Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல்: நடவடிக்கை கோரி பெற்றோர் சாலை மறியல்

         சென்னை கோடம்பாக்கத்தில் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரைத் தாக்கிய சம்பவத்தில், தொடர் புடைய மாணவரின் தந்தையைக் கைது செய்யக் கோரி பெற்றோர்கள் சாலை மறியல் போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர்.இந்தப் போராட்டத்தால் ஆற்காடு சாலையில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது.

      கோடம்பாக்கம் யுனைடெட் இந்தியா காலனியில் உள்ள லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 8-ஆம் வகுப்பு படிக்கும் மாணவரை உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர் தாக்கியதாகக் கூறி, அவரை ஒரு கும்பல் பள்ளிக்குள் புகுந்து வியாழக்கிழமை தாக்கியது.

இச் சம்பவத்தில் காயமடைந்த ஆசிரியர் பாஸ்கர் அரசுப் பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுதொடர்பாக இரு தரப்பினரும் பரஸ்பரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

ஆசிரியர் தாக்கப்பட்டது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாணவரின் தந்தை அருளானந்தத்தைக் கைது செய்ய வேண்டும் என அந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர் கோரிக்கை விடுத்தனர்.

இந்த நிலையில், மாணவர்களின் பெற்றோர், வெள்ளிக்கிழமை காலை திடீரென பள்ளியின் முன் திரண்டனர். பின்னர் அங்கிருந்து ஆற்காடு சாலைக்கு வந்த அவர்கள், காலை 8.30 மணியளவில் திடீரென மறியலில் ஈடுபட்டனர்.

இதனால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. தகவலறிந்ததும் தெற்கு மண்டல கூடுதல் ஆணையர் ஆபாஷ்குமார், தலைமையிட கூடுதல் ஆணையர் திருஞானம், தியாகராய நகர் துணை ஆணையர் பகலவன் ஆகியோர் அங்கு விரைந்து அவர்களிடம் சமாதானம் பேசினர்.

அப்போது, போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், இச் சம்பவத்தில் தொடர்புடைய அருளானந்தத்தைக் கைது செய்யும் வரையில் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனத் தெரிவித்தனர். இதனால் ஆற்காடு சாலையில் போக்குவரத்து ஸ்தம்பித்தது. இந்தப் போராட்டம் காரணமாக ஆற்காடு சாலையில் வந்த வாகனங்கள் வேறு சாலைகளில் திருப்பிவிடப்பட்டன. இரண்டு மணிநேரத்துக்கும் மேலாக போராட்டம் நீடித்தது.

போராட்டக்காரர்களுடன் சென்னை பெருநகரக் காவல் ஆணையர் எஸ்.ஜார்ஜ் பேச்சுவார்த்தை நடத்த வருவதால், போராட்டத்தைக் கைவிடுமாறு போலீஸ் அதிகாரிகள் கேட்டுக்கொண்டனர்.

இதைத் தொடர்ந்து, சாலையில் இருந்த பெற்றோர்கள், அங்கிருந்து பள்ளிக்கு வந்தனர். அதன் பின்னர், அந்தச் சாலையில் வாகனப் போக்குவரத்து இயல்பு நிலைக்குத் திரும்பியது.

ஆணையர் பேச்சுவர்த்தை: இதற்கிடையே, லயோலா பள்ளிக்கு வந்த ஆணையர் ஜார்ஜ், பள்ளி நிர்வாகிகளிடம் பேசினார். அப்போது நடந்த சம்பவம் முழுவதையும் கேட்டுத் தெரிந்துக் கொண்டார். பின்னர், பள்ளியை விட்டு வெளியே வந்த ஜார்ஜ், அங்கு கூடியிருந்த மாணவர்களின் பெற்றோர்களிடம் பேசினார்.

19 பேர் கைது: இச் சம்பவம் தொடர்பாக சிவா, வரதராஜ், செல்வக்குமார், கோபால் உள்ளிட்ட 19 பேரை கைது செய்தனர். மாணவரின் தந்தை அருளானந்தத்தைக் கைது செய்ய தனிப்படை அமைக்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.



சிபிசிஐடி போலீஸ் விசாரணை தேவை



பள்ளிக்குள் புகுந்து உடற்கல்வி ஆசிரியரைத் தாக்கிய சம்பவம் குறித்து சிபிசிஐடி போலீஸ் விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள லயோலா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் தாளாளர் அருட்தந்தை எட்வர்ட் கோரிக்கை விடுத்தார்.

இதுதொடர்பாக நிருபர்களிடம் அவர் வெள்ளிக்கிழமை கூறியது:

எங்களது பள்ளியில் 8-ஆம் வகுப்பு "அ' பிரிவில் படிக்கும் மாணவர், விளையாட்டுப் பிரிவு பாடவேளையில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டார். மாணவர்கள் ஒழுங்காகச் செல்வதற்காக ஆசிரியர் விசிலடித்தபோது, அந்த மாணவரும் விசிலடித்துள்ளார். இதை சம்பந்தப்பட்ட ஆசிரியர் பாஸ்கர் கண்டித்தார். பிறகு, மாதாந்திரத் தேர்வு நடைபெற்றது. அந்தத் தேர்வை எழுதி முடித்த பிறகு, உணவு இடைவேளையில் வயிற்றுவலி என மாணவர் தெரிவிக்கவே, இதுதொடர்பாக அவரின் பெற்றோருக்குத் தகவல் அளிக்கப்பட்டது.

அவரது தாயார் வந்து மாணவரை அழைத்துச் சென்றார். அவரது தாயாருடன் அந்த மாணவர் நடந்து சென்றார். 10 நிமிஷங்களுக்குப் பிறகு ஒரு கும்பல் பள்ளிக்குள் அத்துமீறி நுழைந்து உடற்கல்வி ஆசிரியர் பாஸ்கர் யார் என விசாரித்தது.

அந்தக் கும்பல் ஆசிரியர் பாஸ்கரைத் தாக்கியது. சம்பந்தப்பட்ட மாணவர் தந்தையின் நிறுவனத்தைச் சேர்ந்த அவர்கள், ஆசிரியரை ஒரு அறைக்குள் தள்ளி தாக்கினர். இதில் அவரது தலையில் காயம் ஏற்பட்டது. இச் சம்பவம் தொடர்பாக, காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தோம். ஆனால், முதல் தகவல் அறிக்கையைப் பதிவு செய்வதில் காலதாமதம் ஏற்பட்டது.

பள்ளிக்குள் புகுந்து ஆசிரியர் தாக்கப்பட்ட சம்பவம் எங்களது பள்ளிக்கு மட்டுமில்லாமல், அனைத்துப் பள்ளிகளுக்கும் அச்சத்தை ஏற்படுத்துவதாக உள்ளது. மாணவர்களின் எதிர்காலத்தை உருவாக்கும் இடமாக உள்ள பள்ளி வளாகத்துக்குள் நடைபெற்ற இந்தச் சம்பவத்தால் ஆசிரியர்களும் அச்சத்தில் உள்ளனர் என்றார்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive