அரசுப் பள்ளி மாணவர்களின், விளையாட்டுத் திறனை அறிந்துகொள்ள நடத்தப்படும் உடல்தகுதித் தேர்வு, முறையான கண்காணிப்பும், ஆய்வும் இல்லாததால், பெரும்பாலான இடங்களில் முடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
குறிப்பாக, பல பள்ளிகளில், மாணவர்களது எண்ணிக்கைக்கு தகுந்தபடி, விளையாட்டு ஆசிரியர்கள், பயிற்சியாளர்கள், மைதானம், உபகரணங்கள் என, எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லை என்பது, நீண்டநாள் கோரிக்கையாக இருந்து வருகிறது.
கோவை மாவட்டத்தை பொறுத்தவரை, பள்ளிகளில், ஆண்டுதோறும் விளையாட்டு விழா நடத்துவதற்காகவும், போட்டிகளில் பங்கேற்க செய்வதற்காகவும், மாணவர்களுக்கு உடல் தகுதித்தேர்வு நடத்துவது வழக்கம். ஓட்டப்பந்தயம், நீளம் தாண்டுதல், உயரம் தாண்டுதல் உள்ளிட்ட அனைத்து விளையாட்டுகளிலும், வகுப்பு வாரியாக மாணவர்களது தர மதிப்பீடு கணக்கிடப்பட்டு, மதிப்பெண்கள் வழங்கப்படும்.
இதில், புதிதாக சேர்ந்த மாணவர்களின் திறமை அடையாளம் காணப்படுவதோடு, விளையாட்டு வாரியாக, தகுதியுள்ள மாணவர்களின் பட்டியல் உருவாக்கப்பட்டு, பயிற்சி அளிக்கப்படும். பின், பள்ளி அளவிலான, மாவட்ட, மண்டல அளவிலான போட்டிகளில் பங்கேற்க செய்ய வேண்டும். இந்த உடல் தகுதித்தேர்வு, பெரும்பாலான பள்ளிகளில் முறையான ஆய்வும், கண்காணிப்பும் இல்லாததால், முடங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது, நகர்புற பள்ளிகளை காட்டிலும், கிராமப்புற பகுதிகளிலே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
அரசு பள்ளி விளையாட்டு ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், "பள்ளிகளில், காலாண்டு தேர்வின்போது, புதிதாக சேர்ந்த மாணவர்களின் திறமைகளை அடையாளம் காண, உடல்தகுதித் தேர்வு நடத்தப்படும். இத்தேர்வு வாயிலாக, ஆர்வமுள்ள வீரர்கள் உருவாக்கப்படுவதும், போட்டிகளில் பங்கேற்க செய்வதும் வழக்கம். இத்தேர்வு, விளையாட்டு ஆசிரியர்கள் அல்லாத பள்ளிகளிலும், போதிய வசதியில்லாத பள்ளிகளிலும், கடந்த இரு ஆண்டுகளாக நடத்தப்படுவதில்லை. கல்வித்துறை அதிகாரிகளும் ஆய்வின் போது, போதிய அக்கறை காட்டாததால், மாணவர்களது திறமை முடக்கப்படுகிறது" என்றனர்.
மாவட்ட விளையாட்டுத்துறை அலுவலர் அனந்தலட்சுமியிடம் கேட்டபோது, "உடல்தகுதித்தேர்வு நடத்த பள்ளிகளில் அறிவுறுத்தியுள்ளோம். சில பள்ளிகளில் மாணவர்களின் மதிப்பெண் பட்டியல் அனுப்பப்பட்டுள்ளது. பெரும்பாலான தனியார் பள்ளிகள்தான், உடல்தகுதித்தேர்வு நடத்தாமல், மெத்தனம் காட்டுகிறார்கள். விரைவில், மாணவர்களின் தகுதித்தேர்வு பட்டியல் அனுப்ப உத்தரவிடப்பட்டுள்ளது" என்றார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...