ஈசலின் ஆயுள் ஒரு நாள்தான்' என்பது
கிராமத்தினரின் பரவலான நம்பிக்கை. ஈசலைப் பார்க்க வாய்ப்பில்லாத நகரத்து
மக்களும் அதுதான் உண்மை என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனர். சமூக
வலைத்தளங்களில் இந்த மூடநம்பிக்கை தீயாகப் பரவிக் கொண்டிருக்கிறது.
மழைக்காலம்தானே, ஈசல்களின் காலம். ஈசல்கள்
பெருகும் இந்த நேரத்தில் மதுரை அமெரிக்கன் கல்லூரி விலங்கியல் துறை இணைப்
பேராசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மதுரை கிளைத் தலைவருமான
ப.குமாரசாமி, ஈசலைப் பற்றிச் சொல்லும் அறிவியல் உண்மைகள், பெரும்
ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன.
“கறையான் குடும்பத்து உறுப்பினர்தான் ஈசல்.
கறையான் புற்றில் இருந்து ஈசல்கள் வெளிப்படுவதைப் பார்த்திருக்கலாம்.
ஆரம்பத்தில், ஈசலை (Winged white ants) இறக்கை உள்ள வெள்ளை எறும்பு என்று
ஆங்கிலத்தில் வகைப்படுத்தினார்கள். ஆனால், கறையான் எறும்பு இனத்தைச்
சேர்ந்தது அல்ல. ஆறு கால்களைக் கொண்ட பூச்சியினத்தைச் சேர்ந்தவை என்று
கண்டறியப்பட்டது.
சமுதாயப் பூச்சி
கறையான், கூட்டமாக வாழும் சமுதாயப் பூச்சி வகையைச் சேர்ந்தது. ஒரு புற்றில் ஆயிரம் முதல் 5 லட்சம் கறையான்கள்கூட இருக்கலாம்.
தேனீக்களில் உள்ளது போலவே கறையான்களிலும் ராணி,
ஆண், சிப்பாய், வேலைக்காரர்கள் என்று 4 வகை உறுப்பினர்கள் உண்டு. ஒரு
நாளைக்குச் சுமார் 2 ஆயிரம் முட்டைகள் வரை இடும் திறன் பெற்றவை ராணிக்
கறையான்கள். 4 வகைக் கறையான்களுக்கும் இதுவே தாய். ராணியைக் கர்ப்பமடையச்
செய்வதே ஆண் கறையான்களின் பணி. புற்றை எதிரிகளிடம் இருந்து பாதுகாக்கும்
பணியைச் சிப்பாய்க் கறையான்களும், உணவு சேகரிப்பு, புற்று கட்டுதல் போன்ற
வேலைகளை வேலைக்காரக் கறையான்களும் செய்கின்றன.
தனி ஏற்பாடு
ஒரே புற்றில் கறையான்கள் கட்டுக்கடங்காமல்
பெருகினால் இடநெருக்கடி ஏற்படும். அருகருகில் வேறு புற்றுகளைத்
தோற்றுவித்தாலும், உணவுப் போட்டி ஏற்பட்டுவிடும். இதைத் தவிர்ப்பதற்காக
ராணிக் கறையான்கள் சில சிறப்பான முட்டைகளை இடுகின்றன. அதில் இருந்து
வெளிவருபவைதான் ஈசல்கள். இலவம் பஞ்சு மரமும் எருக்கஞ்செடியும் பஞ்சைப்
பறக்கவிட்டு, தங்கள் விதைகளைப் பரப்புவதற்கு ஒப்பானதுதான் ஈசல் பறப்பதும்.
ராணி ஈசல் இடுகிற முட்டையில் இருந்து வெளியே
வந்த ஈசல் குஞ்சுகள் வெள்ளை நிறத்தில், நான்கு இறக்கைகளுடன் காணப்படும்.
அவற்றுக்கு வேலைக்கார கறையான்கள்தான் உணவு கொடுத்துப் பராமரிக்கின்றன.
வளர்ந்ததும், ஈசல்கள் புற்றில் இருந்து வெளியேறத் தயாராக இருக்கும்.
மரிப்பா, பிறப்பா?
மழைக்காலம் தொடங்கியதும், (தமிழகத்தைப்
பொறுத்தவரை அக்டோபர், நவம்பர் மாதங்கள்) ஈசல்கள் போட்டி போட்டுக்கொண்டு
வெளியேறும். ஈசல்களுக்கு 4 இறக்கைகள் இருந்தாலும்கூட அவற்றால் காற்றை
எதிர்த்துப் பறக்க முடியாது. அதனால், காற்றில்லாத அமைதியான நேரத்தையே, அவை
பறக்கத் தேர்ந்தெடுக்கின்றன.
புற்றில் இருந்து வெளிவருகிற ஈசல்களில் சுமார்
80 சதவீதம்வரை பறவைகள், தவளைகள், பல்லி, ஓணான், உடும்பு போன்றவற்றுக்கு
இரையாகிவிடுகின்றன. எஞ்சியவை இறகுகள் உதிர்ந்து கீழே விழுந்ததும், ஜோடி
ஜோடியாக ஈர மண்ணைத் துளைத்துக்கொண்டு உள்ளே புகுகின்றன. இப்படி இறகு
உதிர்ந்து விழுகிற ஈசல்களைப் பார்த்துத்தான், அவற்றுக்கு அற்ப ஆயுசு என்ற
தவறான கருத்து பரவியிருக்கலாம். இவ்வாறு மண்ணுக்குள் புகுந்த ஈசல்கள் புதிய
கறையான் காலனியை உருவாக்குகின்றன” என்கிறார்.
எது உண்மை?
அதெல்லாம் சரி, ஈசலின் உண்மையான ஆயுள்காலம்
தான் என்ன? “கறையான்களில் 4 உறுப்பினர் வகைகளுக்கும் வெவ்வேறு ஆயுள்காலம்
உண்டு. இதன்படி, ஈசலின் (இதுவும் ராணி கறையான்தான்) ஆயுள்காலம் 12 முதல் 20
ஆண்டுகள். நான்கு வகைகளில் வேலைக்காரக் கறையான்கள்தான் குறைந்த ஆயுள்காலம்
கொண்டவை. அவை 4 முதல் 5 ஆண்டுகள்வரை வாழ்கின்றன
இன்னொரு முக்கியமான விஷயம். விவசாயத்தில்
மனிதர்களுக்கு முன்னோடி இந்தக் கறையான்கள்தான். தாவரங்களில் உள்ள
செல்லுலோஸ்தான் கறையான்களின் உணவு. ஆனால், அவற்றை ஜீரணிக்கும் சக்தி
இவற்றுக்குக் கிடையாது என்பதால், சேகரித்துவைத்த மரத்துண்டுகளின் மீது ஒரு
வகைக் காளான்களைப் பயிரிடுகின்றன. காளான்கள் மிருதுவாக்கிய உணவையே
கறையான்கள் உண்கின்றன” என்கிறார்.
இனிமேல் ஈசல் ஒரே நாளில் இறந்து போகும் என்று யாராவது சொன்னால், அவர்களிடம் உண்மையைச் சொல்லுங்கள்.
பேராசிரியர் குமாரசாமி
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...