் அளித்துள்ள தகவல்கள், தவறாக இருக்கும்
பட்சத்தில் கலந்தாய்வில் கலந்துகொள்ள அனுமதிக்கப்பட மாட்டார்கள்.
விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்த்தல் மற்றும் கலந்தாய்விற்கு வர
தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்பு அளிக்கப்பட மாட்டாது எனவும்
தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...