அரசு உதவிப்பெறும் துவக்கப் பள்ளிக்கு, புதியதாக ஆசிரியர் நியமனம்
செய்ததில், ஊழல் நடந்ததாக எழுந்த புகார் மீது, லஞ்ச ஒழிப்பு போலீசார்
விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில், அரசு உதவிப்பெறும் பள்ளிகளில், அரசு பள்ளியை போலவே, மாணவ,
மாணவியருக்கு நலத்திட்டம், ஆசிரியருக்கு சம்பளம் உள்ளிட்டவை
வழங்கப்படுகின்றன. நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலம் அடுத்த காந்திபுரம்
பகுதியில் அரசு உதவிப்பெறும் துவக்கப்பள்ளி மீது பல்வேறு குற்றச்சாட்டுகள்
கூறப்பட்டுள்ளன. இந்த பள்ளியில், 80க்கும் குறைவான மாணவர்களே
படிக்கின்றனர். பள்ளியில், ஒரு தலைமையாசிரியர், நான்கு ஆசிரியர்கள்
பணியாற்றி வருகின்றனர். ஒவ்வொரு ஆண்டும் பதிவு புதுப்பிக்க வேண்டும். இந்த
ஆண்டு கட்டட உறுதிச்சான்று, கட்டட உரிம சான்று, சுகாதார சான்று, தீயணைப்பு
சான்று பெறவில்லை. கடந்த, ஐந்தாண்டுக்கு முன், ஒரு உபரி இடைநிலை ஆசிரியரை
நியமனம் செய்தனர். அந்த ஆசிரியர், தகுதி தேர்வு மூலம் தேர்ச்சி பெறாதவர்.
இதற்கான ஒப்புதல் பெற, அப்போது இருந்த மாவட்ட கல்வி அலுவலரிடம் அனுப்பிய,
'பைல்' திருப்பி அனுப்பப்பட்டது. ஆனால், சம்பந்தப்பட்ட உபரி இடைநிலை
ஆசிரியருக்கு, டி.ஆர்.பி., விதிமுறையை மீறி, தற்போது பணி நியமனம்
வழங்கப்பட்டுள்ளது. இதற்காக, பல லட்சம் ரூபாய் லஞ்சமாக,வழங்கப்பட்டுள்ளதாக
புகார் எழுந்துள்ளது. முறையற்ற பணி நியமனம் தொடர்பாக, லஞ்ச ஒழிப்பு
போலீசார் விசாரித்து வருகின்றனர்.
நாமக்கல் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் பாபு கூறியதாவது: சம்பந்தப்பட்ட
பள்ளியின் உபரி ஆசிரியர் நியமனம், விதிமுறைக்கு உட்பட்டு நடந்தது. இந்த
அலுவலகத்தில் பணியாற்றிய உதவியாளர் ஒருவர், தற்போது வேறு மாவட்டத்திற்கு
மாற்றலாகி சென்று, அங்கிருந்து, 'மொட்டை பெட்டிஷன்' போட்டு பிரச்னை செய்து
வருகிறார். நியமனத்தில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை. இவ்வாறு, அவர்
கூறினார். ஆசிரியர் நியமனத்தில் விதிமீறல் மற்றும் லஞ்சம் பெற்றது தொடர்பான
புகார் மீது ஆரம்பகட்ட விசாரணை நடந்து வருவதாக, லஞ்ச ஒழிப்பு மற்றும்
ஊழல்தடுப்பு பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பூபதிராஜன் தெரிவித்தார்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...