சமீபத்தில் நண்பரின்
வீட்டிற்கு சென்றேன். இலக்கியம் பற்றி பேசினோம். அப்போது அவரது மகனை
கவனித்தேன். அவன் வீட்டுப் பாடம் எழுதுவது, எழுந்து போவது, மறுபடியும்
அமர்வது என இயந்திரமயமாகவே அவனது செயல்பாடுகள் இருந்தன. அச்சிறுவனை
இடையிடையே நண்பர் அழைத்தும் 'ம்...ம்.....' என்று சுவாரஸ்யமே இல்லாமல் தான்
பதில் அளித்தான்.
இன்றைய
குழந்தைகளிடம் கலகலப்பு இல்லை. பாரதியார் "ஓடி விளையாடு பாப்பா" என்று
சொன்னார். ஆனால், இன்றைய நகரங்களில் குடியிருப்புகள் எல்லாம் ஒரு சென்ட்,
இரண்டு சென்ட்களில் கட்டினால் விளையாடுவது எப்படி? குழந்தைகள் இயல்பான
நிலையிலிருந்து மாறி இயந்திரத்தனத்திற்கு அடிமையாகிவிட்டனர். 'சந்தோஷத்தை
காலணியை போல் கழற்றி விட்டு, தூணில் கட்டிப் போட்ட நாய் குட்டியாய்
நிற்கின்றனர்'.
மதிப்பெண் வியாபாரம்:
கல்வி என்ற பெயரில்
பொதி சுமக்கும் கழுதையை போல் மாணவர்கள் புத்தகங்களை சுமக்கின்றனர். இன்றைய
கல்வி குழந்தைகளை கசக்கி பிழிவதாகவே உள்ளது. வெறும் மதிப்பெண் வாங்கும்
வியாபாரமாக உள்ளதே தவிர ஒழுக்கம் சார்ந்ததாக, பண்பாடு சார்ந்ததாக இல்லை.
ஓடினால் தான் எல்லையை தொட முடியும். உமி இருந்தால் தான் காற்றில் தூவ
முடியும். உலை கொதித்தால்தான் அரிசியை சாதமாக்க முடியும். இதில், எது
மாறுபட்டாலும் முடிவு முரண்படும். வாழ்க்கைக்கு ஏற்ற கல்வியை ஆசிரியர்கள்
பாடத்தோடு சேர்ந்து தருவதில்லை. சமைப்பது எப்படி? என்ற புத்தகத்தை
படித்துவிட்டு சமைப்பது நளபாக சாதனையல்ல. அனுபவ பூர்வமாக உணர்ந்து
ருசியறிந்து சமைக்க வேண்டும். அறிவாளியை மேலும் அறிவாளியாக்குவது கல்வி
அல்ல. அவனை ஒழுக்கமாக ஆக்குவதே கல்வி. மாணவர்கள் கேள்வி திறனை வளர்க்க
வேண்டும். பிறரின் பதிலை கேட்டு பிரபஞ்ச அறிவை பெறுவது அல்ல கல்வி. அவனே
பதில்களை தயார் செய்வதுதான் வளர்ச்சி. மாணவர்களை உருப்பட மாட்டான்....
படிக்க மாட்டான்... என்ற எதிர்மறை வார்த்தைகளை பேசி அவர்களின் கற்றல்
ஆர்வத்தை முளையிலேயே கிள்ளி எறியக் கூடாது. கல்விச் சாலைகளில் மாணவர்களை
காப்பீட்டு முறைகளாக இல்லாமல் கண்ணியமான முறையில் நடத்தினால்
எதிர்காலத்தில் நல்ல இளைஞர் சமுதாயம் உருவாகும்.
ஆசிரியரின் சாதனை என்ன?
ஆசிரியர்கள் கனிவு
மிகுந்த கல்வியோடு உளவியல் ரீதியான போதனையை கையாள வேண்டும். பிரம்பை கையில்
வைத்துக்கொண்டு மிரட்டும் விழிகளோடு அகிம்சையை பற்றி பாடம் நடத்தினால்
அவனுக்கு என்ன புரியும்? உயர்ந்த வாழ்க்கை தரத்திற்கான போட்டிதான் கல்வி.
இப்படி கலந்துகொள்ளும் மாணவர்களுக்கு ஆசிரியர் அளிப்பது என்ன? ஓர்
ஆசிரியரின் சாதனை என்பது தான் நல்ல ஆசிரியர் என்று பெயர் எடுப்பது அல்ல.
ஒரு குடிமகனை உருவாக்கினோம் என்ற பெருமையை பெற வேண்டும். இங்கு நடப்பது
என்ன? களைகளை விட்டுவிட்டு பயிர்களை பிடுங்கி விடுகிறோம். மதிப்பெண்களுக்கு
மட்டும் மாணவர்களை அணுகாமல், அவனுக்குள் மனித சிந்தனையை உருவாக்க
வேண்டும். போரை பற்றி கட்டுரை எழுத சொன்னால் ஆயிரம் பக்கம் எழுதலாம்.
ஆனால், அன்பை பற்றி கட்டுரை எழுத சொன்னால் ஐந்து பக்கம் கூட எழுதுவது
அரிது. ஆகையால் அன்பும், பண்பும் சார்ந்த கல்வி அவசியம். மாணவர்களை பந்தய
குதிரைகளாக மாற்ற விரும்பினால், அவனது கனவு நொண்டிக் குதிரையாகிவிடும்.
அறியாமை பசி தீர்க்க:
'இனியன
நினையாதார்க்கு இன்னதான்' என்று அப்பர் அடிகள் சொன்னதுபோல் மாணவர்களிடம்
இனியதையே பேசுவோம். 'வயிற்றுப் பசிக்கு உணவு அளிப்பவனே பசிப்பிணி
மருத்துவன்' என்று புறநானூறு கூறுகிறது. ஆனால், அறியாமை பசி தீர்க்கும்
ஆசிரியர்களை உலகம் அதைவிட சிறந்ததாக போற்றும். வள்ளுவர், 'கல்லாதவனை
கண்ணில்லாதவன்' என்று கூறினார். ஆனால் கல்வியை சரியான முறையில்
கொடுக்காதவரை நாம் என்னவென்று சொல்வது. குற்றம் களைவதாக எண்ணிக்கொண்டு
மாணவர்களின் குறைகளை சொல்லி சொல்லி அவனை குறையுள்ளவனாக மாற்றிவிடக்கூடாது.
கஷ்டப்பட்டு முன்னேறி சாதனை கண்டவர்களின் வாழ்க்கை வரலாறுகளை சொல்லி
மாணவர்களுக்குள் தன்னம்பிக்கையை வளர்க்க வேண்டும். அவர்களுக்குள் புதைந்து
கிடக்கும் திறமைகளை வெளிக்கொணர வேண்டும். 'நமக்காகத்தான் ஆசிரியர்' என்ற
உணர்வை மாணவர்கள் புரியும்படி ஆசிரியர்கள் நடந்துகொள்ள வேண்டும்.
உடல் தூய்மை விழிப்புணர்வு:
உடலை தூய்மையாக
வைத்துக்கொள்வது பற்றி மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கவேண்டும். மற்றும்
உடலினை உறுதி செய்ய உடற்பயிற்சி மேற்கொள்ளும்படி செய்து உடலுக்கும்
மனதுக்கும் உரமூட்டுதல் வேண்டும். இப்படி செய்யும்பட்சத்தில் கல்வி என்பது
கஷ்டப்பட்டு தேடி எடுக்கும் புதையல் அல்ல. எளிதாக பறிக்கும் பூ என்ற
சுலபமான எண்ணம் மாணவர்களுக்கு வரும்.
- ஏ.எஸ்.எம். முனியாண்டி, தலைமையாசிரியர், அரசு உயர்நிலைப்பள்ளி, சுக்கிரவார்பட்டி, விருதுநகர் மாவட்டம் 98658 63671.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...