குரூப்-2 எழுத்து தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ் சரிபார்க்கும்
பணி நேற்று முதல் தொடங்கியது. கிராம நிர்வாக அலுவலர் பணிக்கான தேர்வில்
வெற்றி பெற்றவர்களுக்கு ஜனவரி 27-ந் தேதி முதல் சான்றிதழ் சரிபார்க்கும்
பணி நடைபெறும் என்று டி.என்.பி.எஸ்.சி. அறிவித்துள்ளது.
இந்து சமய அறநிலையத்துறை, வருவாய்துறை, வணிகவரித்துறை உள்ளிட்ட 18
துறைகளில் காலியாக உள்ள 2,760 (குரூப்-2 பிரிவு) உதவி அதிகாரி
பணியிடங்களுக்கு, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.)
கடந்த ஜூன் மாதம் 29-ந் தேதி தேர்வு நடத்தியது. இந்த தேர்வின் முடிவினை
கடந்த 12-ந் தேதி டி.என்.பி.எஸ்.சி. நிர்வாகம் வெளியிட்டது.
இந்த தேர்வில் 2,400 பேர் தேர்ச்சிப் பெற்றார்கள். இதையடுத்து, தேர்ச்சிப்
பெற்றவர்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணி நேற்று முதல் தொடங்கியது.
இந்த பணி சென்னை பிரேஷர் பாலம் சாலையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி.
அலுவலகத்தில் வைத்து நடக்கிறது.
பணி ஒதுக்கீட்டு ஆணை
இதுகுறித்து டி.என்.பி.எஸ்.சி. உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-
குரூப்-2 தேர்வில் 2,400 பேர் தேர்ச்சிப் பெற்றுள்ளார்கள். இதில், அதிக
மதிப்பெண் எடுத்துள்ள முதல் 200 பேருக்கு இன்று (நேற்று) முதல் சான்றிதழ்
சரி பார்க்கும் பணி தொடங்கியுள்ளது. இந்த 200 பேருடைய சான்றிதழ் சரிபார்த்த
பின்னர், அவர்களுக்கு செவ்வாய்க்கிழமை (இன்று) பணி ஒதுக்கீட்டு ஆணை
வழங்கப்படும். அந்த ஆணையை பெற்றுக் கொண்டவர்கள், சம்பந்தப்பட்ட துறைக்கு
சென்று, பணி நியமன உத்தரவினை பெற்றுக் கொள்ள வேண்டும். இதேபோல, தேர்ச்சிப்
பெற்ற 2,400 பேர் பெற்ற மதிப்பெண் அடிப்படையில், சான்றிதழ் சரி பார்க்கும்
பணிக்கு அவர்கள் அழைக்கப்படுவார்கள்.
கிராம நிர்வாக அலுவலர்
இந்த பணி இன்று (நேற்று) முதல் தொடங்கி, வருகிற (2015-ம் ஆண்டு) ஜனவரி
21-ந் தேதி வரை நடைபெறும். நாள் ஒன்றுக்கு 200 பேர் வீதம் இந்த சான்றிதழ்
சரி பார்க்கப்படும். ஜனவரி 22-ந் தேதி முதல் மாற்றுத்திறனாளிகள், முன்னாள்
ராணுவத்தினர் ஆகியோருக்கு சான்றிதழ் சரிபார்க்கும் பணி நடைபெறும்.
அதேநாளில், நேர்முக உதவியாளர் பணிக்கும் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும்
கவுன்சிலிங் நடைபெறும். கிராம நிர்வாக அலுவலர் (வி.ஏ.ஓ.) பணிக்காக நடந்த
தேர்வில் வெற்றிப் பெற்றவர்களுக்கு, வருகிற ஜனவரி 27-ந் தேதி முதல்
சான்றிதழ் சரி பார்ப்பு பணி நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...